மூன்றாம் மொழியாக இந்தி கற்பது அவசியமா? -கே.வி. பிரசாத்

 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை, மாணவர்கள் தங்கள் உள்ளூர் மொழி அல்லது தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் ஒரு பிராந்திய மொழியையும் குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரை கற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. கூடுதல் பிராந்திய மொழியை மாநிலங்கள் தேர்வு செய்யலாம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இருப்பினும், மும்மொழி கொள்கைக்கான தேசிய கல்விக் கொள்கையின் அழுத்தம் தமிழ்நாடு மற்றும் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த வாரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இந்தியை ஊக்குவிக்கும் "இந்துத்துவா கொள்கை" என்று அழைத்தார். மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக்கொள்வது அவசியமா? என்று கே.வி. பிரசாத் நடத்தும் உரையாடலில் யோகேந்திர யாதவ் மற்றும் டி.எம். கிருஷ்ணா இதைப் பற்றி விவாதிக்கின்றனர்.


மூன்றாம் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டுமா?


யோகேந்திர யாதவ்: நிச்சயமாக இல்லை. முதலாவதாக, கூட்டாட்சி மற்றும் பன்முகத்தன்மைக்கு மரியாதை ஆகியவை இந்தியாவிற்கு அடித்தளமாக உள்ளது. எனவே, எந்த மாநிலத்தையும் மீதும் எதையும் திணிக்க முடியாது. மொழி குறித்து நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால், அவை ஒருமித்த கருத்து மூலம் தீர்க்கப்படவேண்டும். திணிப்பதன் மூலம் அல்ல. திணிப்பு பிரச்சினையில் நான் முழுமையாக தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மற்றும் தமிழ்நாட்டு மக்களுடன் இருக்கிறேன்.


டி.எம். கிருஷ்ணா: நான் கேட்டால், ஏன் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்? தெளிவாகச் சொல்வதானால், மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதைப் பற்றி நாங்கள் பேசவில்லை. அது எப்பொழுதும் நடந்துகொண்டு இருக்கிறது. மாணவர்களுக்கு கல்விச் சுமை அதிகம் என்று கூறி, வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் உள்ள அத்தியாயங்களைத் தேர்ந்தெடுத்து நீக்கும் அரசு, வேறு மொழியைக் கற்பது நிச்சயம் அவர்களுக்குச் சுமைதான் என்பதை புரிந்துகொள்ளக்கூடத் தயாராக இல்லை. மேலும், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நேரம் அல்லது தொலைதூர எதிர்காலம் பற்றிய கற்பனை இல்லை. எனவே எதிர்கால நன்மை என்ற பெயரில் மூன்றாம் மொழியைக் கற்கச் சொல்வது அடிப்படையில் ஒரு திணிப்பு முயற்சியாகும். மேலும், மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒற்றுமையை உருவாக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது ஒரு மாயை. ஒரு மொழியை ஒருவர் மீது திணிப்பது ஒற்றுமை உருவாக்குவது அல்ல.


யோகேந்திர யாதவ்: மூன்று மொழிகளைக் கற்பித்தல் என்ற கருத்தை ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் இந்தியின் கட்டாயத்திலிருந்து நாம் பிரித்தவுடன், இந்தப் பிரச்சினையைப் பற்றி நாம் உணர்ச்சிவசப்படாமல் விவாதிக்கலாம். கல்வியின் சுமை குறித்த கவலைகளை நிபுணர்கள் ஏற்கனவே கையாண்டுள்ளனர். நீங்கள் மூன்றாம் மொழியைக் கற்பித்தால், அது உங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மொழிக்கு மட்டுமே உதவும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். எனவே கல்வியியல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் மும்மொழி கொள்கை தீவிரமாக பரிசீலிக்கத் தகுதியானது என்று நான் நம்புகிறேன். நடைமுறையைப் பொறுத்தவரை, சில பள்ளிகள் ஏற்கனவே மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், அவை அரசியலமைப்பில் உள்ள 22 மொழிகளுக்கும் பதிலாக மூன்று அல்லது நான்கு மொழி விருப்பங்களை மட்டுமே வழங்குகின்றன. அரசியல் விருப்பமும், எதையும் கற்பிக்கும் திறனும் இருந்தால் இந்த விவகாரங்களை சரி செய்ய முடியும்.


கூடுதல் மொழியைக் கட்டாயமாகக் கற்பது மாணவர்களுக்குச் சுமையாக இருந்தால், பள்ளிகளுக்குத் தகுதியான ஆசிரியர்களும் நிதியும் தேவைப்படுவதால், அது மாணவர்களுக்குச் சுமையாக அமையாதா?


டி.எம். கிருஷ்ணா: உத்தரபிரதேசத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரால் நிர்வகிக்கப்படுகின்றன. பீகாரில் மிகப்பெரிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவே, வளங்களைப் பொறுத்தவரைகூட, இந்தக் கொள்கை அர்த்தமற்றது. வளங்கள் குறைவாக இருக்கும்போது, ​​முதன்மைப் பாடங்களை எவ்வாறு சிறப்பாகக் கற்பிக்க முடியும் என்பதைப் பார்ப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். வகுப்பறையில் கற்றல் மற்றும் தொடர்புக்கு தாய்மொழியே முக்கியப் பங்கு வகிக்கும்போது ​​ஆங்கிலமும் இருக்கும்போது, ​​வேறொரு மொழியை அதனுடன் சேர்ப்பது அவசியமில்லை என்று நான் நம்புகிறேன்.


திட்டங்களுக்காக ஒன்றிய அரசு நிதியை வழங்குவதற்கு மும்மொழிக் கொள்கையை முன் நிபந்தனையாக்குவது நியாயமா?


யோகேந்திர யாதவ்: மானியங்களை நிறுத்தி வைப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் ஆளுநரின் தலைமையில் தமிழ்நாட்டின் சுயாட்சி மீதான அரசியல் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இதனால் தான் திமுக மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களும் அவமரியாதை செய்யப்படுவதாக உணர்கிறார்கள்.


டி.எம். கிருஷ்ணா: இது அரசியலமைப்புக்கு எதிரானது, நியாயமற்றது மற்றும் அடிப்படையற்றது. சிலர் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், மும்மொழிக் கொள்கை குறித்து மக்கள் முடிவு செய்யவில்லை. ஒன்றிய அரசாங்கத்தில் உள்ள தனிநபர்கள் இந்த முடிவை எடுத்தனர்.


கூடுதல் மொழியைக் கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கல்விக் கொள்கைக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?


யோகேந்திர யாதவ்: எனது சந்தேகம் என்னவென்றால், எதிர்ப்பு என்பது கல்வி சார்ந்த கவலைகளால் வரவில்லை. இது இரட்டைத் தரத்துடன் அமைதியின்மையிலிருந்து வெளிப்படுகிறது. வெளிப்படையாக, வட இந்தியா மும்மொழிக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. தென் மற்றும் கிழக்கு மாநிலங்கள் இந்தி கற்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இந்தி பேசுபவர்கள் சமஸ்கிருதத்தைத் தேர்ந்தெடுப்பதன்மூலம் வேறு மொழியைக் கற்றுக்கொள்வதைத் தவிர்த்தனர். இந்தக் கொள்கை மற்றவர்களை இந்தி கற்க கட்டயப்படுத்துகிறது. ஆனால், இந்தி பேசுபவர்கள் பிற பிராந்திய மொழிகளைக் கற்க வேண்டியதில்லை. இந்த அநீதி பன்மொழிப் பேச்சு பற்றிய விவாதத்தை மிகவும் சிக்கலாக்கியுள்ளது.


டி.எம். கிருஷ்ணா: பன்மொழிப் புலமை என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, கல்வி சார்ந்த பிரச்சினையும் கூட. கற்பித்தல் முறைகள் மாறிவிட்டன, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பாடு சார்ந்த மற்றும் நேரடி கற்றலில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டு மொழிகள் இருப்பது ஏற்கனவே பன்மொழித் திறனை ஊக்குவிக்கிறது. பன்மொழித் திறன் என்பது வெறும் மொழி பற்றியது மட்டுமல்ல, பன்முகத்தன்மையை கற்பது பற்றியது. மக்கள் உறவுகள், கலாச்சார உறவுகள் மற்றும் உணர்ச்சித் தொடர்புகள் மூலம் மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். கலாச்சாரத் தன்மையும் உணர்ச்சி ரீதியான தொடர்புகளும் மக்களை ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வைக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


இந்தி பேசும் பல மாநிலங்களில், மும்மொழிக்கொள்கையை பொருட்படுத்தாமல், ஒருமொழியே (Monolingualism) பிரதானமாக உள்ளது.


யோகேந்திர யாதவ்: பிரச்சனை என்னவென்றால், வட இந்தியாவில் பலர், குறிப்பாக இந்தி பேசும் பகுதிகளில், எப்படியாவது இந்தி மற்ற மொழிகளைவிட அதிக சலுகை பெற்ற மொழி என்று தவறாக நம்புகிறார்கள். வட இந்தியாவில் பலர் இந்தியை "தேசிய மொழி" என்று அழைக்கிறார்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இது இந்தி பேசாதவர்களை வருத்தப்படுத்துகிறது. இன்று நமக்குத் தெரிந்த இந்தி, உலகின் பழமையான மற்றும் பணக்கார மொழிகளில் சிலவான தமிழ் அல்லது கன்னடத்தைப் போல் இல்லாமல், சமீபத்திய மற்றும் இளமையான மொழியாக உள்ளது.


டி.எம். கிருஷ்ணா: இதைப் பற்றிய தரவுகளைப் பெறுவது கடினம், ஆனால் வட இந்தியாவில் மூன்று மொழிகளைக் கற்பிப்பதாகக் கூறும் எத்தனை பள்ளிகள் உண்மையில் அதைச் செய்கின்றன என்பதை அறிய விரும்புகிறேன். கொள்கை உண்மையில் பின்பற்றப்படுகிறதா?


யோகேந்திர யாதவ்: நான் சொன்னது போல், பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்துடன் இந்தி கற்பிக்கப்படுகிறது. சமஸ்கிருதம் மூன்றாம் மொழியின் தேவையைத் தவிர்க்கும் ஒரு வழியாகிவிட்டது. எனவே, தொழில்நுட்ப ரீதியாக, ஆம், இது பின்பற்றப்படுகிறது.


டி.எம். கிருஷ்ணர்: தமிழ்மொழிக்கு ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளம் உள்ளது. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட அல்லது சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்ட மொழிகளைப் போல் இல்லாமல், தமிழ் ஒரு தனித்துவமான மொழியாகத் தனித்து நிற்கிறது. அடிப்படையில், தமிழ் பேசுபவர் இந்தி அல்லது அதன் உறவினர் மொழிகளைக் கற்றுக்கொள்வதுகூட மிகவும் கடினமான பணியாகும். தமிழ்நாட்டில், மக்கள் தாங்களாகவே பிற மொழிகளைக் கற்றுக்கொண்டனர். தமிழ் முற்றிலும் மாறுபட்ட இலக்கணம் மற்றும் அமைப்பைக் கொண்டிருப்பதால், சமஸ்கிருதத்தின் மீதான புதிய கல்விக் கொள்கையின் வலுவான கவனம் தமிழ் பேசுபவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.


யோகேந்திர யாதவ்: நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரே மொழியாக சமஸ்கிருதத்தை நிலைநிறுத்துவது மிகப்பெரிய தவறு. மேலும், சமஸ்கிருதம் பாரம்பரியக் கற்றலைப் புகுத்துவதற்காகக் கற்பிக்கப்படவில்லை. மாறாக, மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்காககக் கற்பிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இந்தி பேசுபவர்கள் புதிய மொழியையோ அல்லது எழுத்து வடிவத்தையோ கற்றுக்கொள்வதில்லை.


தற்போதைய நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோக்கி வழி என்ன என்று நீங்கள் முன்மொழிகிறீர்கள்?


யோகேந்திர யாதவ்: நமது கலாச்சாரங்களில் உள்ளார்ந்த பன்மொழிப் பண்பாட்டை வளர்ப்பதற்கு, ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒரு நல்ல யோசனையாகும். ஆனால், இதை யார் மீதும் திணிக்க முடியாது. மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலிருந்து வேறுபட்ட ஒரு நவீன இந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். வடக்கில், ஒரு தென்னிந்திய மொழியாக இருக்க வேண்டும். உண்மையான கொள்கை தேவைப்பட்டது. ஆனால், ஒருபோதும் அமல்படுத்தப்படவில்லை.


டி.எம். கிருஷ்ணா : இந்த தனித்துவம் தான் இரண்டு மொழிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதற்குக் முக்கிய காரணமாகும். நீங்கள் பேசும் ஆங்கிலம் ஏற்கனவே இந்தி மற்றும் தமிழிலிருந்து மிகவும் வேறுபட்டது. எனவே, வேறு மொழியைச் சேர்ப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.


யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியாவின் நிறுவன தேசியத் தலைவர், டி.எம். கிருஷ்ணா, கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் எழுத்தாளர்.



Original article:

Share: