குறைந்தபட்ச ஆதரவு விலையில் மட்டுமே கவனம் செலுத்துவது, மிகவும் விரிவான மற்றும் ஆற்றல்மிக்க கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பை இழக்கச் செய்யும்.
பயிர்களுக்கு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) உருவாக்குவது பற்றிய விவாதம் பயனுள்ளதாக இல்லை. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் அதே வேளையில், கிராமப்புற வறுமையை மோசமாக்கும் மற்றும் விவசாய சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகளை இது புறக்கணிக்கிறது. விலை மாற்றங்களைவிட பெரிய ஆபத்தாக இருக்கும் காலநிலை தொடர்பான உற்பத்தி அதிர்ச்சிகள் மற்றும் மாறிவரும் உணவு விருப்பங்களுக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த கொள்கைகள் வருமான ஆதரவு மற்றும் விலை பற்றாக்குறை பண வழங்கீடுகள் (price deficiency payments) ஆகும். இவை கிராமப்புறங்களில் நிலையான வருமானத்தை உறுதி செய்ய உதவும். சந்தை விலையில் பொது கொள்முதலை விரிவுபடுத்துவதும் பரவலாக்குவதும் உற்பத்தி மற்றும் நுகர்வை பல்வகைப்படுத்த உதவும்.
முதலாவதாக, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பரிந்துரைத்தபடி, கிராமப்புற வீடுகளுக்கு இலக்கு வைக்கப்பட்ட அனைவருக்குமான அரை அடிப்படை வருமானம் (quasi-Universal Basic Income (q-UBI)I) முக்கிய பாதுகாப்பு வலையாக இருக்க வேண்டும். இது விவசாயிகள் மட்டுமல்ல, அதிகமான மக்களையும் உள்ளடக்கும் வகையில் PM-Kisan திட்டத்தை விரிவுபடுத்தும். q-UBI கட்டணம் PM-Kisan பண வழங்கீடுகளைவிட அதிகமாக இருக்க வேண்டும். இது ஐந்து ஏக்கர் விவசாயியின் சராசரி வருமானத்திற்கு சமமாக இருக்கலாம். இது விலை மற்றும் அளவு அதிர்ச்சிகளிலிருந்து (quantity shocks) பாதுகாக்க உதவும்.
கிராமப்புற வாழ்வாதாரங்கள் விவசாயத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை குறைந்தபட்ச ஆதரவு விலை சார்ந்த கட்டமைப்புகள் புறக்கணிக்கின்றன. பல கிராமப்புற மக்கள் வர்த்தகர்களாக வேலை செய்கிறார்கள் மற்றும் விவசாய விநியோகச் சங்கிலிகளை ஆதரிக்கிறார்கள். குறைந்த சில்லறை விலைகளுடன் செயற்கையாக அதிக MSP அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும், விலை நிலைப்படுத்தலில் மட்டுமே கவனம் செலுத்துவது விவசாயிகளை காலநிலை தொடர்பான பயிர் இழப்புகளுக்கு ஆளாக்குகிறது.
q-UBI உடன், விலை பற்றாக்குறை பண வழங்கீடுகள் சந்தையை சமநிலையில் வைத்திருக்கும் அதே வேளையில், விவசாயிகளை தீவிர விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு மாவட்டத்தில் பயிர் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தால், விவசாயிகளுக்கு 30% போன்ற இழப்பை ஈடுசெய்ய முடியும். இது சந்தை நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கும் அதே வேளையில், தீவிர விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க உதவுகிறது.
இந்த அணுகுமுறைக்கு வலுவான சந்தை நுண்ணறிவு அமைப்பு தேவை. சில மாநிலங்களில் இது உள்ளது. பெரிய விலை மாற்றங்களின் போது இந்த அமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும். பல பருவங்களுக்கு விலைகள் குறைவாக இருந்தால், பயிர்களை மாற்றவோ அல்லது அந்த பயிர்கள் மேலும் வளர்வதற்கான பிற வழிகளை ஆராயவோ விவசாயிகளை எச்சரிக்க வேண்டும்.
இரண்டாவதாக, பொது கொள்முதல் மாறிவரும் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். மத்திய நிதியுதவியுடன் மாநில அரசுகள், பொது விநியோக முறை (Public Distribution System (PDS)), மதிய உணவு மற்றும் பிற நலத்திட்டங்களுக்காக வாங்கும் பயிர் வகைகளை விரிவுபடுத்த வேண்டும். நுகர்வு மானியங்களை குறைவான விலையில் வைத்திருக்க, பொருட்களின் அதிகரிப்புடன், பயனாளிகளை இலக்காகக் கொண்டு சிறந்த மற்றும் அதிக கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
பிரதம மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM AASHA)) போன்ற திட்டங்கள் ஏற்கனவே பரவலாக்கப்பட்ட கொள்முதலை அனுமதிக்கின்றன. ஆனால், மாநிலங்கள் இந்தத் திட்டத்தை வழிநடத்த வேண்டும். மாநிலங்கள் இந்த திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்கவில்லை என்றால் ஒன்றிய அரசைக் குறைகூறக் கூடாது. கழிவுகளைக் குறைப்பதற்கும் மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும். PM-AASHA கொள்முதல் மீது ஒரு வரம்பை நிர்ணயிக்கிறது மற்றும் இந்த யோசனையைப் பின்பற்றுகிறது. பயிர்கள் நலத்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒன்றிய அரசு மானியம் செலுத்துவதை உறுதிசெய்யும் வகையில் அதை சரிசெய்ய முடியும்.
அதே நேரத்தில், ஒன்றிய அரசு இருப்புக்களை அரிசி மற்றும் கோதுமையை விட அதிகமாக விரிவுபடுத்த வேண்டும். பருப்பு வகைகள், வெங்காயம் மற்றும் பிற அத்தியாவசிய பயிர்களை சேர்க்க வேண்டும். இது விவசாயிகளுக்கு உதவும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பெரிய விலை மாற்றங்களைச் சந்தித்த வெங்காயம் போன்ற முக்கியமான பொருட்களின் விலை ஏற்றங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும். இருப்பினும், இப்போது உள்ள சூழலை போல் இல்லாமல், அனைத்து பொது கொள்முதல்களும் சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நிலையான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அல்ல. அதிகப்படியான இருப்பு மற்றும் வீணாவதைத் தவிர்க்க, கொள்முதல் அளவு தேவை மற்றும் தற்போதைய சரக்குகளைச் சார்ந்திருக்க வேண்டும். நான் பரிந்துரைக்கும் முக்கிய யோசனை என்னவென்றால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதன் மூலம் அல்ல, சந்தைகளில் தீவிரமாக பங்கேற்பதன் மூலம் விவசாயிகளுக்கு உதவுகின்றன. மிகவும் மாறுபட்ட பொது விநியோக முறை, தேவையை உறுதிப்படுத்தும் மற்றும் வலுவான உணவு முறையை உருவாக்கும் ஒரு கொள்முதல் உத்தியை உருவாக்கும்.
சட்டப்பூர்வமாக இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான தேவை, மோசமான பயிர் காப்பீடு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்படும் குறைந்த விலைகள் போன்ற விவசாயிகளின் தேவைகளை பல ஆண்டுகளாக புறக்கணிப்பதிலிருந்து வருகிறது. விவசாய ஆதரவுக்கான சட்டக் கட்டமைப்பைப் பற்றி விவாதிப்பதில் மதிப்பு உள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால், ஒரு பரந்த மற்றும் தகவமைப்புத் தன்மை கொண்ட கொள்கையை உருவாக்கும் வாய்ப்பை நாம் இழக்க நேரிடும்.
இந்தத் திட்டத்தின் இரண்டு பகுதிகளும் தற்போதைய அமைப்பிலிருந்து ஒரு பெரிய மாற்றமாகும். இருப்பினும், அவை கடந்த பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. விவரங்களை உருவாக்குவதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படும். ஆனால், இந்த அணுகுமுறை விவசாயிகளை ஆதரிக்க மிகவும் நிலையான மற்றும் நியாயமான வழியை வழங்குகிறது. இது கிராமப்புற வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கிறது. செயலில் உள்ள விவசாய சந்தைகளை ஆதரிக்கிறது மற்றும் எதிர்காலத் தேவைகளுடன் கொள்கைகளை சீரமைக்கிறது.