ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களை உள்ளடக்கிய பசுமைவரவுத் திட்ட தோட்டங்கள் ஒன்றிய அரசால் பெரிய ஊக்கத்தை பெறுகின்றன -ஜெயஸ்ரீ நந்தி

 2030-ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் பாழடைந்த நிலங்களை மீட்டெடுக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 22.5 மில்லியன் ஹெக்டேர்க்கும் அதிகமான மீட்சி அடையப்பட்டுள்ளது.


தொழிற்சாலைகள் மற்றும் பிற குழுக்களின் நிதி உதவியுடன் பாழடைந்த நிலங்களை மீட்டெடுப்பதை பசுமை வரவுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. செவ்வாயன்று ரியாத்தில் நடந்த பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா மாநாட்டின் (UN Convention to Combat Desertification (UNCCD)) COP16 மாநாட்டின் போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இதை விளக்கினார்.


2030-ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. இதுவரை, 22.5 மில்லியன் ஹெக்டேர்களுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளதாக யாதவ் கூறியுள்ளார். 2019-ஆம் ஆண்டில் UNCCD மாநாடு, COP14-ல் இந்தியாவின் தலைமையின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.


"இந்த திசையில் ஒரு முயற்சியாக, இந்தியா பசுமை வரவுத் திட்டத்தை (Green Credit Programme (GCP)) தொடங்கியுள்ளது.  இதன் மூலம் சிதைந்த நிலப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் நிதி ஆதரவுடன் மீட்டெடுக்கப்படுகின்றன. மேலும், அனைத்து மாநிலங்களிலும் பல துறைகளின் முயற்சிகளின் ஒருங்கிணைப்பின் மூலம் நாடளவில் செயல்படுத்தப்படும். இத்திட்டமானது, பாழ் நிலங்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கான நிலப்பரப்பு அடிப்படையிலான அணுகுமுறையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது" என்று யாதவ் மேலும் கூறினார்.


மேலும், "பாழடைந்த நிலங்களை அடையாளம் காண அரசாங்கங்களும் தொழில்துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதும், வளங்களைத் திரட்டுவதன் மூலம் நில மீட்பு மற்றும் வறட்சியைத் தாங்கும் இலக்குகளை அடைய ஒருவருக்கொருவர் பங்குதாரர்களாக இருப்பதும் மிக முக்கியமானது," என்று அவர் கூறினார்.


இத்திட்டத்தின் கீழ் 3409 ஹெக்டேரில் தோட்டம்/சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக, 48,074 ஹெக்டேர் பாழடைந்த நிலங்களைத் திரட்டி மொத்தம் 1900 நிலப் பரப்புகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றில் 26,542 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 1020 நிலங்கள், பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் பாழடைந்த நிலத்தை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. .


GCP நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. பல "பாழடைந்த நிலங்கள்" ஏற்கனவே வளமான பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த நிலங்களைப் பாதுகாப்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு உள்ளூர் சமூகங்கள் தங்கள் உரிமைகளை இழக்கக்கூடும் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள்.


இதுவரை, தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), தனியார் துறை அலகுகள், நிறுவனங்கள் மற்றும் 40 பொதுத்துறை நிறுவனங்கள் (public sector undertakings (PSUs)) உட்பட மொத்தம் 384 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளன என்று சிங் மேலும் கூறினார்.


அமைச்சகத்தின் பிப்ரவரி 22 அறிவிப்பு, மரத்தோட்டங்களுக்கான பசுமை வரவுகளை எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி விளக்கியது. ஒரு ஹெக்டேருக்கு குறைந்தது 1,100 மரங்கள் இருந்தால், ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பசுமை வரவுகள் வழங்கப்படும்.


அவ்வாறு உருவாக்கப்படும் பசுமை வரவுகள், இந்தியாவின் வனப் பாதுகாப்புச் சட்டமான வான் (Sanrakshan Evam Samvardhan) ஆதிநியம், 1980ன் கீழ் வனம் அல்லாத நோக்கங்களுக்காக வன நிலத்தைத் திசைதிருப்பும் பட்சத்தில், இதை ஈடுசெய்யும் காடு வளர்ப்புக்கு இணங்குவதற்கும் பரிமாறிக்கொள்ளலாம். இந்த வரவுகள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் குறிகாட்டிகள் அல்லது பெருநிறுவன சமூகப் பொறுப்பின் கீழ் அறிக்கையிடவும் பயன்படுத்தப்படலாம்.


பெருநிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பாழடைந்த நிலத்தில் மரங்களை நடலாம். இதில் திறந்தவெளி காடுகள், புதர்கள், தரிசு நிலங்கள் மற்றும் நீர்நிலை நீர்பிடிப்பு பகுதிகள் அடங்கும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிப்ரவரி அறிவிப்பின்படி, இந்த நிலங்கள் மாநில வனத் துறைகளால் அடையாளம் காணப்படுகின்றன.


வன நிலத்தை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது  என்பது இதில் உள்ள முக்கிய சவால் ஆகும். இழப்பீட்டுத் தோட்டங்களுக்கு நிலம் இல்லாததும் முக்கியமான காரணமாகும். காடு வளர்ப்புக்கு, வனப்பகுதிக்கு சமமான வனம் அல்லாத நிலத்தில் இருமடங்கு அளவுள்ள மரங்களை பாழடைந்த வன நிலத்தில் நடவு செய்ய வேண்டும். பசுமை வரவுத் திட்டம் இத்தகைய நிலத்தைக் கண்டறியும் செயல்முறையை எளிதாக்குவதன் மூலமும், காடு வளர்ப்பை தொடர்வதன்  மூலமும்  ஏற்படும் சவாலை சமாளிக்க உதவுகிறது.


சட்டக் கொள்கைக்கான விதி மையத்தைச் (Vidhi Centre for Legal Policy) சேர்ந்த தேபாடித்யோ சின்ஹா, பிப்ரவரியில் MoEFCC-ன் அறிவிப்புக்குப் பிறகு விதியை விமர்சித்தார். இது அறிவியலற்றது என்றும், காடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார். திறந்தவெளி காடுகள், புதர்க்காடுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் "சீரழிக்கப்பட்டவை" என அடையாளம் காண்பது தெளிவானதாக இல்லை. இந்த பகுதிகளில் பெரிய அளவிலான தோட்டங்களை ஊக்குவிப்பது மண்ணின் தரத்திற்கு தீங்கு விளைவிக்கும், உள்ளூர் பல்லுயிர்களை அழிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை சேதப்படுத்தும்.




Original article:

Share: