தற்போதைய செய்தி:
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI), வாக்காளர் பதிவுகளை ஆதார் தரவுத்தளத்துடன் இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (Unique Identification Authority of India (UIDAI)) இணைந்து செயல்படும். இதற்கிடையில், ஆதார் விவரங்களைப் பகிர்வது விருப்பத்திற்குரியது என்பதை தெளிவுபடுத்த சட்ட அமைச்சகம் படிவம் 6Bஐ புதுப்பிக்கும். இருப்பினும், தங்கள் ஆதாரை வழங்க வேண்டாம் என்று தேர்வுசெய்யும் வாக்காளர்கள் தங்கள் முடிவிற்கான காரணத்தைக் கூற வேண்டும்.
முக்கிய அம்சங்கள்:
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் UIDAI ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான இந்த ஆண்டின் முதல் சந்திப்பு ஆகும். இதில் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology (MeitY)), செயலாளர் எஸ். கிருஷ்ணன், சட்டமன்றத் துறை செயலாளர் ராஜீவ் மணி மற்றும் UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி குற்றம் சாட்டிய பின்னணியில் இது நடைபெற்றது.
ஒரு மணி நேர விவாதத்தில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் அரசு அதிகாரிகள், வாக்காளர் தரவுத்தளத்தை ஆதாருடன் இணைப்பது தொடர்பான நன்மை, தீமைகள் மற்றும் சட்டப்பூர்வ விஷயங்களை விவாதித்ததாக அறியப்படுகிறது.
செவ்வாய்க் கிழமை கூட்டத்தில் ஆணையத்தின் செய்தி அறிக்கை இதைத் திட்டவட்டமாகக் கூறவில்லை என்றாலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act), 1950ன் பிரிவு 23(4), 23(5) மற்றும் 23(6) ஆகியவற்றின் படி இணைக்கப்படும் என்றும், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் UIDAIயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடையே தொழில்நுட்ப ஆலோசனைகள் விரைவில் தொடங்கப்படும்" என்றும் கூறியது.
உங்களுக்குத் தெரியுமா?:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 23(4), 23(5) மற்றும் 23(6) ஆகியவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
1. வாக்காளர் அடையாளத்தைச் சரிபார்க்க வாக்காளர் பதிவு அதிகாரி ஆதாரைக் கேட்கலாம்.
2. ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்களை தாமாக முன்வந்து வழங்கத் தேர்வுசெய்யலாம்.
3. ஆதார் தகவலை வழங்கவில்லை என்பதற்காக யாரையும் வாக்காளர் பதிவு மறுக்கவோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவோ முடியாது.
படிவம் 6B வாக்காளர்கள் தங்கள் ஆதாரை வழங்க மறுக்க அனுமதிக்காது. இது இரண்டு விருப்பங்களை மட்டுமே வழங்குகிறது. அதாவது, ஆதாரை வழங்கவும் அல்லது ஆதார் எண் இல்லை" என்று கூற மட்டுமே முடியும். இந்த முறை மாற்றப்படும். ஆனால், வாக்காளர்கள் தங்கள் ஆதாரை ஏன் வழங்கவில்லை என்பதை இன்னும் விளக்க வேண்டும்.
ஜி நிரஞ்சன் vs இந்திய தேர்தல் ஆணையம் (G Niranjan vs. Election Commission of India) வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் (ECI), செப்டம்பர் 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் படிவங்களில் தேவையான மாற்றங்களைச் செய்வதாகத் தெரிவித்தது. மேலும், அந்த நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட படிவங்களில் பொருத்தமான தெளிவுபடுத்தும் மாற்றங்களை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
தேர்தல் ஆணையம் இந்த சிக்கலை ஒப்புக்கொண்டது. சில மாநில அதிகாரிகள் வாக்காளர் அடையாள எண்களை உருவாக்க தவறாக எண்ணெழுத்து வரிசைகளைப் பயன்படுத்தியதாகக் கூறியது. இருப்பினும், ஒரே அடையாள எண்ணை (EPIC) வைத்திருப்பது வாக்காளர் மோசடியைக் குறிக்காது என்று ஆணையம் தெளிவுபடுத்தியது. ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட தகவல்கள், தொகுதி மற்றும் வாக்குச் சாவடி மையம் போன்ற தனித்துவமான விவரங்கள் உள்ளன என்றும் விளக்கியது.