முக்கிய அம்சங்கள் :
1. NEET-UG போன்ற தேர்வுத் தாள் கசிவு காரணமாக தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) விமர்சனங்களை எதிர்கொண்டதை அடுத்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை அக்டோபர் மாதம் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
2. இந்தத் தேர்வுகளை நடத்துவதற்கு ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. மேலும், இது மாவட்ட ஆட்சியர்கள் (district collectors) உட்பட முழு மாநில நிர்வாக அமைப்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் செயல்முறையைப் போலவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
3. ஒவ்வொரு சோதனை மையமும் தேசிய தேர்வு முகமையில் (National Testing Agency (NTA)) இருந்து ஒரு “தலைமை அதிகாரி” (presiding officer) இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. மேலும், வாக்குச் சாவடிகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதைப் போலவே, தேர்வுக்கான செயல்முறையும் முன் வரையறுக்கப்பட்ட நெறிமுறையைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் பொறுப்பை இந்த அதிகாரிக்கு வழங்குவார். தேசிய தேர்வு முகமை (NTA) என்பது அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவதற்கு பொறுப்பான ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.
4. திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்கு முன்பு, தேர்வு மையங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முன்னிலையில் சீல் (sealing) வைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் முன்னிலையில், தேர்வுக்காக சீல் திறக்கப்படும் வரை இந்த மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.
5. இந்த செயல்முறை தேர்தல் நடைமுறைக்கு ஒத்ததாகும். தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் வலுவான அறைகள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்படும். பின்னர், தேர்தல் வாக்குச்சீட்டு எண்ணும் நாளில் சீல் அவிழ்க்கப்படும் வரை காவலின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
7. பாதுகாப்பான சோதனை நிர்வாகத்தை உறுதிப்படுத்த, குழு மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்க பரிந்துரைத்துள்ளது. இந்தக் குழுக்கள் எதை உள்ளடக்கியிருக்க வேண்டும் மற்றும் அவற்றின் பங்கு என்ன என்பதையும் பரிந்துரைத்துள்ளது.
8. இதுவரை, தேசிய தேர்வு முகமையானது (NTA) அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE)-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பில் வழங்கும் தேர்வுகளைக் கையாளும் தனியார் மையங்களில் தேர்வுகளை நடத்தியது. ஜேஇஇ முதன்மைத் தேர்வு போன்ற கணினி அடிப்படையிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு TCS iON-ஐச் சார்ந்துள்ளது.
9. கூடுதலாக, வேட்பாளர்களை சரிபார்க்கவும், பதிவுசெய்யப்பட்ட நபர்கள் மட்டுமே சோதனைகளுக்கு வர முடியும் என்பதை உறுதி செய்யவும், டிஜியாத்ரா மாதிரியை (DigiYatra model) முன்னோட்டமாகக் கொண்ட "டிஜி-தேர்வு" (digi-exam) முறையை குழு பரிந்துரைத்துள்ளது. விண்ணப்பப் படிவத்தில் உள்ள விண்ணப்பதாரர்களை அடையாளம் காணும் முதன்மை தரவு 'ஒரு முறை நுழைவு' (one-time entry) என்று பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சோதனை தொடங்குவதற்கு முன்பு பயோமெட்ரிக் தரவு சோதனை மையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இது பரிந்துரைக்கிறது.
10. தேர்வு செயல்முறைக்கான சீர்திருத்தங்களை பரிந்துரைக்க நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான தரவு பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (NTA) கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
1. 2025 முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும். இது ஆட்சேர்ப்புத் தேர்வுகளைக் கையாளாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்காலத்தில் கணினி தகவமைப்புப் பயிற்சி (computer adaptive tests), தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு மாற அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
2. தேசிய தேர்வு முகமை (NTA) 2017-ம் ஆண்டில் ஒரு முதன்மையான, நிபுணத்துவ, தன்னாட்சி மற்றும் சுய-நிலையான தேர்வு அமைப்பாக நிறுவப்பட்டது. இது உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை / உதவித்தொகைக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.
3. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுப்பது) சட்டம் (Public Examinations (Prevention of Unfair Means) Act), 2024-ம் ஆண்டுக்கு ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் அதை சட்டமாக்கினார். இது பிப்ரவரி 6 அன்று மக்களவையிலும், பிப்ரவரி 9 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
4. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)), பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission (SSC)), இரயில்வே, வங்கி ஆட்சேர்ப்பு தேர்வுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA) ஆகியவற்றால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைத் தடுப்பதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. மோசடியைத் தடுக்க குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மோசடி தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும் என்று குழு பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.