டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகரமாக மாற்றுவதாக உறுதியளித்தார், மேலும் டிஜிட்டல் சொத்துகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் 'டிஜிட்டல் சொத்து சந்தைகளில் அதிபரின் பணிக்குழு' (‘The President’s Working Group on Digital Asset Markets’) என்ற பணிக்குழுவை உருவாக்க உத்தரவிட்டார். அவரது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப் டிஜிட்டல் சொத்துக்களை ஏற்றுக்கொள்வதை ஆதரிக்கும் "கிரிப்டோ அதிபர்" (“crypto president”) என்று உறுதியளித்தார். அமெரிக்காவில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை (Central Bank Digital Currency (CBDC)) உருவாக்குதல், வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றை அவரது நிர்வாக உத்தரவு தடை செய்கிறது.
முக்கிய அம்சங்கள்:
1. கிரிப்டோகரன்சி என்பது ரூபாய் அல்லது அமெரிக்க டாலர் போன்ற ஒரு வகை பணமாகும். ஆனால், அது டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே உள்ளது. புதிய பணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்தவும் பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்தவும் இது குறியாக்கத்தைப் பயன்படுத்துகிறது.
2. இது பல கணினிகளில் பரவியுள்ள ஒரு நெட்வொர்க் அமைப்பைச் சார்ந்துள்ளது. ஒரே பணத்தை இரண்டு முறை போலியாக உருவாக்குவது அல்லது செலவழிப்பது மிகவும் கடினம். பல கிரிப்டோகரன்சிகள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பரவலாக்கப்பட்ட நெட்வொர்க் அமைப்புகள் ஆகும்.
3. பாரம்பரிய பணப் பரிவர்த்தனைகளில், மத்திய வங்கி போன்ற ஒரு மூன்றாம் தரப்பு அமைப்பு, பணம் உண்மையானதா என்பதை உறுதிசெய்து பரிவர்த்தனையைப் பதிவு செய்கிறது. கிரிப்டோகரன்சிகளுடன், ஒரு மைய அதிகாரத்திற்குப் பதிலாக, தனியார் கணினிகள் கடினமான புதிர்களைத் தீர்ப்பதன் மூலம் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்தப் புதிர்களைத் தீர்க்கும் நபர்கள் கிரிப்டோகரன்சிகளைப் பெறுகிறார்கள். இந்த செயல்முறை சுரங்கப்பணி (mining) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனைகளுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம் பிளாக்செயின் என்று அழைக்கப்படுகிறது.
4. கிரிப்டோகரன்ஸிகளின் நன்மைகள்:
(i) மலிவான மற்றும் வேகமான பணப் பரிமாற்றங்களும் இதில் அடங்கும்.
(ii) அவை தோல்வியின் ஒரு புள்ளியில் சரிந்துவிடாத பரவலாக்கப்பட்ட அமைப்புகள்.
(iii) மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பான இணையவழிக் கட்டணங்களை அவை செயல்படுத்துகின்றன.
5. கிரிப்டோகரன்ஸிகளின் தீமைகள்
(i) அவை அதிக விலை ஏற்ற இறக்கத்தை உள்ளடக்கியது
(ii) அதிக ஆற்றல் நுகர்வு தேவைப்படும்
(iii) அவை குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படலாம்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
1. இந்த யோசனைக்குப் பின்னால் இருந்த நபர் (அல்லது மக்கள் குழு) சடோஷி நகமோட்டோ, 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு ஒரு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு பரிவர்த்தனைகள் மற்றும் பண மதிப்புகளை டிஜிட்டல் முறையில் ஒரு பொது, திறந்த பதிவேட்டில் பதிவு (ledger) செய்கிறது. பிளாக்செயின் என்று அழைக்கப்படும் இந்த பதிவேடு, இதுவரை செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் காட்டுகிறது. ஆனால், அவற்றை அடையாளமில்லாதகவும் (anonymous) மற்றும் மறைகுறியாக்கப்பட்டதாகவும் (encrypted) வைத்திருக்கிறது.
2. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, பிளாக்செயின் என்பது பகிரப்பட்ட மாறாத லெட்ஜர் ஆகும். இது ஒரு வணிக நெட்வொர்க் முழுவதும் பரிவர்த்தனைகளை பதிவுசெய்தல் மற்றும் சொத்துக்களை கண்காணிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. பிளாக்செயின் நெட்வொர்க்கில் மதிப்புள்ள எதையும் கண்காணிக்கலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம். பிளாக்செயின் என்பது கணினி நெட்வொர்க்கில் பகிரப்படும் விநியோகிக்கப்பட்ட தரவுத்தளமாகும். பிளாக்செயின் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற டிஜிட்டல் வடிவத்தில் தகவல்களை மின்னணு முறையில் சேமிக்கிறது.
3. விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (Distributed Ledger Technology (DLT)) என்றும் அழைக்கப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம், பரவலாக்கத்தின் மூலம் டிஜிட்டல் சொத்துக்களின் மாறாத தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும்.
4. இது தரவுத் தொகுதிகளின் அமைப்பில் இயங்குகிறது, அங்கு ஒவ்வொரு தொகுதியும் கிரிப்டோகிராஃபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி அடுத்தவற்றுடன் இணைக்கப்பட்டு, தொகுதிகளின் "சங்கிலியை" உருவாக்குகிறது. இந்தத் தொகுதிகளுக்குள் உள்ள தரவு, ஒருமுறை பதிவுசெய்யப்பட்டால், நெட்வொர்க்கின் ஒருமித்த கருத்து இல்லாமல் மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது. இந்த பரவலாக்கப்பட்ட மற்றும் விநியோகிக்கப்பட்ட கட்டமைப்பானது பிளாக்செயினை ஹேக்கிங்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஏனெனில், ஒரு தொகுதியை மாற்றுவது முழு நெட்வொர்க்கிலும் ஒரே நேரத்தில் மாற்றங்கள் தேவைப்படும்.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency (CBDC))
1. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வழங்கப்படும் டிஜிட்டல் நாணயத்தின் ஒரு வடிவமாகும். இது கிரிப்டோகரன்சிகளைப் போலவே இருந்தாலும், அதன் மதிப்பு மத்திய வங்கியால் ஒதுக்கப்படுகிறது மற்றும் குறிப்பிட்ட நாட்டின் பியட் (முறையான) நாணயத்தைப் போன்றது.
2. சமீபத்திய ஆண்டுகளில், டிஜிட்டல் நாணயங்களை நோக்கிய மாற்றத்தின் ஒரு பகுதியாக பல நாடுகள் CBDCகளை அறிமுகப்படுத்தியுள்ளன. CBDCகள் ஒரு மத்திய அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் அளவைக் குறிக்கிறது.
3. நவம்பர் 2023 ஆண்டு நிலவரப்படி, சீனா, பிரேசில், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் CBDCகளை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹாமாஸ், நைஜீரியா மற்றும் ஸ்வீடன் ஏற்கனவே தங்கள் CBDCகளை உருவாக்கியுள்ளன.
1. டிசம்பர் 2022ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் எனப்படும் இந்தியாவின் CBDC-ஐ சில்லறைப் பயனர்களுக்காக ஒரு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.
2. சில்லறை CBDC-ன் சாத்தியக்கூறு, செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றைச் சோதிப்பதை இது நோக்கமாகக் கொண்டது. ஆரம்பத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வங்கிகள் மூலம் பைலட் வெளியிடப்பட்டது. காலப்போக்கில், அதிக பங்கேற்பாளர்கள், இருப்பிடங்கள் மற்றும் பயன்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அதன் நோக்கம் படிப்படியாக விரிவாக்கப்பட்டது.
3. இது ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் டிஜிட்டல் பணம். இது வழக்கமான பணத்தைப் போலவே செயல்படுகிறது மற்றும் உண்மையானப் பணத்தைப் போலவே அதே மதிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இது வழக்கமான பணத்தைப் போல காகிதம் அல்லது பிளாஸ்டிக் அல்ல. இது ஒரு வகையான சட்டப்பூர்வ பணம், இது வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும் கூட, எவரும் பயன்படுத்தலாம்.