முக்கிய அம்சங்கள்:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜனவரி 10ஆம் தேதி நிறைவு உரையை நிகழ்த்துவார். மேலும், சமூக சேவை, மனிதாபிமான முயற்சிகள் மற்றும் இந்தியாவின் உலகளாவிய நிலையை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பிரவாசி பாரதிய சம்மான் விருதை வழங்குவார்.
அமெரிக்கா, பிஜி, கயானா, மொரீஷியஸ், மால்டோவா, மியான்மர், ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த ஆண்டு கௌரவிக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) ஜனவரி 9-10 மாநாட்டிற்கு முன்னதாக, ஜனவரி 8-ஆம் தேதி இளைஞர் பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்) (Youth Pravasi Bharatiya Divas) அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்த மூன்று நாள் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டு இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் அதன் வெளிநாடு வாழ் இந்திய சமூகத்திற்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட "வளர்ந்த இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு" (“Diaspora’s Contribution to a Viksit Bharat”) என்பதே இந்த ஆண்டு கருப்பொருளாகும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு, இந்திய அரசாங்கத்திற்கும் அதன் வெளிநாட்டு குடிமக்களுக்கும் இடையிலான உரையாடலுக்கான வாய்ப்பையும் வழங்கும். இது புலம்பெயர்ந்தோரை பாதிக்கும் கொள்கைகள், விசா விதிமுறைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சமூகநலன் குறித்த விவாதங்களை அனுமதிக்கும்.
முதலீடு, புதுமைப் படைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான மையமாக இந்தியாவின் திறனை இது வெளிப்படுத்துவதுடன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஊக்கமளிக்கும்.
அயோத்தியில் ராம் கோயில் திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 'விஸ்வரூப் ராம் - ராமாயணத்தின் உலகளாவிய மரபு' (‘Vishwaroop Ram — The Universal Legacy of Ramayana’) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியையும் பிரதமர் திறந்து வைப்பார்.
தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்த இந்தியா ஆகியவற்றில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்த மற்றொரு கண்காட்சியும், இந்திய வெளிநாடுவாழ் இந்தியர்களின் பரவல் மற்றும் பரிணாமம் குறித்த மூன்றாவது கண்காட்சியும் நடைபெறும். குஜராத்தின் மாண்ட்வியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு குடிபெயர்ந்த மக்களின் அரிய ஆவணங்கள் இதில் காட்சிப்படுத்தப்படும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் 'வாய்ப்புகளை உருவாக்குதல், தடைகளை உடைத்தல்: புலம்பெயர்ந்தோர் திறன்களின் கதைகள்' உட்பட ஐந்து கருப்பொருள் கொண்ட முழுமையான அமர்வுகள் இடம்பெறும்.
உங்களுக்கு தெரியுமா?
1915-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது.
1915-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தேதி என்பதால் ஜனவரி 9 தேர்ந்தெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, பல்வேறு அரசியல்வாதிகளால் மிகவும் பிரபலமான முதல் வெளிநாடுவாழ் இந்தியர் (Non-Resident Indian) என்று அவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, "இது ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளி நபர் அல்லது அவர்களால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்துக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும்."
டயஸ்போரா (diaspora) என்ற சொல் கிரேக்க புலம்பெயர்ந்தோரில் இருந்து தோன்றியது. அதாவது, கிழக்கு பசிபிக் மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள மாவட்டங்களுக்கு 'கிர்மிட்டியா' ஏற்பாட்டின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதல் தொகுதி இந்தியர்கள் அழைத்துச் செல்லப்பட்டதிலிருந்து இந்திய புலம்பெயர்ந்தோர் பன்மடங்கு அதிகரித்துள்ளனர்.
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில், 1833-34ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால் தொழிலாளர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனிகளில் உள்ள தோட்டங்களில் வேலை செய்ய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இரண்டாவது முறை இடப்பெயர்வின் ஒரு பகுதியாக, சுமார் 20 லட்சம் இந்தியர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு பண்ணைகளில் வேலை செய்ய சென்றனர். மூன்றாவது மற்றும் நான்காவது முறைகளில் தொழில் வல்லுநர்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், தொழிலாளர்கள் வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்றனர்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறார்கள்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் (Non-Resident Indians (NRI)), இந்திய வம்சாவளியினர் (Persons of Indian Origin (PIOs)), இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (Overseas Citizens of India (OCIs)).
NRI என்பது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்.
2015-ஆம் ஆண்டில் PIO வகை நீக்கப்பட்டு OCI வகையுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதுள்ள PIO கார்டுகள் டிசம்பர் 31, 2023 வரை செல்லுபடியாகும். இதன் மூலம் இந்த அட்டைகளை வைத்திருப்பவர்கள் OCI கார்டுகளைப் பெற வேண்டும்.
வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஈரான், பூட்டான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைத் தவிர, இந்திய வம்சாவளி நபரை (PIO) ஒரு வெளிநாட்டு குடிமகனாக வரையறுக்கிறது. இந்திய அரசு சட்டம், 1935ன் படி, PIO என்பது இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் அல்லது யாருடைய பெற்றோர், தாத்தா, பாட்டி அல்லது கொள்ளு தாத்தாக்கள் இந்தியாவில் பிறந்து வாழ்ந்தவர்கள் மற்றும் இந்திய குடிமகனின் மனைவியும் இதில் அடங்குவர்.
2006-ஆம் ஆண்டில், OCI (Overseas Citizen of India) என்ற தனி வகை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்த வெளிநாட்டினருக்கு OCI அட்டை வழங்கப்பட்டது. அவை:
1. அவர்கள் ஜனவரி 26, 1950 அன்று இந்திய குடிமக்களாக இருக்க தகுதி பெற்றவர்கள்.
2. ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த குடிமக்கள்.
3. ஆகஸ்ட் 15, 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தான் அல்லது வங்கதேச குடிமகனாக இருந்தவர்களைத் தவிர, அத்தகைய நபர்களின் மைனர் குழந்தைகளும் OCI அட்டைகளுக்கு தகுதியுடையவர்கள்.
வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் ஆகஸ்ட் 22, 2022 அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, 4.7 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இந்த எண்ணிக்கையில் NRIகள், PIOக்கள், OCIகள் மற்றும் மாணவர்கள் போன்றோர் உள்ளனர். மாணவர்களைத் தவிர்த்து, 1.87 கோடி PIOகள் மற்றும் 1.35 கோடி NRIகள் உட்பட இந்த எண்ணிக்கை 3.22 கோடியாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தயாரித்த உலக இடம்பெயர்வு அறிக்கையின்படி, இந்தியா உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ளது. இது உலகளவில் சிறந்த வம்சாவளி நாடாக உள்ளது. அதைத் தொடர்ந்து மெக்ஸிகோ, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை உள்ளன.
2022-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் பகிரப்பட்ட எண்ணிக்கைகள், இந்திய புலம்பெயர்ந்தோரின் புவியியல் பரவல் மிகப்பெரியது என்பதைக் காட்டுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கொண்ட நாடுகளில், அமெரிக்கா (44 லட்சம்), ஐக்கிய இராச்சியம் (17.6 லட்சம்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (34 லட்சம்), இலங்கை (16 லட்சம்), தென்னாப்பிரிக்கா (15.6 லட்சம்), சவுதி அரேபியா (26 லட்சம்), மியான்மர் (20 லட்சம்), மலேசியா (29.8 லட்சம்), குவைத் (10.2 லட்சம்) மற்றும் கனடா (16.8 லட்சம்) மக்கள் வாழ்கின்றனர்.
உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு பணம் அனுப்புவது குடும்ப வருமானத்தின் முக்கிய ஆதாரமாகும். நவம்பர் 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக வங்கியின் இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு அறிக்கையில், "முதல் முறையாக இந்தியா ஒர் தனி நாடாக வருடாந்திர பண அனுப்புதலில் $100 பில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெறும் பாதையில் உள்ளது" என்று கூறியுள்ளது.
உலக புலம்பெயர்வு அறிக்கை (World Migration Report), இந்தியா, சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை பணம் அனுப்பும் முதல் ஐந்து நாடுகளில் (இறங்கு வரிசையில்) உள்ளன. "இருப்பினும் இந்தியாவும் சீனாவும் மற்றவற்றைவிட மேலே உள்ளன". 2020-ஆம் ஆண்டில், இரு அண்டை நாடுகளும் ஆசியாவில் மிகப்பெரிய அளவிலான சர்வதேச பண அனுப்புதல்களைப் பெற்றன. அவை மொத்தம் 140 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.