இந்தியாவில் வறுமையானது குறைத்து மதிப்பிடப்படுகிறதா? -சம்ரீன் வானி

 கடந்த மாதம், 2023-24 குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) குறித்த உண்மையான அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வறுமை குறைந்து வருவதை இந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், கொள்கை வகுப்பாளர்கள் (policymakers) மற்றும் கல்வியாளர்கள் (academics) பல பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர். 


ஒப்பிடமுடியாத தரவுத் தொகுப்புகளின் பயன்பாடு, கிடைக்கக்கூடிய தரவுகளின் பற்றாக்குறை மற்றும் வறுமைக் கோட்டைத் தீர்மானிக்க போதுமான நுகர்வு தொகுப்பின் வரையறை ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவில் வறுமை குறைத்து மதிப்பிடப்படுகிறதா? சாம்ரீன் வாணி நடத்திய உரையாடலில் பி.சி. மோகனன் மற்றும் என்.ஆர். பானுமூர்த்தி ஆகியோர் இந்தக் கேள்வியைப் பற்றி விவாதிக்கின்றனர். 


வறுமையை எப்படி வரையறுக்கிறீர்கள்? இந்தியாவில் வறுமை குறைத்து மதிப்பிடப்படுகிறதா?


பி.சி. மோகனன் : 1970களின் பிற்பகுதியில் இருந்து 2005 வரை வறுமை பற்றிய நிலையான வரையறை இருந்தது. இது, குறைந்தபட்ச கலோரி உணவைப் பராமரிக்கத் தேவையான செலவினத்தை அடிப்படையாகக் கொண்டது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) தரவைப் பயன்படுத்தி இந்த வரையறை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், NSSO-வின் தனியார் செலவின மதிப்பீடுகள் தேசிய கணக்குகளின் மதிப்பீடுகளும் மிகவும் ஒத்திருந்தன. எனவே இதனால் எந்த சர்ச்சையும் இல்லை. இருப்பினும், காலப்போக்கில், இரண்டு மதிப்பீடுகளும் கணிசமாக வேறுபடத் தொடங்கின. இது NSSO தரவின் துல்லியமானவை குறித்த கேள்விகளுக்கு வழிவகுத்தது.


பின்னர், டெண்டுல்கர் குழுவை (Tendulkar Committee) அரசு நியமித்தது. அதே நேரத்தில், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமானது (NSSO) நுகர்வு செலவினங்களின் சேகரிப்பை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளைப் ஆய்வுசெய்யத் தொடங்கியது. அதாவது, வெவ்வேறு திரும்பப்பெறும் காலங்களைப் (recall periods) பயன்படுத்துவதாகும். (ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பதிலளிப்பவர் தங்கள் நுகர்வு செலவினங்களை நினைவில் கொள்ளச் சொல்லும் போது திரும்பப்பெறும் காலம் (recall period) என்று அழைக்கப்படுகிறது) 2011-12-க்குப் பிறகு, அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வ வறுமை மதிப்பீடுகள் இல்லை.


 அது ஒரு கணக்கெடுப்பையும் நடத்தவில்லை. மக்கள் செலவினங்களின் மாற்று மதிப்பீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர், பல பரிமாண வறுமை குறியீடு (multidimensional poverty index) பயன்படுத்தப்பட்டது. சில தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி, வறுமை வெகுவாகக் குறைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும், இது கேள்விக்குரியது. இது வறுமைக் கோடு மற்றும் பயன்படுத்தப்படும் தரவைப் பொறுத்தது அமைகிறது.


என்.ஆர். பானுமூர்த்தி : கடந்த இருபதாண்டுகளில், பயன்படுத்தப்பட்ட அளவீட்டைப் பொருட்படுத்தாமல், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இருபதாண்டுகளுக்கு இடையிலான வறுமை நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் பல காரணங்களுக்காக பெரியளவில் அதிகரித்துள்ளது. அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு முதன்மைத் திட்டங்கள் மூலம் அதிகரித்த பொதுச் செலவு மற்றும் மேம்படுத்தப்பட்ட பொது விநியோக முறை ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, கிட்டத்தட்ட 80 கோடி மக்களை உள்ளடக்கிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) இன்னும் நடைமுறையில் உள்ளது. எனவே, இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தால், மக்கள் இன்னும் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள் என்று கூறுவது முரண்பாடானதாக இருக்கும்.


ஆரம்பத்தில், வறுமை என்பது கலோரி நுகர்வு மூலம் மட்டுமே வரையறுக்கப்பட்டது. தற்போது, இதற்கான ​​வரையறை விரிவடைந்துள்ளது. இது சரியான அணுகுமுறையாகும். நீங்கள் டெண்டுல்கர் குழு அல்லது இரங்கராஜன் குழு முறையைப் பயன்படுத்தினால், வெவ்வேறு எண்ணிக்கைகளைப் பெறலாம். இருப்பினும், இரண்டு முறைகளிலும் இரண்டு சுற்றுகளுக்கு இடையிலான மாற்றம் 17% அல்லது 18% ஆக இருக்கும். 2022-23 கணக்கெடுப்பின் அடிப்படையில் வறுமை சுமார் 10% என்று டாக்டர் ரங்கராஜன் அவர்களே மதிப்பிட்டுள்ளார். சமீபத்தியத்தில் உண்மை அறிக்கையைப் பொறுத்தவரை, வறுமை மேலும் குறைந்து, ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.


குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (HCES) தரவு தொடர்பான உங்கள் கவலைகள் என்ன?


பி.சி. மோகனன் : பல ஆண்டுகளாக, NSSO தனிநபர் குடும்ப நுகர்வு செலவுத் தரவுகளுக்கும் (per capita household consumption data) தேசியக் கணக்குகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளுக்கும் இடையில் வேறுபாடு இருந்து வருகிறது. திரும்பப் பெறும் காலம் காரணமாக சில சிக்கல்கள் எழுந்தன. NSSO வெவ்வேறு திரும்பப் பெறும் காலங்களுடன் பரிசோதனை செய்யத் தொடங்கியது. இது சில பொருட்களுக்கு ஏழு நாள் திரும்பப்பெறும் காலங்களையும் (recall periods) மற்றவற்றுக்கு 30 நாள் காலத்தையும் நிர்ணயித்தது. 


இருப்பினும், இந்த புதிய மதிப்பீடுகளை முந்தைய நுகர்வு மதிப்பீடுகளுடன் ஒப்பிட முடியாது. முந்தைய மதிப்பீடுகள் வெவ்வேறு திரும்பப் பெறும் காலங்களைக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில், எங்களிடம் சீரான குறிப்பு காலம் (uniform reference period (URP)) இருந்தது. இது அனைத்து பொருட்களுக்கும் 30 நாள் திரும்பப் பெறுதலைப் பயன்படுத்தியது. பின்னர், கலப்பு குறிப்பு காலம் (mixed reference period (MRP)) இருந்தது. இது உணவுக்கு 30 நாட்களையும் மற்ற பொருட்களுக்கு 365 நாட்களையும் பயன்படுத்தியது. டெண்டுல்கர் கலப்பு குறிப்பு காலத்தைப் (MRP) பயன்படுத்தி வறுமையை மதிப்பிட்டார். அதன் பிறகு, மாற்றியமைக்கப்பட்ட கலப்பு குறிப்பு காலம் (modified mixed reference period (MMRP)) அறிமுகப்படுத்தப்பட்டது. இது உணவுக்கு ஏழு நாள் திரும்பப் பெறுதலையும் மற்ற பொருட்களுக்கு 30 அல்லது 365 நாட்களையும் பயன்படுத்தியது. சிறந்த திரும்பப்பெறும் காலம் காரணமாக MMRP அதிக செலவின மதிப்பீட்டை அளிக்கிறது. 


பல ஆராய்ச்சியாளர்கள் செய்தது போல், குறைந்த வறுமைக் கோட்டுடன் இந்த அதிக செலவினத்தைப் பயன்படுத்துவது இயற்கையாகவே குறைந்த வறுமை மதிப்பீட்டிற்கு வழிவகுக்கிறது. ரங்கராஜன் தனது குழு அறிக்கையில் வேறு ஒரு முறையை பரிந்துரைத்தார். ஆனால், அரசாங்கம் அதை ஏற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், NSSO, ஒரு முறைக்கு பதிலாக மூன்று அமர்வுகளில் வீடுகளுக்குச் சென்று அதன் அணுகுமுறையை மாற்றியது. இந்த வழியில், தரவு அறிக்கையிடல் என்பது சிறந்தது. 


ஏனெனில், இதற்கு பதிலளித்தவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும் மற்றும் சிறப்பாக செயல்படுத்த முடியும். தற்போதைய முறை இன்னும் அதிக செலவைக் கொடுக்கும். ஆனால், பழைய வறுமைக் கோட்டில் இந்தத் தரவைப் பயன்படுத்தினால், உங்கள் மதிப்பீடு குறையும். NSSOவின் புதிய வழிமுறைக்கு ஒரு புதிய வறுமைக் கோட்டை உருவாக்க மிகச் சிலரே முயற்சித்துள்ளனர். இது ஒரு பெரிய இடைவெளியாகும்.


என்.ஆர். பானுமூர்த்தி : நாம் ஆய்வு முறையை மேம்படுத்த வேண்டும். கடந்த ஏழு நாட்களில் அல்லது கடந்த மாதத்தில் சில செலவுகள் செய்யப்பட்டிருக்காது என்பதால், நாங்கள் நகர்ப்புற மறுவளர்ச்சிப் பகுதியுடன் (Urban Redevelopment Area (URA)) செல்ல முடியாது. இப்போது நாம் நுகர்வு பற்றிய சற்று பரந்த அம்சத்தைப் பார்க்கிறோம். நீங்கள் தகவல் அறிக்கையைப் பார்த்தால், மொத்த நுகர்வுக் தொகுப்பில் 50%-க்கும் குறைவாகவே உணவுப் பொருட்கள் உள்ளன.


 எனவே, நாம் உணவுப் பொருட்களுக்கு மட்டும் செலவு செய்யாமல், வீட்டுக்குத் தேவையான பிற சேவைகளைப் பார்க்கிறோம் என்பதை இது காட்டுகிறது. அந்த வகையில் நாம் பழைய வழிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய விமர்சனம் இரண்டு சுற்றுகளுக்கு இடையில் 17%-க்கும் அதிகமான வறுமை குறைவதற்கான மதிப்பீட்டைப் பற்றியது. நாம் எந்த வறுமைக் கோட்டைப் பயன்படுத்தினாலும், ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று நான் கூறுவேன். இந்த சரிவு 2011-12 மற்றும் 2023-24 க்கு இடையில் சுமார் 17% அல்லது அதற்கு மேல் இருக்கும்.


கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வறுமை பற்றி நமக்கு என்ன தெரியும்?


பி.சி. மோகனன் : கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கும் இடையிலான நுகர்வு இடைவெளி குறைந்து வருவதாக தரவு காட்டுகிறது. இதன் அடிப்படையில், கிராமப்புறங்கள் மேம்பட்டு வருகின்றன. இருப்பினும், கிராமப்புறம் என்றால் என்ன என்பது பற்றிய எங்கள் யோசனை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த கிராமப்புறங்களில் பெரும்பகுதி உண்மையில் நகர்ப்புற அல்லது புறநகர்ப் பகுதிகளாகும். 


கடந்த காலத்தில், உணவுச் செலவு கிராமப்புற நுகர்வின் மிகப்பெரிய பகுதியாக இருந்தது. ஆனால் 2022-23 தரவுகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பல விதத்தில் நுகர்வு தற்போது ஒரே மாதிரியாக இருப்பதைக் காட்டுகின்றன. இதன் பொருள், கிராமப்புற நுகர்வு மிகவும் மாறுபட்டதாகிவிட்டது. இதை நன்கு புரிந்துகொள்ள, கிராமப்புறம் என்றால் என்ன, நகர்ப்புறம் என்றால் என்ன என்பதை வரையறுக்க புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட தெளிவான புள்ளிவிவர அடிப்படை நமக்குத் தேவை.


என்.ஆர். பானுமூர்த்தி : கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையே தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளை நகர்ப்புறங்களுக்கு மாற்றத் தேர்வுசெய்தால், நகர்ப்புற வறுமை தற்போதுள்ள ஆரம்ப மதிப்பீடுகளை விட மிக வேகமாகக் குறைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். எப்படியிருந்தாலும், மொத்தத்தில், ஏழைகளின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சியைக் காண்கிறோம், ஆனால் நுகர்வு அடிப்படையில், பொதுக் கொள்கை தலையீடுகளைப் பார்க்க வேண்டும்.


இந்தியாவில் வறுமைக் கோட்டை உயர்த்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?


பி.சி. மோகனன் : விவசாய ஆய்வுகளுக்கான அறக்கட்டளையின் ஒரு ஆய்வுக் கட்டுரை, 2022-23 குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (HCES) தரவுகளில் ரங்கராஜன் முறையைப் பயன்படுத்தியது. அவர்கள் மக்கள் தொகையில் சுமார் 25% பேர் வறுமையில் வாழ்கிறார்கள் என்று அவர்கள் மதிப்பிட்டனர். இருப்பினும், இந்த வழியில் வறுமைக் கோட்டைப் புதுப்பிப்பது ஒரு துல்லியமான மதிப்பீட்டைக் கொடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு வழிமுறையில் நாம் உடன்பட வேண்டும். அரசாங்கம் அதை ஆதரிக்க வேண்டும். ஆனால், இது நடக்க வாய்ப்பில்லை.


என்.ஆர். பானுமூர்த்தி : ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) வறுமைக் கோட்டை ஒரு நாளைக்கு $2.15 என வரையறுக்கிறது. அவர்களின் மதிப்பீடுகள் 2019-ம் ஆண்டில் வறுமை சுமார் 12.9% ஆக இருந்ததைக் காட்டுகின்றன. எனவே, டாக்டர் மோகனன் மேற்கோள் காட்டிய 25% புள்ளிவிவரத்துடன் நான் உடன்படவில்லை. நிதி ஆயோக்கின் மதிப்பீடுகளும் அந்த எண்ணிக்கையை ஆதரிக்கவில்லை. இருப்பினும், வறுமைக் கோட்டை மதிப்பிடுவதற்கு நமக்கு ஒரு தெளிவான வழிமுறை தேவை என்ற டாக்டர் மோகனனுடன் நான் உடன்படுகிறேன். அதே நேரத்தில், நாம் ஒற்றை வறுமைக் கோட்டில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. UNDP-ன் குறியீட்டில் 10 குறிகாட்டிகள் உள்ளன, இந்தியாவின் குறியீட்டில் 12 உள்ளன. இந்த விமர்சனம் செல்லுபடியாகுமா?


என்.ஆர். பானுமூர்த்தி : UNDP அனைத்து நாடுகளுக்கும் ஒரே முறையைப் பயன்படுத்துகிறது. நுகர்வு தொகுப்பில் என்ன இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் ஒரு கட்டமைப்பை இது வழங்குகிறது. இருப்பினும், இந்த முறையைத் தனிப்பயனாக்குவது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும். இதற்கான தொகுப்பை விரிவுபடுத்துவது சரியான அணுகுமுறை ஆகும். UNDP குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள 10 குறிகாட்டிகளில் வங்கிக் கணக்குகள் மற்றும் மகப்பேறு ஆரோக்கியத்தை (maternal health) நாங்கள் சரியாகச் சேர்த்துள்ளோம்.


பி.சி. மோகனன் : பல பரிமாண வறுமையானது, நீங்கள் குறிப்பிட்ட குறிகாட்டியை இழந்துவிட்டீர்களா இல்லையா என்பதை உங்களுக்குச் சொல்வதால், அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. இப்போது குடும்பத்திற்குப் பொருந்தாத பல குறிகாட்டிகள் உள்ளன. உதாரணமாக, உங்களுக்கு குழந்தை இல்லாதபோது, ​​ஒரு குழந்தை தொடர்பான அனைத்து குறிகாட்டிகளும் பொருத்தமானவை அல்ல. 


நீங்கள் மின்சாரம், வங்கிக் கணக்கு மற்றும் பிற அடிப்படை சேவைகளை அணுகியவுடன், எதிர்காலத்தில் அவற்றை இழக்க மாட்டீர்கள். இந்தக் குறியீடு அதிகரிக்காது. குறிகாட்டிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதன் காரணமாக வறுமை மதிப்பீடுகள் குறைவாகவே இருக்கும். இந்த சேவைகளை பின்னர் இழக்கும் அபாயம் இல்லை. இருப்பினும், வருமான பாதிப்பை நாங்கள் அளவிடுவதில்லை, அதைச் செய்யத் தொடங்க வேண்டும்.


பி.சி. மோகனன் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர். என்.ஆர். பானுமூர்த்தி மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குநராக உள்ளார்.




Original article:

Share: