The Tamils: A Portrait of a Community என்ற புத்தகத்தின் மூலம், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஆசிரியர் உதவுகிறார். இதற்கு முன், Degree Coffee by the Yard என்ற புத்தகத்தில் சென்னையின் வாழ்க்கையை முறையை பற்றி விளக்கியுள்ளார்.
வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான சமூகம் மற்றும் அரசியல் பற்றிய விவாதங்களில் பெரும்பாலும் நிறைய தவறான புரிதல்களும் சில அவநம்பிக்கைகளும் உள்ளன. உதாரணமாக, வரலாற்று புத்தகங்கள் பெரும்பாலும் மௌரியர்கள், குப்தர்கள், சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் போன்ற வட இந்திய ஆட்சியாளர்களை மையமாகக் கொண்டுள்ளன. தொகுதி மறுவரையறை செய்வதற்கான சமீபத்திய திட்டங்கள்கூட வடக்கிற்கு சாதகமாகத் தெரிகிறது. தெற்கிலிருந்து வந்த மக்கள் பெரும்பாலும் இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய முயற்சித்துள்ளனர்.
தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையை மக்கள் புரிந்துகொள்ள நிர்மலா லட்சுமணன் உதவியுள்ளார். முதலில் அவர் தனது Degree Coffee by the Yard என்ற புத்தகத்தின் மூலம் இதைச் செய்தார். தற்போது, The Tamils: A Portrait of a Community என்ற மற்றொரு புத்தகத்தின் மூலம் இதை செய்துள்ளார்.
தமிழர்கள் எளிதான வரையறையை மீறுகிறார்கள். தமிழகம் என்று அழைக்கப்படும் பண்டைய தமிழர்களின் நிலத்தைப் பற்றி லட்சுமணன் ஆழ்ந்த அன்புடன் எழுதுகிறார். பண்டைய தமிழர்கள் தங்கள் நிலத்தை ஐந்து வகையான நிலப்பரப்புகளாகப் பிரித்ததாக அவர் விளக்குகிறார். ஒவ்வொன்றும் அந்தப் பகுதியில் காணப்படும் ஒரு சிறப்பு மலருடன் இணைக்கப்பட்டுள்ளன:
குறிஞ்சி - மலைகளிலிருந்து வரும் ஒரு அரிய மலர்
முல்லை - காடுகளிலிருந்து வரும் ஒரு இனிமையான மணம் கொண்ட மல்லிகை
நெய்தல் - கடலுக்கு அருகில் காணப்படும் ஒரு நீல நீர் அல்லி
பாலை - வறண்ட நிலங்களிலிருந்து வரும் ஒரு பாலைவன மலர்
மருதம் - ராணியின் மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது வளமான தாழ்நிலங்களில் காணப்படுகிறது
இந்தப் புத்தகம் வெறும் புவியியல் அல்லது வரலாற்றைப் பற்றியது மட்டுமல்ல. பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் சோழர்களைப் பற்றிப் பேசினாலும், ஆசிரியர் ஒரு வழக்கமான வரலாற்றாசிரியரின் மேல்-கீழ் அணுகுமுறையை எடுக்கவில்லை. முதலாம் ராஜராஜன் அல்லது ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களை முக்கியமாக மையமாகக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒரு சமூகத்தை ஒரு மாநிலமாக வடிவமைக்கும் சிறிய விஷயங்களை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.
உதாரணமாக, பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தையும், இளங்கோ அடிகள் மதுரையை "அழிவில்லா நகரம்" (“immortal city,”) என்று எவ்வாறு அழைக்கிறார் என்பதையும் ஆசிரியர் விவாதிக்கும்போது, அவர் ஒரு பரந்த கருத்தை முன்வைக்கிறார். தமிழ்நாட்டின் நகரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான வரலாறுகள் மற்றும் கதைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.
ஒரு காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை, ஒரு வறிய ஆங்கில முகவர் பிரான்சிஸ் டே தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கின்றபோது வாங்கிய சிறிய மணல் நிலமாக இருந்தது. இன்று, அது இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக விளங்குகிறது.
கோயில்கள் மற்றும் மல்லிகைப் பூக்களுக்கு பெயர் பெற்ற மதுரை, பண்டைய சங்கக் கூட்டங்களின் மையமாக இருந்தது. மௌரியப் பேரரசின் கிரேக்க தூதரான மெகஸ்தனீஸால்கூட இது குறிப்பிடப்பட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இந்த நகரம் இன்னும் துடிப்பானதாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் உள்ளது.
பெரிய நகரங்கள் மற்றும் ஊர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜன் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய இடம் தஞ்சாவூர் என்று அவர் எழுதுகிறார். இது ஒரு காலத்தில் சக்திவாய்ந்த சோழ வம்சத்தின் தலைநகராக இருந்தது, மேலும் கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் வளமான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.
கோயம்புத்தூர் ஒரு நவீன மற்றும் பெருமைமிக்க தொழில்துறை உணர்வைக் காட்டுகிறது.
இந்த பெரிய நகரங்களுக்கு இடையில் திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் மற்றும் கும்பகோணம் போன்ற சிறிய நகரங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் வளமான காவேரி நதிப் படுகை முழுவதும் பரவியுள்ளன.
தமிழ்நாட்டின் மக்கள் மற்றும் இடங்களை, அதன் நகரங்கள் உட்பட, லட்சுமண் விவரிக்கிறார். குறிப்பாக, மொழிகளைப் பற்றி, மக்களை தமிழின் பண்டைய வேர்களைப் பயன்படுத்த கட்டாயப்படுத்துவது பற்றி, சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவரது புத்தகம் வாசகர்களை இந்த தலைப்பை ஆராய ஊக்குவிக்கிறது. விரிவான ஆராய்ச்சி, நேர்காணல்கள் மற்றும் தமிழின் சிறந்த கடந்த காலத்தைப் பற்றிய கூற்றுக்களை கவனமாக சரிபார்த்தல் போன்ற திடமான பத்திரிகை முறைகளைப் பயன்படுத்தி, அவர் யதார்த்தத்தை அப்படியே காட்டுகிறார்.
பிரிவுகள் மற்றும் படிநிலைகள்
கடந்த காலத்தின் கடினமான பகுதிகளை அவர் புறக்கணிக்கவில்லை. தமிழ் முஸ்லிம் சமூகத்தில் சமூகப் பிரிவுகள் உள்ளன. ஆனால், அவை சாதி அமைப்புகளைப் போன்றவை அல்ல என்று அவர் விளக்குகிறார். மாறாக, இந்தப் பிரிவுகள் ஆரம்பகால இந்து சமூகத்தைப் போலவே வெவ்வேறு வேலைகளின் அடிப்படையில் தொடங்கப்பட்ட சமூகக் குழுக்களைப் போன்றவை. மேலும், வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
லட்சுமணன் பல்வேறு முஸ்லிம் குழுக்களின் தோற்றம் பற்றிப் பேசுகிறார். கீழக்கரை மற்றும் காயல்பட்டணம் போன்ற இடங்களில் ஷாஃபிகள் ஒரு தாய்வழி முறையை (கணவர் மனைவியின் குடும்பத்துடன் வசிக்கும் இடம்) பின்பற்றுகிறார்கள். மரக்காயர்கள் அரபு வணிகர்களிடமிருந்து வந்தவர்கள். அவர்கள் முதலில் படகு கட்டுபவர்கள், கப்பல் தயாரிப்பாளர்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள்.
லப்பை (Labbai) பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். அவர்களும் அரபு பிரிவுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவர்கள் உதவியாளர்களாக வந்தனர். இந்த உதவியாளர்கள் தங்கள் எஜமானர்களுக்கு "லப்பைக்" ("labbaik,") என்று கூறி பதிலளிப்பார்கள். அதாவது, "இதோ நான் இருக்கிறேன்" ("here I am.") என்பது இதன் பொருள் ஆகும். சுவாரஸ்யமாக, முஸ்லிம்களும் ஹஜ் யாத்திரை செல்லும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மற்றும் காந்தியின் செல்வாக்கு எவ்வளவு என்பதை அவர் விளக்குகிறார். "காந்தி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு குறைந்தது பன்னிரண்டு முறை பயணம் செய்தார். அதில் ஏழு முறை சென்னைக்கு பயணம் செய்தார்." 1921 ஆம் ஆண்டு, மதுரைக்கு பயணம் செய்தபோது, காந்தி சாதாரண உடைகள் அணிவதை நிறுத்த முடிவு செய்து, அதற்கு பதிலாக ஒரு எளிய இடுப்புத் துணியை அணியத் தேர்ந்தெடுத்தார். இந்த தோற்றம் பின்னர் அவரது வர்த்தக முத்திரையாக மாறியது.
தமிழ்நாடு காந்தியை வரவேற்றதைவிட அதிகமாக செய்தது. உதாரணமாக, வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி இயக்கத்திற்காகப் போராடினார். மார்ச் 13, 1908 அன்று, ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டார். ஒரு அரசியல் கைதி போன்று இல்லாமல், ஒரு சாதாரண குற்றவாளியைப் போல நடத்தப்பட்டார். அவர் ஒரு காளையைப் போல எண்ணெய் ஆலையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான நிகழ்வு ராஜாஜி தலைமையிலான வேதாரண்யம் உப்பு யாத்திரை, இது காந்தியின் தண்டி யாத்திரையைப் போன்றது.
சமூக நீதி
இன்று, பலர் சமூக நீதி பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அந்தக் கருத்து தமிழ்நாட்டில் வெகு காலத்திற்கு முன்பே 1916ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில், டி.எம். நாயர் மற்றும் பி. தியாகராய செட்டி ஆகியோர் பிராமணரல்லாதோர் இயக்கத்தைத் தொடங்கினர். மக்கள்தொகை அடிப்படையில் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோரினர். இது 2025ஆம் ஆண்டு சாதி கணக்கெடுப்பு மூலம் இன்னும் கேட்கப்படுகிறது. பின்னர், பெரியார் இந்த வளர்ந்து வரும் கோரிக்கையைப் பயன்படுத்தி உண்மையான மற்றும் நீடித்த மாற்றத்தைக் கொண்டு வந்தார். லட்சுமணன் வாசகர்கள் இந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளவும், அதைப் புதிய வழியில் பார்க்கவும் உதவுகிறார்.
பல வழிகளில் Degree Coffee by the Yard என்ற புத்தகத்தில், ஆசிரியர் சென்னை பற்றிப் பேசினார். 1863 மற்றும் 1864ஆம் ஆண்டுகளில், பிரிட்டிஷ் புவியியலாளர் ராபர்ட் புரூஸ் ஃபுட் சென்னை புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம் மற்றும் அத்திரம்பாக்கம் போன்ற இடங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ததாகக் குறிப்பிட்டார். அவர் அங்கு ஒரு கை கோடரியைக் கண்டுபிடித்தார். இது இந்தியா முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பழைய கற்கால கருவி. பின்னர், அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த மேலும் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது கற்கால மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.
மேலும், இப்போது மத்திய சென்னையின் ஒரு பகுதியாக இருக்கும் கிண்டியில் இரும்புக் கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது இப்பகுதி எவ்வளவு பழமையானது என்பதைக் காட்டுகிறது.
தமிழ் அடையாளத்தின் பல அம்சங்களை உள்ளடக்கிய தனது பரந்த அளவிலான படைப்புகளின் மூலம், எழுத்தாளர் வடக்கில் உள்ள மக்களுக்கு சென்னை மற்றும் தமிழ் கலாச்சாரம் வெறும் இட்லி, வடை மற்றும் சாம்பார் ஆகியவற்றைவிட முக்கியமானது என்பதைக் காட்டுகிறார்.