நகர்ப்புற திட்டமிடலின் செயல்பாடு பொதுவாக நகரங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை மற்றும் பரவலாக்கப்பட்ட நகர்ப்புற திட்டமிடல் பொதுவானதாக மாறவில்லை.
நிர்வாக அதிகாரத்தின் (executive power) அரசியல் மேற்பார்வை இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு முக்கிய கொள்கையாகும். நிர்வாகம் அல்லது அரசாங்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதேசமயத்தில், இந்த பிரதிநிதிகள் பொதுவாக குடிமக்களுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டவர்களாவர். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பாகும். மாநில அரசுகள் மாநில சட்டமன்றங்களுக்குப் பொறுப்பாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இந்தியாவில் நகராட்சிகள் உள்ளன. இருப்பினும், 1993-ல் தான் 74வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது. இது நகர நிர்வாகத்தை மேற்பார்வையிட அவர்களை அனுமதித்தது. மார்ச் 2025-ல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (Parliament Standing Committee) ஒரு அறிக்கையை வெளியிட்டது. நகராட்சிகளுக்கு அதிகாரம் அளிப்பது என்ற முடிக்கப்படாத பணியை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
சமீபத்தில், நிலைக்குழு (Standing Committee) தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 2025–26-ஆம் ஆண்டிற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) பட்ஜெட்டின் அறிக்கையை பகுப்பாய்வு செய்தது. FY25க்கான MoHUA பட்ஜெட் ஆண்டு நடுப்பகுதியில் 23% குறைக்கப்பட்டதாக குழு கண்டறிந்தது. கூடுதலாக, நிதியாண்டின் இறுதிக்குள் குறைக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து MoHUA ₹20,875 கோடியை (33%) செலவிட முடியவில்லை. நகர அளவில் விரிவான நகர்ப்புற திட்டமிடல் இல்லாததால் MoHUA-ன் திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான தேவை குறைந்துள்ளது என்றும் குழு கூறியது. இதன் விளைவாக கிடைக்கக்கூடிய நிதி குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. சரியான நகர அளவிலான திட்டங்கள் இல்லாமல், மாநிலங்களும் நகரங்களும் இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. நகராட்சிகள் தங்கள் சொந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க உதவுமாறு குழு பரிந்துரைத்தது. இந்தத் திட்டங்கள் உள்ளூர் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் திறன்களை வளர்க்கவும் குழு பரிந்துரைத்தது.
74வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அரசியலமைப்பின் XII அட்டவணை, நகராட்சிகளுக்கு "நகர திட்டமிடல் உட்பட நகர்ப்புற திட்டமிடல்" (urban planning, including town planning) மற்றும் "பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான திட்டமிடல்" (planning for economic and social development) பொறுப்பை வழங்குகிறது. இருப்பினும், 2023 ஜனகிரஹாவின் இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of India’s City-Systems (ASICS)) அறிக்கை, நகர்ப்புற திட்டமிடல் பொதுவாக நகரங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது. பரவலாக்கப்பட்ட நகர்ப்புற திட்டமிடலும் பொதுவாக செயல்படுத்தப்படுவதில்லை. ASICS 2023-ன் படி, திட்டமிடல் செயல்பாட்டில் கேரளா மட்டுமே நகராட்சிகளை உள்ளடக்கியது. இது அதன் திட்டமிடல் சட்டத்தின் ஒரு பகுதியாகும். கூடுதலாக, மார்ச் 2023 நிலவரப்படி இந்தியாவின் தலைநகரங்களில் 39% செயலில் உள்ள முதன்மைத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.
வளர்ச்சியில் தொலைநோக்குப் பார்வை இல்லாததாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும், தரமான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் நிதியை நகராட்சிகள் தீர்மானிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பல மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை நன்கு திட்டமிடப்படவில்லை. ”74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1992-ஐ செயல்படுத்துவது குறித்த செயல்திறன் தணிக்கைகளின் தொகுப்பு” என்ற அறிக்கை 2024-ல் இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. இது 18 மாநிலங்களை உள்ளடக்கியது. அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு நகராட்சி நிறுவனங்களில் சராசரியாக 37% காலியிட விகிதம் இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது. நகர பஞ்சாயத்துகளில், காலியிட விகிதம் 44% அதிகமாக உள்ளது. நகராட்சிகளுக்கான வளங்களின் செலவினத்தில் 42% இடைவெளி இருப்பதையும் தணிக்கை கண்டறிந்துள்ளது. இது நிதிக் கட்டுப்பாடுகளைக் குறிக்கிறது.
எனவே, ஒருபுறம், MoHUA பயன்படுத்தப்படாத நிதியைக் கொண்டுள்ளது. ஆனால் வளர்ச்சி சவால்களைச் சமாளிக்க மனித மற்றும் நிதி வளங்களைக் கண்டுபிடிக்க நகரங்கள் போராடுகின்றன. இதைத் தீர்க்க, அனைத்து பங்குதாரர்களின் உள்ளீடுகளுடன் "நகர செயல் திட்டங்களை" உருவாக்க நகரங்களுக்கு ஆதரவு தேவை. இந்தத் திட்டங்கள் வெவ்வேறு நகரங்களில் "குடிமைத் தேவைகளின் மதிப்பீட்டின்" அடிப்படையில் இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது. இந்த மதிப்பீடு MoHUA-வின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் எதிர்கால தலையீடுகளுக்கு வழிகாட்ட வேண்டும். இருப்பினும், இதைச் செயல்படுத்த நகராட்சிகளுக்கு அதிக அதிகாரம் தேவை.
உள்ளூர் அரசாங்கங்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு வழக்கமான தேர்தல்கள் மிக முக்கியமானவை. இது திட்டமிடல் மற்றொரு அதிகாரத்துவப் பணியாக மாறுவதைத் தடுக்கிறது. இந்தியாவில் 60%-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் தேர்தல்களை தாமதப்படுத்தியதாக CAG தணிக்கை கண்டறிந்துள்ளது. இந்த தாமதம் ஒரு நகரத்தின் நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த சட்டமன்ற மற்றும் அரசியல் மேற்பார்வை இல்லாததற்கு வழிவகுக்கிறது.
கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் மேயர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். நிதி (funds), செயல்பாடுகள் (functions) மற்றும் செயல்பாட்டாளர்கள் (functionaries) அடிப்படையில் 3F-களின் முறையான அதிகாரப் பகிர்வு மூலம் இதை அளிக்கப்பட வேண்டும். ஜனகிரஹாவின் ஆராய்ச்சி, சராசரியாக, அட்டவணை XII-ன் கீழ் உள்ள 18 செயல்பாடுகளில் 5, அரசு சார்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த அரசு சார்பு நிறுவனங்கள் நகராட்சிகளுக்குக் கணக்குக் கொடுக்கவில்லை. இது மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் நகரங்களில் வளர்ச்சிப் பணிகளை முறையாகச் செய்யும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறன் மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதில் அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது.
மேலும், எந்தவொரு திட்டமிடல் நடவடிக்கையின் வெற்றிக்கும் குடிமக்களின் பங்களிப்பு அவசியம். வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் போன்ற பங்கேற்புக்கான முறையான தளங்கள் ஏற்கனவே பல்வேறு மாநில நகராட்சி சட்டங்களில் உள்ளன. இருப்பினும், இந்த தளங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அவை வார்டு மற்றும் சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிக்க உதவலாம். அவை, பின்னர் நகர செயல் திட்டங்களுக்கு பங்களிக்கும்.
2047-ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MoHUA மற்றும் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் உள்ளூர் அரசாங்கங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த சரியான நேரமாக அமைகிறது.
மான்சி வர்மா பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான ஜனகிரஹாவின் ஒரு பகுதியாக உள்ளார்.