கணவனிடம் திரும்பி செல்வதற்கான நீதிமன்ற உத்தரவை மீறினாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற முடியும் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன? ஏன்? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9 ஆனது பிரச்சினைக்கு உரியதாக உள்ளது. இது "திருமண உரிமைகளை மீட்டெடுப்பது" (restitution of conjugal rights) என்ற ஆணையை பிறப்பிக்க நீதிமன்றத்தை அனுமதிக்கிறது. நவீன சமூகத்திற்கு இவை ஏற்புடையதாக இல்லை என்று அது வாதிட்டது. இந்த சட்டப் போராட்டத்தில் உள்ள கேள்விகள் என்ன? 


திருமண உரிமைகளை (conjugal rights) மீட்டெடுப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் "முற்றிலும் தனிப்பட்டவை" மற்றும் "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவை அல்ல" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் பொருள், புகுந்த வீட்டிற்கு மீண்டும் திரும்புவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற மறுத்தாலும், ஒரு கணவன் தனது மனைவிக்கு தொடர்ந்து பராமரிப்பு தொடர்பானவைகளை வழங்க வேண்டும்.


இதன் பொருள், ஒரு மனைவி தனியாக வாழ்ந்தாலும் கூட, தனது கணவரிடமிருந்து பணத்தைப் (money) பெறலாம். தனது புகுந்த வீட்டிற்குத் திரும்புவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற மறுத்தாலும், இந்த ஆதரவைப் பெற அவருக்கு உரிமை உண்டு.


திருமண உரிமைகளை (conjugal rights) மீட்டெடுப்பதற்கான சட்டம் என்ன? 


இந்து திருமணச் சட்டம், 1955 (Hindu Marriage Act(HMA))-ன் பிரிவு 9, ஒரு கணவன் அல்லது மனைவி ஒரு சரியான காரணமின்றி அவர்களை விட்டுச் சென்றால் சட்ட உதவியை நாட அனுமதிக்கிறது. பாதிக்கப்பட்ட நபர் "திருமண  உரிமைகளை மீட்டெடுக்க" மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம். இதனை நீதிமன்றம் ஒப்புக்கொண்டால், திருமண உறவை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பிக்கலாம்.

திருமணமான தம்பதிகள் ஒன்றாக வாழும் ஒரு குடும்பம் என்ற பாரம்பரிய கருத்தைப் பாதுகாப்பதற்காக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டம் பல ஆண்டுகளாக சவால்களையும் விவாதங்களையும் எதிர்கொண்டுள்ளது.


1983-ம் ஆண்டில், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்து, நவீன சமூகத்தில் இத்தகைய சட்டம் ஏற்புடையதாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியது. ஆனால், அடுத்த ஆண்டு (1984) உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை ரத்து செய்தது. 


2019-ம் ஆண்டு, குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக (Gujarat National Law University) மாணவர்கள் குழு இந்த விதியின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்று சவால் விடுத்தது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


தற்போதைய வழக்கில் பராமரிப்பு மற்றும் திருமண உரிமைகள் பற்றிய கேள்விகள் என்ன? 


மனைவி திருமணமான ஒரு வருடம் கழித்து 2015-ம் ஆண்டில் தனது புகுந்த வீட்டை விட்டு வெளியேறினார்.


ஜூலை 2018-ம் ஆண்டில், கணவர் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9-ன் கீழ் திருமண உரிமைகளை மீட்டெடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


ஆகஸ்ட் 2019-ம் ஆண்டில், திருமண உரிமைகள் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், மனைவி அவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973-ன் பிரிவு 125-ன் கீழ், தனது கணவர் தன்னைப் புறக்கணிப்பதாகவும், மேலும் தன்னைத்தானே பராமரிப்பதற்கு கணவரிடம் மாதாந்திரமாக தொகை கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். 


திருமண உரிமைகள் வழக்கில், மனைவி தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை மோசமாக நடத்தியதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் தனக்கு ஏற்படுத்திய மன துன்பத்திற்கு பல எடுத்துக்காட்டுகளை அவர் நீதிமன்றத்தில் வழங்கினார்.


இருப்பினும், மனைவி அவர்களின் கூற்றுகளை ஆதரிக்க கூடுதல் ஆதாரங்களை வழங்க அவர் தவறியதால், குடும்ப நீதிமன்றம், ஏப்ரல் 2022-ம் ஆண்டில், திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையை நிறைவேற்றி, திருமணமான வீட்டிற்குத் திரும்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஆனால், மனைவி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றவில்லை. இருப்பினும், கணவன் இன்னும் நீதிமன்றத்தின் ஆணையை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவில் நடைமுறைச் சட்டம் (Civil Procedure Code), 1908-ன் கீழ் அபராதம் அல்லது சொத்து இணைப்பு போன்ற சட்ட விருப்பங்களை அவர் அணுகவில்லை.


இதற்கிடையில், பிப்ரவரி 2022-ம் ஆண்டில், மனைவிக்கு தனது கணவர் மாதத்திற்கு ₹10,000 பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவைப் பெற்றார். பின்னர் கணவர் இந்த உத்தரவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.


ஆகஸ்ட் 2023-ம் ஆண்டில், உயர் நீதிமன்றம் பராமரிப்பு உத்தரவை ரத்து செய்தது. குடும்ப நீதிமன்றம் திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையை பிறப்பித்த பிறகும், மனைவி தனது கணவரிடம் திரும்ப வருவதற்கு மறுத்துவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. ஒரு மனைவி தனது கணவருடன் சரியான காரணமின்றி வாழ மறுத்தால், அவருக்கு பராமரிப்புத் தொகை கிடைக்காது என்று கூறும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125(4)-ஐயும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மனைவி இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


உச்ச நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது ஏன்? 


ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, மாதாந்திர பராமரிப்புத் தொகையை தொடர்ந்து வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டது. 


கடந்த பல உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கானா மற்றும் நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு நீதிமன்றங்கள், முடிந்தவரை மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கின்றன என்று கண்டறிந்தது. 


நீதிமன்றம் 2017 திரிபுரா உயர்நீதிமன்ற வழக்கைக் குறிப்பிட்டது. இந்த வழக்கில், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையைப் பின்பற்றவில்லை என்றாலும் பராமரிப்பு தொகை வழங்கப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125(4)-ல் உள்ள கட்டுப்பாடு முழுமையாக மறுக்கப்படாவிட்டாலும், பெருமளவில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை, உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டது.


திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையை நிறைவேற்றுவதும், மனைவி நீதிமன்ற ஆணையை ஏற்க மறுப்பதும் மட்டுமே அவரை ஜீவனாம்சம் பெறுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு போதுமான ஆதாரமல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 


மனைவிக்கு ஜீவனாம்சம் கிடைக்க உரிமை உள்ளதா என்பதை தீர்மானிக்க நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கின் உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தனி திருமண உரிமைகள் வழக்கில் உள்ள கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. மனைவி தனது புகுந்த வீட்டிற்கு மீண்டும் திரும்புவதில்லை என்ற முடிவை நியாயப்படுத்தியிருக்கக்கூடிய முக்கியமான காரணிகளையும் அது புறக்கணித்திருந்தது.


எனவே 'திருமண உரிமைகள்' குறித்த சட்ட விவாதம் எங்கே நிற்கிறது? 


1983-ம் ஆண்டில், இந்து திருமணச் சட்டத்தின் (Hindu Marriage Act (HMA)) பிரிவு 9, விருப்பமில்லாத தரப்பினரை அவர்களின் சம்மதம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிராக பாலினரீதியாக கட்டாயப்படுத்துவதாக ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் இந்த முடிவை ரத்து செய்தது. திருமண முறிவைத் தடுக்க உதவுவதன் மூலம் இந்த விதி ஒரு சமூக நோக்கத்திற்கு உதவுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது 1984-ம் ஆண்டில் சரோஜ் ராணி எதிர் சுதர்ஷன் குமார் சத்தா (Saroj Rani vs Sudarshan Kumar Chadha, 1984) வழக்கில் கூறப்பட்டது.


குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், பிரிவு 9 பாகுபாட்டிற்கு எதிரான அடிப்படை உரிமையை மீறுகிறது. ஏனெனில், இது பெண்களை சொத்தாகப் பார்ப்பதற்கான ஆணாதிக்கக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், பாலின ஸ்டீரியோடைப்களை (gender stereotypes) வலுப்படுத்தியது என்றும் அவர்கள் கூறினர்.


இந்த விதி தனிமைக்கான உரிமையை மீறுவதாகவும், அதில் தனிமையில் இருக்க உரிமையும் அடங்கும் என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.


2019-ம் ஆண்டு பொதுநல மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 2022-ம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. இந்த விதி பாலின-நடுநிலையானது (gender-neutral) என்று ஒன்றிய அரசு கூறியது. திருமண வாழ்க்கையில் எழும் வேறுபாடுகளைத் தீர்க்க, திருமணமான தம்பதிகளுக்கு "ஒப்பீட்டளவில் சாதகமான" (relatively soft) சட்டத் தீர்வை இந்தச் சட்டம் வழங்குவதாகவும் அது குறிப்பிட்டது.




Original article:

Share: