1930-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி, சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரையைத் காந்தி தொடங்கினார். இதன் மூலம், சட்டமறுப்பு இயக்கம் (Civil Disobedience Movement) தொடங்கப்பட்டது.
தற்போதைய செய்தி
இன்று (மார்ச் 12) மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்று சிறப்புமிக்க உப்பு யாத்திரையின் 95வது ஆண்டு நினைவு நாளாகும். அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தில் உள்ள தண்டிக்கு நடந்து சென்றார். இந்த நடைப்பயணம் மார்ச் 12 முதல் ஏப்ரல் 5, 1930 வரை 24 நாட்கள் நீடித்தது. காந்தி தண்டியில் உப்பு தயாரித்து சட்டத்தை மீறி, சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காந்தியின் கூற்றுப்படி, ஆயுதமேந்திய கிளர்ச்சியைவிட உள்நாட்டு ஒத்துழையாமை மிகவும் ஆபத்தானது என்று காந்தி நம்பினார். மக்கள் கடுமையான துன்பங்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் அதை ஒருபோதும் நிறுத்த முடியாது என்று தெரிவித்தார். சட்டமறுப்பு இயக்கம் என்பது அப்பாவி மக்கள் துன்பப்படும்போது, சக்திவாய்ந்த மாற்றத்தை உருவாக்குகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. ஏப்ரல் 6, 1930 அன்று, காந்தியும் அவரது சீடர்களும் கடலில் இருந்து உப்பு தயாரித்து உப்புச் சட்டத்தை மீறினார்கள். அவர் Free Press பிரதிநிதியிடம், "இதன் மூலம், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்" என்று கூறினார்.
2. இதன் பின்னர், இந்த இயக்கம் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு பரவியது. 60,000 பேர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். காந்தி ஸ்மிருதி வலைத்தளத்தின்படி, ஜவஹர்லால் நேரு, மகாதேவ் தேசாய் மற்றும் காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோர் முதலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேய அரசாங்கம் இந்திய தேசிய காங்கிரஸை தடை செய்தது. தாராசனாவில் உள்ள அரசாங்க உப்பு ஆலைகளைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக காந்தி மாகாண ஆளுநரிடம் கூறினார். அதைச் செய்வதற்கு முன்பு, அவர் கைது செய்யப்பட்டு யெரவ்டா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
3. காந்தி கைது செய்யப்பட்டபிறகு, அப்பாஸ் தியாப்ஜி தாராசனாவுக்கு பேரணியை வழிநடத்தினார். ஆனால், அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் சரோஜினி நாயுடு பொறுப்பேற்று பேரணியை வழிநடத்தினார். காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அமெரிக்க பத்திரிகையாளர் மில்லர் அந்தக் காட்சியை விவரித்தார். காவல்துறையினர் பேரணியில் ஈடுபட்டவர்களின் தலையில் எஃகு முனை கொண்ட குச்சிகளால் அடிப்பதை நேரில் பார்த்தார். பேரணியில் ஈடுபட்டவர்கள் எதிர்க்கவோ அல்லது தங்களைத் தற்காத்துக் கொள்ளவோ இல்லை. அவர்கள் எறிகட்டை ஆட்ட (ninepins) கட்டைகளைப் போல தரையில் விழுந்தனர்.
4. இந்தியா முழுவதும் இதேபோன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகள் நடந்தன. மக்கள் காலனித்துவ சட்டங்களை மீறி வெளிநாட்டுத் துணி மற்றும் மதுபானங்களை புறக்கணித்தனர். உப்புச் சத்தியாக்கிரகம் விரைவில் ஒரு வெகுஜன இயக்கமாக மாறியது. வங்காளத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு உப்பு தயாரிக்க தன்னார்வலர்களை அழைத்து சென்றார். பம்பாயில், கே.எஃப். நாரிமன் தலைமையிலான குழு ஹாஜி அலி தர்காவிற்கு சென்றது, அங்கு அவர்கள் அருகிலுள்ள பூங்காவில் உப்பு தயாரித்தனர்.
5. ராயத்வாடி பகுதிகளில், கிராம காவல் வரி மற்றும் வாடகையை மக்கள் செலுத்த மறுத்துவிட்டனர். காவல்துறையினருடன் வன்முறை மோதல்கள் நடந்தன. மத்திய மாகாணங்கள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில், பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் காடுகளுக்குள் நுழைந்தனர்.
6. வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (North-West Frontier Province (NWFP)), எல்லைப்புற காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான், குதாய் கித்மத்கர்கள் (சிவப்புச் சட்டைகள்) என்று அழைக்கப்படும் வன்முறையற்ற தன்னார்வலர்களின் குழுவை உருவாக்கினார். அவர்கள் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றனர். தன்னார்வலர்கள் நகரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். ஆங்கிலேயர்கள் நகரத்தை மீட்டு, சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு எதிராக தீவிர வன்முறையைப் பயன்படுத்தினர். இருப்பினும், சிவப்புச் சட்டைக்காரர்கள் அமைதியான முறையில் எதிர்த்தனர்.
7. சிட்டகாங்கில், சுர்ஜயா சென் ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சியாளர்களின் குழுவை வழிநடத்தினார். அவர்கள் உள்ளூர் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி, “சுதந்திர குடியரசு இராணுவம்” (‘Independent Republican Army’) என்ற பெயரில் ஒரு சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. மேலும், ஜலாலாபாத் மலையில் அவர்கள் கடுமையான போரில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
8. சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாட்டில் சட்டமறுப்பு இயக்கத்தை வழிநடத்தினார். ஏப்ரல் 1930-ல், உப்புச் சட்டத்தை மீறுவதற்காக திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை கடற்கரையில் உள்ள வேதாரண்யம் வரை ஒரு பேரணியை ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் துணிக்கடைகளில் மறியல் போராட்டம் மற்றும் மது எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்றது.
9. மலபாரில், நாயர் காங்கிரஸ் தலைவர் கேளப்பன் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கினார். ஒரிசாவில், கோபபந்து சவுத்ரி சட்டமறுப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். பீகாரில், ராம் பிரிக்ஷா பெனிபுரி, பேராசிரியர் அப்துல் பாரி, மற்றும் ஆச்சார்யா கிருபளானி போன்ற தலைவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தினர்.
10. காந்தி ஏன் ‘உப்பை’ தேர்ந்தெடுத்தார்? 1882ஆம் ஆண்டு உப்புச் சட்டம் (Salt Act), உப்பு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதில் ஆங்கிலேயர்கள் முழுமையான கட்டுப்பாட்டை விதித்தனர். இந்தியாவின் கடற்கரைகளில் உப்பு கிடைத்தாலும், இந்தியர்கள் அதை ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்க வேண்டிய சூழல் இருந்தது. காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்க முக்கியப் பொருளாக உப்பைத் தேர்ந்தெடுத்தார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தம்
1. ஜனவரி 31, 1930 அன்று காந்தி இர்வினுக்கு 11 அம்ச இறுதி எச்சரிக்கையை அனுப்பினார். 11 கோரிக்கைகள்: முழுமையான தடை, பரிமாற்ற விகிதத்தைக் குறைத்தல், நில வருவாயை 50% குறைத்தல், உப்பு வரியை ஒழித்தல், இராணுவச் செலவினங்களைக் குறைத்தல், உயர்நிலை சேவைகளின் சம்பளத்தைக் குறைத்தல், வெளிநாட்டுத் துணிகளுக்கான பாதுகாப்பு வரி, கடலோரப் போக்குவரத்து முன்பதிவு மசோதாவை நிறைவேற்றுதல், கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்களைத் தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், குற்றப் புலனாய்வுத் துறையை ஒழித்தல் மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
2. காந்தியின் கோரிக்கைகளை இர்வின் புறக்கணித்தபோது, காந்தி தண்டிக்கு வரலாற்று சிறப்புமிக்க உப்பு யாத்திரையைத் தொடங்கினார். பின்னர், ஜனவரி 25, 1931 அன்று, பேச்சுவார்த்தைகளைத் தொடங்க காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களை விடுவிப்பதாக மாகாண ஆளுநர் (Viceroy) இர்வின் அறிவித்தார்.
3. 5 மார்ச் 1931 அன்று, காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது டெல்லி ஒப்பந்தம் (Delhi Pact) என்றும் அறியப்பட்டது. இந்த ஒப்பந்தம் வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வழிவகுத்தது. போராட்டக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதங்கள் ரத்து செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்பட்டன. வேலைகளை ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் தயவுடன் (leniently) நடத்தப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டது. 1931-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்தனர்.