ஜல் ஜீவன் திட்டம்: ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறையலாம். அது மாநிலங்களை எவ்வாறு பாதிக்கும்? -ஹரிகிஷன் சர்மா

 பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை (Jal Jeevan Mission (JJM)) அறிவித்தார்.


அரசு திட்டங்களை மதிப்பிடும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதிக் குழு (Expenditure Finance Committee), ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2028 வரை ஒன்றிய அரசின் பங்காக ரூ.1.51 லட்சம் கோடியை பரிந்துரைத்துள்ளது. இது ஜல் சக்தி அமைச்சகம் கோரியதைவிட சுமார் 46 சதவீதம் குறைவான ஓதுக்கீட்டுத் தொகையாகும்.


ஜல் ஜீவன் திட்டம் என்றால் என்ன?


பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை (Jal Jeevan Mission (JJM)) அறிவித்தார்.


பிரதமரின் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அமைச்சரவை 2024க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் செயல்படும் குடிநீர் குழாய் இணைப்புகளை (Functional Household Tap Connections) வழங்கும் நோக்கத்துடன் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.


அப்போது, நாட்டில் உள்ள 17.87 கோடி கிராமப்புற வீடுகளில், சுமார் 14.6 கோடி (81.67%) வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்காக, ஒன்றிய அரசின் பங்காக ரூ.3.60 லட்சம் கோடி—ரூ.2.08 லட்சம் கோடி மற்றும் மாநிலங்களின் பங்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.


நிதிப் பகிர்வு முறை இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற மாநிலங்களுக்கு 50:50 என்ற விகிதத்திலும் நிர்ணயிக்கப்பட்டது.


BIS (IS: 10500) நிர்ணயித்த தரங்களைப் பூர்த்தி செய்யும், ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு 55 லிட்டர் சுத்தமான குடிநீரை தொடர்ந்து வழங்குவதே நோக்கமாக இருந்தது.


ஜல் ஜீவன் திட்டத்தின் முன்னேற்றம்


2019ல் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மாநிலங்கள் கிராமப்புறங்களில் 12.83 கோடி வீடுகளுக்கு உதவ ரூ.8.07 லட்சம் கோடி மதிப்பிலான 6.31 லட்சம் குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டங்களின் செலவு ரூ.32,364 கோடி மற்றும் பிற கூறுகளையும் சேர்த்தால், மொத்த திட்ட ஒதுக்கீடு ரூ.9.10 லட்சம் கோடியை எட்டும்.


இந்தத் திட்டம் 2024-ல் முடிவடைந்தபோதிலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ஆம் தேதி தனது வரவு செலவு அறிக்கை உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது 2028 வரை தொடரும் என்று அறிவித்தார்.


ஜல் சக்தி அமைச்சகம் பின்னர் செலவு நிதிக் குழுவை (Expenditure Finance Committee (EFC)) அணுகி, ஒன்றிய அரசின் பங்காக ரூ.4.39 லட்சம் கோடி உட்பட ரூ.9.10 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கோரியது. 2019-24 காலகட்டத்தில் ஒன்றிய அரசு ஏற்கனவே ரூ.2.08 லட்சம் கோடியை விடுவித்துள்ளதால், அமைச்சகத்திற்கு இப்போது ரூ.2.79 லட்சம் கோடி தேவைப்படுகிறது என ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், EFC கோரப்பட்ட தொகையைவிட 46 சதவீதம் குறைவான ரூ.1.51 லட்சம் கோடியை மட்டுமே பரிந்துரைத்துள்ளது.


செலவு நிதிக் குழு (Expenditure Finance Committee (EFC)) கோரப்பட்ட தொகையைவிட குறைவான நிதியை பரிந்துரைப்பது இதுவே முதல் முறையா?


இல்லை. 2019ஆம் ஆண்டிலும், ஜல் சக்தி அமைச்சகத்தின் ரூ.7.89 லட்சம் கோடி கோரிக்கைக்கு எதிராக, செலவு நிதிக் குழு, ஜல் ஜீவன் திட்டத்திற்கான செலவினத்தை ரூ.3.6 லட்சம் கோடியாக நிர்ணயித்தது. மொத்த செலவினமான ரூ.3.6 லட்சம் கோடியில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2.0865 லட்சம் கோடியாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கில், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.1.86 லட்சம் கோடி பயன்படுத்தப்பட்டது.


செலவு நிதிக் குழுவின் (Expenditure Finance Committee (EFC)) பரிந்துரைகள் மாநிலங்களை எவ்வாறு பாதிக்கும்?


ஒட்டுமொத்த செலவினத்தைக் குறைப்பதற்கான EFCயின் நடவடிக்கை, அசாம் ரூ.2,991 கோடி, பீகார் ரூ.7,500 கோடி, மகாராஷ்டிரா ரூ.641 கோடி மற்றும் தமிழ்நாடு ரூ.21,232 கோடி மதிப்புள்ள திட்டங்களை இழக்கும் என்று அறியப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒன்றிய அரசின் பங்கான ரூ.17,378.40 கோடியை இழக்க நேரிடும். மேலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை சுமார் ரூ.50,000 கோடி அளவுக்கு பாதிப்பை சந்திக்க நேரிடும்.


இனி என்ன நடக்கும்?


செலவு நிதிக் குழுவின் (Expenditure Finance Committee (EFC)) முடிவு பரிந்துரைக்கும் தன்மை கொண்டது, கட்டாயமானது அல்ல. இறுதி முடிவை ஒன்றிய அமைச்சரவை எடுக்கும். எனவே ஜல் சக்தி அமைச்சகத்திற்கு இப்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன.


முதலாவதாக, ஜல் சக்தி அமைச்சர் இந்த விவகாரத்தை நிதி அமைச்சரிடம் எடுத்துச் செல்லலாம். இரண்டாவதாக, ஜல் சக்தி அமைச்சக அதிகாரிகள் அமைச்சரவை செயலகத்தை அணுகி, வேறுபாடுகளைத் தீர்க்க அமைச்சரவை செயலாளரை கேட்டுக் கொள்ளலாம். மூன்றாவதாக, ஜல் சக்தி அமைச்சகம் நேரடியாக அமைச்சரவைக்குச் செல்லலாம். அமைச்சரவை ஒன்றிய அரசின் பங்கை அதிகரிக்கலாமா அல்லது செலவு நிதிக் குழு பரிந்துரைத்த அளவிலேயே வைக்கலாமா என்பதை முடிவு செய்யும்.


Original article:
Share: