கட்சி சார்பான அரசியல் விவாதங்களில் பங்கேற்பதை குடியரசுத்தலைவர் தவிர்க்க வேண்டும்.
76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அரசியலமைப்புச் சட்டம் ஒரு உயிருள்ள ஆவணமாக மாறியுள்ளது என்று கூறினார். இந்தியாவின் பண்டைய குடிமை நற்பண்புகளுக்கு இது பெருமை சேர்த்தது. நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆவணத்தை உருவாக்கியதற்காக வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புச் சபையின் பிற உறுப்பினர்களுக்கும் குடியரசுத்தலைவர் அஞ்சலி செலுத்தினார். ஒரு நவீன குடியரசாக இந்தியாவின் முன்னேற்றத்தை அதன் பாரம்பரியத்துடன் இணைத்த குடியரசுத்தலைவர், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகள் எப்போதும் இந்தியாவின் நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருவதாகக் கூறினார். சுதந்திரத்தின்போது இந்தியாவின் எதிர்காலத்தை சந்தேகித்தவர்கள் (Sceptics), நாட்டின் பலம் காரணமாக அவர்களின் சிந்தனை தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். அரசியலமைப்பு சபை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டது, அதில் 15 பெண்கள் இடம் பெற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். உலகின் பல பகுதிகளில் பெண்கள் சமத்துவம் இன்னும் தொலைதூர இலக்காக இருந்தபோதிலும், இந்தியப் பெண்கள் ஏற்கனவே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகின்றனர். இந்தியாவின் 75 ஆண்டுகால முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் குடியரசுத்தலைவர், காலனித்துவ கால சட்டங்களிலிருந்து விலகியதற்காக ஒன்றிய அரசைப் பாராட்டினார். குறிப்பாக, காலனித்துவ குற்றவியல் சட்டங்களை இந்திய நீதி மரபுகளின் அடிப்படையில் மூன்று புதிய சட்டங்களுடன் மாற்றுவதற்கான துணிச்சலான நடவடிக்கையை குடியரசுத்தலைவர் எடுத்துரைத்தார்.
நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் யோசனையை குடியரசுத்தலைவர் ஆதரித்தார். நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கான வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல்களை ஒன்றாக நடத்துவது நிர்வாகத்தை மேலும் சீரானதாக மாற்றும், முடிவெடுப்பதில் தாமதத்தைத் தடுக்கும், வளங்களைச் சேமிக்கும் மற்றும் செலவுகளைக் குறைக்கும் என்று கூறி குடியரசுத்தலைவர் விவாதத்தில் இணைந்தார். இந்தியா (Indian National Developmental Inclusive Alliance (INDIA)) கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன. இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகவும், கூட்டாட்சியை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலம் "ஒரு நாடு, ஒரு கட்சி" என்ற கொள்கை முன்னெடுப்பதற்கான முயற்சி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் இந்த இந்த விவாதத்தைத் தவிர்த்திருக்கலாம். குடியரசுத்தலைவர் ஒரு அரசியல் விவாதத்தில் ஈடுபடுவதைத் தடுக்க அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும். சீரானத் தன்மையை கட்டாயப்படுத்தாமல் ஒற்றுமை என்பது ஒரு சிறந்த தேசத்திற்கு முக்கியம். குடியரசு தினம் இதை அனைவருக்கும் நினைவூட்ட ஒரு நல்ல நாளாகும்.