தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்ன? -குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்: 


  • நாட்டின் உச்ச தணிக்கை அமைப்பான CAG, சமீபத்திய ஆண்டுகளில் ஒரு டஜன் தணிக்கை அறிக்கைகளை டெல்லி லெப்டினன்ட் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி அரசு அவற்றை சட்டசபையில் சமர்பிக்காததால், பாஜகவின்  சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். 


  • அரசியலமைப்பின் பகுதி 5-ல் உள்ள 148 முதல் 151 பிரிவுகள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) நியமனம், கடமைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளைப்  பற்றி குறிப்பிடுகிறது. 


  • தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம் (Comptroller and Auditor General’s (Duties, Powers and Conditions of Service) Act) (1971), CAGயின் பணி நிபந்தனைகளை நிர்ணயித்து, அவர்களின் அலுவலகத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை வரையறுக்கிறது. மேலும், பல சட்டங்கள் CAGக்கு அதிகாரம் அளிக்கின்றன.  உதாரணமாக, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை  சட்டத்தின்  (Fiscal Responsibility and Budget Management Act) (2003), விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும் பணியை CAGக்கு வழங்க மத்திய அரசுக்கு அனுமதிக்கிறது. பின்னர், இந்த மறுஆய்வு அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் தணிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, CAG மாநில அரசாங்க கணக்குகளையும் (நிதி மற்றும் ஒதுக்கீடுகள்) பராமரிக்கிறது. அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய அங்கீகாரத்தை வழங்குகிறது. மேலும், சேவை செய்யும் ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளை பராமரிக்கிறது. 


  • CAG மூன்று வகையான தணிக்கைகளை நடத்துகிறது: அவை, இணக்க தணிக்கை (compliance audit), அல்லது பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விதிகள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதற்கான மதிப்பீடு; செயல்திறன் தணிக்கை, அல்லது திட்டங்கள் அல்லது திட்டங்களை செயல்படுத்துவதற்கான மதிப்பீடு; மற்றும் நிதித் தணிக்கை, அல்லது அரசின் கணக்குகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகளின் சான்றிதழ் ஆகியவற்றை தணிக்கை செய்கிறது. 


  • பிரிவு 151 CAG அறிக்கைகளை நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்ய வழிவகை செய்கிறது. ஆனால், காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் அரசுகள் பெரும்பாலும் CAG தணிக்கை அறிக்கைகளை சரியான நேரத்தில் வெளியிடுவதில்லை. 


  • CAG அறிக்கை அவையில் வைக்கப்பட்ட பிறகே வெளியிடப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கைகளை பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC))  ஆய்வு செய்து அரசின் பதிலைப் பெறுகிறது. பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுக் கணக்குக் குழு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது. 2019ஆம் ஆண்டு முதல் பொதுக் கணக்குக் குழு,  கடந்த ஆண்டு ஜூலை வரை 152 அறிக்கைகளை மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைகளில் CAG தணிக்கைகள் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய மதிப்புரைகள் அடங்கும்.


  • தணிக்கை அறிக்கைகள் கருவூலத்திற்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் நடைமுறை இழப்புகளை எடுத்துக்காட்டுகின்றன மற்றும் விதிகள் மற்றும் நடைமுறைகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் பரிந்துரைகளையும் வழங்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய CAG அறிக்கைகளில் ஒன்று, நவம்பர் 2010ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட     2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் மற்றும் ஒதுக்கீடு குறித்த அறிக்கையாகும். 


உங்களுக்குத் தெரியுமா?: 


  • அரசியலமைப்பு அமைப்புகள் என்பவை அரசியலமைப்பில் வெளிப்படையாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள், கடமைகள் மற்றும் கட்டமைப்புகளைக் கொண்ட நிறுவனங்கள் அல்லது அதிகாரிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் நிர்வாகப் பணிகளுக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில், அவை அரசாங்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சரிபார்ப்புகள் மற்றும் சமநிலைகளாகச் செயல்படுகின்றன.


  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI), ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), நிதி ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG), SC, ST மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையங்கள் மற்றும் இந்திய தலைமை வழக்கறிஞர் ஆகியவை அரசியலமைப்பு அமைப்புகளின் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.


  • அரசியலமைப்பு அமைப்புகளைத் தவிர, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் சட்டரீதியான அமைப்புகளும் உள்ளன. சட்டரீதியான அமைப்புகள் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் ஒரு சட்டத்தால் நிறுவப்பட்ட நிறுவனங்கள், அரசியலமைப்பிலிருந்து நேரடியாக அல்லாமல் சட்டமியற்றுவதன் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பெறுகின்றன. 


  • இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC), பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவை சட்டப்பூர்வ அமைப்புகளின் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.


  • மறுபுறம், நிர்வாக அல்லது ஆலோசனை அமைப்புகள் என்றும் அழைக்கப்படும் சட்டபூர்வமற்ற அமைப்புகள், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் சட்டத்தால் அல்லாமல் நிர்வாக உத்தரவு அல்லது நிர்வாகத் தீர்மானத்தால் நிறுவப்பட்ட அமைப்புகள் அல்லது குழுக்கள் ஆகும். அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. மேலும், சட்டரீதியான அமைப்புகளைப் போல அவற்றை ஆதரிக்கும் சட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்காது.



Original article:

Share: