பாலினத்திற்கான வரவு செலவு அறிக்கை சாதி, வகுப்பு, பாலினம் மற்றும் டிஜிட்டல் பிளவு போன்ற உண்மையான காரணிகளை புறக்கணித்தால், அது நமது நாட்டுப் பெண்களைத் தொடர்ந்து தோல்வியடையச் செய்யும்.
2025-26-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பாலினத்திற்கான வரவு செலவு அறிக்கை இப்போது ₹4.49 லட்சம் கோடியாக உள்ளது. பணவீக்க விகிதம் சுமார் 3.61% ஆக இருந்தபோதும், அதிகரித்த ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
ஒதுக்கீடுகள் அதிகரித்த போதிலும், மோசமான முடிவுகள் இன்னும் தொடர்கின்றன
பாலினத்திற்கான வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடுகள் சீராக 2022-23-ல் ₹1.71 லட்சம் கோடியாகவும், 2023-24-ல் ₹2.38 லட்சம் கோடியாகவும், 2024-25-ல் ₹3.27 லட்சம் கோடியாகவும், 2025-26-ல் ₹4.49 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளன. இது பாலின இடைவெளியைக் குறைக்கும் அரசின் நோக்கத்தைக் காட்டுகிறது. இருப்பினும், பெண்களுக்கான பொருளாதார நன்மைகள் எதிர்பார்த்த அளவு வளரவில்லை. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள்தொகையைச் சேர்ந்த பெண்களுக்கு, குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடியின சாதியின பெண்கள், மிகக் குறைந்த அளவிலான நன்மைகளைப் பெற்றுள்ளனர். உதாரணமாக, இந்த ஆண்டு, 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) திட்டத்திற்கு ₹300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினரின் நலனை நோக்கமாகக் கொண்ட தார்தி அபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியானுக்கு (Dharti Aba Janjatiya Gram Utkarsh Abhiyan) ₹75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா 20 ஆண்டுகளாக பாலினத்திற்கான வரவு செலவு அறிக்கையை உருவாக்கி வருகிறது. ஆனால் சாதி, வகுப்பு மற்றும் பழங்குடி அடையாளங்களை உள்ளடக்கிய கடந்தகால மதிப்பீடுகளைப் பயன்படுத்தவில்லை. இதனால் விளிம்புநிலைப் பெண்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.
ராஜஸ்தானில் சுரங்கத் தொழிலாளர்களின் விதவைப் பெண்களுடன் பணிபுரியும் டாங் விகாஸ் சன்ஸ்தான் பகுதியைச் சேர்ந்த விகாஸ் சிங் சுட்டிக்காட்டுவது போல், “திட்டங்கள் காகிதத்தில் மிகவும் நன்றாக இருக்கின்றன. ஆனால், டிஜிட்டல் மயமாக்கல் புதிய தடைகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு இல்லை. இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் நலத்திட்டங்களை அணுகுவது கடினமாக உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இடைத்தரகர்களை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேம்படுத்த டிஜிட்டல் கல்வியறிவு திட்டங்களில் அவசர முதலீடுகளை செய்ய வேண்டும்.
காலாவதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு, பிற இடைவெளிகள்
பட்டியல் மற்றும் பழங்குடியின சாதி பெண்கள் பல அடுக்கு பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். எனவே, வரவு செலவு அறிக்கை அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். 2025-26-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், பழங்குடியினர் விவகார அமைச்சகம் ₹14,925.81 கோடியைப் பெற்றது. இது கடந்த ஆண்டின் ₹10,237.33 கோடியைவிட 45.79% அதிகமாகும். இருப்பினும், பட்டியல் சாதியினர் துணைத் திட்டம் (Scheduled Castes Sub-Plan (SCSP)) மற்றும் பழங்குடியின துணைத் திட்டங்களுக்கான (Tribal Sub-Plan (TSP)) நிதி குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.
இந்த துணைத் திட்டங்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சாதி வளர்ச்சியை ஆதரிப்பதற்காக பல்வேறு அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்டங்களின் முக்கிய பகுதிகளாகும். SCSP மற்றும் TSP-க்கான மொத்த நிதி மிகவும் முக்கியமானது. இது மக்கள் நலனுக்கான வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. ஆனால் இந்தத் திட்டங்களுக்குள் பாலின ரீதியாகப் பிரிக்கப்பட்ட தரவுகள் இல்லாததால், பட்டியல் மற்றும் பழங்குடியின சாதி பெண்கள் மீதான அவற்றின் உண்மையான தாக்கத்தை மதிப்பிடுவது சவாலாக உள்ளது. இந்தியாவில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் தற்போதைய தரவு காலாவதியானதாக உள்ளது. இந்த இடைவெளி, புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இல்லாமல் அரசாங்கக் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பது குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இது பொறுப்புணர்வை, வழிமுறைகளை பாதிக்கிறது.
தேசிய தலித் மனித உரிமைகள் பரப்புரையின் (National Campaign on Dalit Human Rights (NCDHR)) "தலித் ஆதிவாசி பட்ஜெட் பகுப்பாய்வு 2023-24" அறிக்கையின்படி, SCSP மற்றும் TSP-ன் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் 35%-க்கும் அதிகமானவை தேவையற்ற அரசாங்க விதிமுறைகள் (red tape) மற்றும் சமூக ஈடுபாடு இல்லாததால் பயன்படுத்தப்படவில்லை. சிக்கலான ஆவணங்கள், நடைமுறை தடைகள், குறைவான மக்கள் தொடர்பு மற்றும் மோசமான தகவல் பகிர்வு ஆகியவை பெண்கள் நலத்திட்டங்களைப் பெறுவதைத் தடுக்கின்றன. பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள சிக்கலான நிதிச் சொற்களைப் பெண்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த திட்டங்கள், மானியங்கள் மற்றும் அரசாங்க ஆதரவிற்காக காத்திருக்கிறார்கள்.
பல திட்டங்கள் பிராந்திய, கலாச்சார மற்றும் சமூக வேறுபாடுகளை புறக்கணிக்கின்றன. குறிப்பாக, பழங்குடியின மக்கள் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல் மோசமாக உள்ளது. பழங்குடிப் பெண்களின் கல்வியறிவு விகிதம் 49.4% ஆக உள்ளது. இது 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேசிய பெண் கல்வியறிவு விகிதமான 64.63%-ஐ விட மிகக் குறைவானதாகும்.
சமாளிக்க வேண்டிய சிக்கல்கள்
ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான சந்தீப் பட்நாயக் கூறுகையில், நிதியை அதிகரிப்பது மட்டும் போதாது, அவற்றை நன்றாகப் பயன்படுத்துவதும், உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துவதும் முக்கியம். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பாலின நட்பு கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கான சக்தி மற்றும் வளங்கள் பெரும்பாலும் இல்லை. மேலும், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தடைகளில் ஒன்றாக மாறியுள்ள "சர்பஞ்ச் பதிகளின்" (sarpanch husbands”) தலையீட்டை தடுக்க அரசாங்கம் கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும்.
ஒன்றிய மற்றும் மாநில அளவில் சாதி, வர்க்கம் மற்றும் பழங்குடி அடையாளங்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப்பாய்வு செய்த பிறகு பாலினத்திற்கான வரவு செலவு அறிக்கை திட்டமிடப்பட வேண்டும். திட்டங்களை வடிவமைத்து கண்காணிப்பதில் சமூகங்களை, குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடியின சாதி பெண்களை அரசாங்கம் ஈடுபடுத்த வேண்டும். கேரளாவின் குடும்பஸ்ரீ பணி, சமூகத்தால் வழிநடத்தப்படும் திட்டங்கள் மக்களை சென்றடைவதையும் செயல்திறனையும் மேம்படுத்துவதைக் காட்டுகிறது. வெளிப்படையான கண்காணிப்பு அமைப்புகள் நிதி பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கண்காணிக்க உதவும். பாலின வரவுசெலவு செலவ அறிக்கை கண்காணிப்பு தளத்தை உருவாக்குவது பொதுமக்களின் பொறுப்புணர்வுக்கு அதிக ஊக்கத்தை அளிக்கும்.
பெண்களுக்கான வரவு செலவு அறிக்கையை அதிகரிப்பது ஒரு நல்ல படியாகும். ஆனால் உண்மையான முன்னேற்றம் சரியான செயல்படுத்தலைப் பொறுத்து இருக்கும். சாதி, வகுப்பு, பாலினம் மற்றும் டிஜிட்டல் பிளவு புறக்கணிக்கப்பட்டால், பாலினத்திற்கான வரவு செலவு அறிக்கை பெண்களுக்கு உதவாது. உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர, கொள்கைகள் சமத்துவம்,, குறியீட்டு முயற்சிகளை தாண்டி அணுகல் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும்.
பூமிகா சவுத்ரி, வணிகம் மற்றும் மனித உரிமைகள் ஆராய்ச்சியாளர் ஆவார். யுக்தி சவுத்ரி, ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் தொழிலாளர் உரிமைகள் மற்றும் நிலைத்தன்மையில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர் ஆவார்.