அரசியலமைப்பு அமைப்புகள்:
அரசியலமைப்பு அமைப்புகள் (Constitutional bodies) என்பது அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். இத்தகைய அமைப்புகளின் அமைப்பு முறை, அதிகாரங்கள் மற்றும் கடமைகள் அதில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அமைப்புகள் நிர்வாகப் பணிகளுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. இந்த அமைப்புகள் அரசாங்க அதிகாரத்தின் மீதான சரிபார்ப்புகள் மற்றும் சமநிலையுடன் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC), நிதி ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(CAG), பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையங்கள் மற்றும் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆகியவை அரசியலமைப்பு அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory bodies):
நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சட்டப்பூர்வ அமைப்புகள் (Statutory bodies) முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்புகள் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளாகும். அவை அரசியலமைப்பிலிருந்து நேரடியாக இல்லாமல் சட்டத்திலிருந்து தங்களுக்கு தேவையான அதிகாரத்தைப் பெறுகின்றன.
சட்டப்பூர்வ அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள்:
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தேசிய மகளிர் ஆணையம் (NCW), இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை ஆகும்.
சட்டப்பூர்வமற்ற அமைப்புகள் (Non-statutory bodies):
சட்டப்பூர்வமற்ற அமைப்புகள், நிர்வாக அல்லது ஆலோசனை அமைப்புகள் (executive or advisory bodies) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நிர்வாக உத்தரவுகள் அல்லது நிர்வாகத் தீர்மானங்களால் உருவாக்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டப்பூர்வ அமைப்புகள் போன்று அதற்கு சட்டப்பூர்வ ஆதரவு இல்லை.
சட்டப்பூர்வமற்ற அமைப்புகளின் எடுத்துக்காட்டுகளில் திட்டக் குழு இப்போது இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனமாக (National Institution for Transforming India (NITI Aayog)) மாற்றப்பட்டுள்ளது. பணிக்குழுக்கள் மற்றும் சமூக மேம்பாடு அல்லது பொருளாதார சீர்திருத்தம் போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.