உயர்கல்வியை ஒரு அணுகக்கூடிய பொது நலனாக மாற்றுதல் - எஸ் ஆதிகேசவன்

 பிரதமரின் வித்யாலட்சுமி (PM-Vidyalaxmi) திட்டத்தின் கீழ், வங்கிகளுக்கான வட்டி மானியம் மற்றும் உத்தரவாத பாதுகாப்பு மூலம் திறமையான பணியாளர்களை உருவாக்க உதவ வேண்டும்.


பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம், இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் தகுதியுள்ள மாணவர்களுக்கான நிதித் தடைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அற்புதமான முயற்சியாகும். 2024-2025 நிதியாண்டுக்கான நிதி அமைச்சரின் நிதிநிலை அறிக்கை உரையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.  நிதி சேவையின் அமைப்புகள் மற்றும் முக்கிய வங்கிகளின் தலைவர்களுடனான விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த முயற்சியை ஒருமனதாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.


திட்டத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது. நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக எந்த ஒரு தகுதியான மாணவரும் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கிக் கடன் வழங்கும் பரந்த  முறையில் இவை கூடுதல் முயற்சியாகும். "உற்பத்தியல்லாத நோக்கங்களுக்காக" வழங்கப்படும் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளது. 1991 சீர்திருத்தங்களுக்கு முன்பு, வணிக வங்கிகளுக்கு வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் இரண்டும் அனுமதிக்கப்படவில்லை.


உயர்கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்த 2001-02ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் மாற்றம் தொடங்கியது. இந்த அனுமதி, ஆண்டு வருமானம் ₹4.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர், வட்டி மானியத்தில் கடன் வாங்குவதற்கு  வழிவகுத்தது. இருப்பினும் பிணையமில்லாத வரம்பு தொகை அப்போது ₹4 லட்சமாக இருந்தது.




முக்கிய அம்சங்கள்


பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் அறிமுகம், 3,600 கோடி ரூபாய் செலவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த முயற்சியானது உயர்கல்வியை பரவலாக அணுகக்கூடிய "பொது நலனாக" மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பின்வரும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது:


வட்டி மானியம்: 


தடைக் காலத்தில் ₹10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் உள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்கு இந்த மானியம் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உத்தரவாதக் பாதுகாப்பு: 


7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு, இந்தத் திட்டம் வங்கிகளுக்கு 75 சதவீத உத்தரவாத பாதுகாப்பை வழங்குகிறது. இது கல்விக் கடனுடன் தொடர்புடைய அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இந்தக் கடன்களை நீட்டிக்க வங்கிகளை ஊக்குவிக்கிறது.


டிஜிட்டல் வழங்கல்: 


தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (National Institutional Ranking Framework (NIRF)) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் உள்ள படிப்புகளுக்கான கடன்கள் பிணையில்லாமல் இருக்கும் மற்றும் தடையற்ற டிஜிட்டல் செயல்முறையை உறுதி செய்யும் வகையில் வித்யாலட்சுமி தளத்தின் மூலம் வழங்கப்படும்.


NIRF தரவரிசையின்படி, ஏறத்தாழ 860 உயர் கல்வி நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள மாணவர்களைக் குறிவைத்து, பிரதமரின் வித்யாலட்சுமி திட்டமானது மாநிலங்கள் முழுவதும் உள்ள அனைத்து புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியது.  தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக உள்ள திறமையான பணியாளர்களை உருவாக்கும் நாட்டின் இலக்குடன் இணைந்து, தொழில்நுட்ப படிப்புகளை ஆதரிப்பதில் முக்கியத்துவம் உள்ளது.


இந்தியாவில் கல்விக் கடன்கள் தொடங்கப்பட்டதில் இருந்து, 10-15 விழுக்காடு மாணவர்கள் இந்தக் கடன்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும், கிராமப்புற மக்களைவிட நகர்ப்புற ஏழைகள் அதிகம் பயனடைவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அணுகல் மற்றும் விழிப்புணர்வில் நகர்ப்புற சார்பு தெளிவாக இருந்தாலும், கடன் வாங்குபவர்களில் 35 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதாக பாலின தரவு காட்டுகிறது.


கல்விக்கான அதிகரித்த அரசாங்க ஆதரவின் நேர்மறையான தாக்கம் கடந்த கால அனுபவங்களில் தெளிவாகத் தெரிகிறது. இவை மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஜூன் 2024 நிலவரப்படி வங்கித் துறையில் தற்போதைய கல்விக் கடன் வெளிப்பாடு தோராயமாக ₹1.20 லட்சம் கோடியாக உள்ளது. கோவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில், இந்தப் பிரிவு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. 


மொத்த தனிநபர் கடன்களில் 2.6 சதவீதத்தை உள்ளடக்கிய கல்விக் கடன்கள் இருந்தபோதிலும், அவை மேக்ரோ பொருளாதார (macroeconomic) நிலைத்தன்மையில்  அபாயத்தை ஏற்படுத்தவில்லை. ஜூன் 2024 ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை இந்த வகையில் 3.6 சதவீத NPA (non-performing asset) விகிதத்தைக் குறிப்பிடுகிறது. இந்தியாவின் 7-8 சதவீத உள்நாட்டு வளர்ச்சியின் போக்கைக் கருத்தில் கொண்டு, கல்விக் கடன்கள் தொடர்பான அபாயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய கல்விக் கொள்கையானது தொழில்துறையின் தேவைகளுடன் கல்வி முடிவுகளை சீரமைப்பதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிக்கிறது. திறமையான தொழிலாளர் தேவை மற்றும் பொருளாதாரத்தில் மதிப்பு கூட்டப்பட்ட திறன் ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்கிறது.


 பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தை மேம்படுத்த, பொருளாதாரத்தில் தொழிலாளர் தேவை, குறிப்பாக தொழில்நுட்பத் துறைகளில் மற்றும் பாடநெறி சார்ந்த கடன் வரம்புகளை அமைக்கும் இலக்கு வழிமுறைகளை உருவாக்குவது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் குறிப்பிட்ட திறன் தேவைகளுடன் கல்வி நிதியுதவியை இணைப்பதன் மூலம், இந்தியா சிறந்த வேலை வாய்ப்புகளுடன் கூடிய பணியாளர்களை உருவாக்க முடியும். மேலும், இவை உள்ளடக்கிய, திறமையான மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவிற்கு வழி வகுக்கிறது.


எஸ் ஆதிகேசவன், வங்கி மற்றும் நிதி பற்றிய வர்ணனையாளர்.




Original article:

Share: