உலகளாவிய ஒருமித்த கருத்தும், நிதியுதவி பெறுவதும் கடினமானதாக இருந்தாலும், உள்ளூர் மற்றும் தேசிய முயற்சிகள் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.
பல மணிநேர தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) 29வது COP மாநாடு, 2035-ஆம் ஆண்டுக்குள் காலநிலை நிதிக்காக, வளர்ந்த நாடுகளுக்கு ஆண்டுக்கு $300 பில்லியன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இது வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியை விட குறைவாக உள்ளது. இது தற்போதைய உலகளாவிய காலநிலை தொடர்பான பிரச்சனையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
ஒருமித்த கருத்து இல்லை
வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியளிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு உதவுவது, புதை படிம எரிபொருட்களை படிப்படியாக வெளியேற்றுவது மற்றும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை விரைவாக அடைவது போன்ற அவர்களின் சொந்த முயற்சிகளை அதிகரிப்பது இதில் அடங்கும். இருப்பினும், இந்த யோசனையை செயலாக மாற்றுவது சவாலானது. இது COP மாநாடு கூட்டங்களில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. வளர்ந்த நாடுகள் தங்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் புதைபடிவ எரிபொருட்களையே நம்பியுள்ளன மற்றும் நிகர பூஜ்ஜிய இலக்குகளை தாமதப்படுத்துகின்றன.
இது காலநிலை தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதில் உள்ள பல சவால்கள் இந்த உடன்பாட்டை எட்டுவதை கடினமாக்குகின்றன. புதைபடிவ எரிபொருள் நாடுகளின் வலுவான செல்வாக்கு, குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வளர்ந்த நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை பெரிதும் நம்பியுள்ளன. பருவநிலை மாற்றத்தை மறுக்கும் தலைவர்களின் மறுதேர்தலும் தடைகளை உருவாக்குகிறது. காலநிலை மாற்றம் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. வளரும் நாடுகள் மற்ற நாடுகளை விட அதிகமாக பாதிக்கப்படும். இந்த காரணிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தை அடைவதை கடினமாக்குகின்றன.
உலகளாவிய பேச்சுவார்த்தைகள் பயனற்றவை அல்ல. வெற்றிகள் அரிதாக இருந்தாலும் அவை மிக முக்கியமானவை. உதாரணமாக, 1989-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறை (Montreal Protocol) ஓசோன் படலத்தைப் பாதுகாக்க உதவியது. குளிரூட்டியில் பயன்படுத்தப்படும் குளோரோ புளோரோ கார்பன்கள் (chlorofluorocarbons) போன்ற சில இரசாயனங்களையும் இது நீக்கியுள்ளது. இந்த இரசாயனங்கள் ஓசோன் படலத்தின் சிதைவுக்கு முக்கிய காரணமாகும். 2005-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த கியோட்டோ நெறிமுறை (Kyoto Protocol), பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முதல் உலகளாவிய நெறிமுறையாகும். 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த ஒரு இலக்கை நிர்ணயித்தது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேசிய இலக்குகள் புதுப்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிளாஸ்கோ காலநிலை ஒப்பந்தம் (Glasgow Climate Pact) இழப்பு மற்றும் சேத நிதியை அறிமுகப்படுத்தியது. பின்னர் வெவ்வேறு நாடுகளும் தங்கள் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை அறிவித்தன. இவை 29வது COP மாநாடு கூட்டங்களின் முக்கியமான சாதனையாகும்.
பனிப்பாறைகள் விரைவாக உருகும் நிலையில் உள்ளன. ஆனால், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மெதுவாக உள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை இன்னும் சில ஆண்டுகளில் தாண்டிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், வேறு ஒரு ஆய்வு 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை ஏற்கனவே தாண்டியிருக்கலாம் என்று கூறுகிறது. இந்த வரம்பை மீறுவது இயற்கை பேரழிவுகள் மற்றும் வெப்ப அழுத்தம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவியல் சான்றுகள் எச்சரிக்கின்றன. இந்த சிக்கல்கள் ஏற்கனவே உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சில மாற்றங்கள் கணிக்க முடியாதவை மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.. கூடுதலாக, உலகளாவிய நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நாம் அடைந்த பிறகும் பூமியின் காலநிலை மாறிக்கொண்டே இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், நிகர பூஜ்ஜியத்தை அடைய நீண்ட காலம் ஆகும். இதனால், காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவின் முயற்சிகள்
உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5-2 டிகிரி செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவதா அல்லது போர்களைத் தொடங்கும் அரசியல் ஆக்கிரமிப்பாளர்களை கண்டிப்பதா என்பதில் விரைவாகச் செயல்பட வேண்டும். ஆனால், தற்போதைய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அனைத்தும் தேவையை விட மிக மெதுவாக நடக்கிறது. எனவே, இந்த வெவ்வேறு செயல் விகிதங்களை நாம் எவ்வாறு சரிசெய்யலாம்? தேசிய மற்றும் துணை தேசிய அளவிலான முயற்சிகளில் கவனம் செலுத்துவதே தீர்வாக இருக்கும். இந்தியாவில், சர்வதேச காலநிலை நிதி குறைவாக இருக்கும் என்று கருதி, தூய எரிசக்தி மாற்றத்திற்காக பல கொள்கைகள் மற்றும் நிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல சவால்களைக் கொண்ட வளரும் நாடாக, இந்தியா முக்கியமாக காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க இணை பலன்கள் அணுகுமுறையைப் (co-benefits approach) பயன்படுத்துகிறது. உதாரணமாக, பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) வீடுகளுக்கு கூரை சோலார் பேனல்களை நிறுவ மானியங்களை வழங்குகிறது. இது ஆற்றல் வறுமையை நிவர்த்தி செய்யவும் மற்றும் ஆற்றல் அணுகலை மேம்படுத்தவும் உதவும்.
பிரதம மந்திரியின் புதுமையான வாகன மேம்பாட்டுத் திட்டமானது (PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE)) முயற்சியானது பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் லாரிகள் அடங்கும். முன்முயற்சி கொள்முதல் மானியங்களை வழங்குகிறது மற்றும் சார்ஜிங் உட்கட்டமைப்பை ஆதரிக்கிறது. இந்த முயற்சிகள் சுத்தமான காற்று மற்றும் சுத்தமான போக்குவரத்துக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
செயல்திறன், அடைதல் மற்றும் வர்த்தகத் திட்டம், விரைவில் இந்திய கார்பன் சந்தையால் மாற்றப்படும். ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் முதலீடுகளைக் கொண்டுவர உதவுகிறது. பாரிஸ் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, அதன் உமிழ்வு தீவிரத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யூனிட்டுக்கு CO2 உமிழ்வை) குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. உமிழ்வைக் குறைப்பதுடன், காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களிலும் மற்றும் தகவமைப்பு உத்திகளிலும் கவனம் செலுத்துகின்றன. விவசாயம், வனம், நீர்வளம் மற்றும் பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தி, பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த உத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ஒப்பந்தம் மற்றும் நிதியுதவி இன்னும் கடினமாக இருந்தாலும், உள்ளூர் மற்றும் தேசிய நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. COP கூட்டமைப்பு வெறும் விவாதங்களில் கவனம் செலுத்தாமல், நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். லைஃப் திட்டத்தின் (Mission LiFE) மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கும், கவனத்துடன் நுகர்வுகளைப் பின்பற்றுவதற்கும், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்கும், தீவிர வெப்பத்தைக் கையாள பயனுள்ள திட்டங்களை உருவாக்குவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் தேவை.
ரம்யா நடராஜன், ஆராய்ச்சி அடிப்படையிலான சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி. ஜெய் அசுண்டி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.