நீதி, கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை பற்றிய இந்தியாவின் ஆரம்பகால மற்றும் மிக முக்கியமான பொருளாதாரக் கருத்துக்கள் சிலவற்றின் பின்னணியில் இருந்தவர் அவர்.
பி ஆர் அம்பேத்கரின் ஞானம் இந்தியாவின் ஆட்சியை பல பரிமாணங்களில் வடிவமைத்துள்ளது. அரசியலமைப்பின் சிற்பியாகவும், நீதிக்கான வலுவான குரலாகவும் அவரது பங்களிப்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் ஆரம்பகால மற்றும் சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களில் ஒருவராக இவரது மரபு இன்னும் பலருக்கு நன்கு அறியப்படவில்லை.
இந்தியாவிற்கு சொந்தமாக ரிசர்வ் வங்கி (Reserve Bank) அல்லது நிலையான நாணய அமைப்பு (stable currency system) உருவாக்குவதற்கு முன்பே, அம்பேத்கர் ஏற்கனவே பணத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். பணத்திற்கு மதிப்பு அளிப்பது எது?, அதை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?, இந்தியா ஏன் அதன் சொந்த நிதியால் எதிர்காலத்தை கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை அவர் விவாதித்தார். அம்பேத்கருக்கு 22 வயதாக இருந்தபோது, வெளிநாட்டில் படிக்க முதல் தலித் மாணவராக நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 1915-ம் ஆண்டில், "பண்டைய இந்திய வணிகம்" (Ancient Indian Commerce) என்ற தனது ஆய்வறிக்கைக்காக முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு, "இந்தியாவின் தேசிய ஈவுத்தொகை: ஒரு வரலாற்று மற்றும் பகுப்பாய்வு" (The National Dividend of India: A Historic and Analytical Study) என்ற தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர், இது விரிவாக்கப்பட்டு ”இந்தியாவில் இம்பீரியல் மாகாண நிதியத்தின் பரிணாமம்” (The Evolution of Imperial Provincial Finance in India) என வெளியிடப்பட்டது.
நவம்பர் 1918-ல், அம்பேத்கர் திரும்பி வந்து பம்பாயில் உள்ள சைடன்ஹாம் வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஜூலை 1920-ல், பொருளாதாரத்தில் தனது படிப்பைத் தொடர லண்டனுக்குச் சென்றார். மேலும், ஜூன் 1921-ல் 'பிரிட்டிஷ் இந்தியாவில் இம்பீரியல் நிதியின் மாகாண பரவலாக்கம்' (Provincial Decentralisation of Imperial Finance in British India) என்ற தலைப்பில் தனது முதுகலை ஆய்வறிக்கையை (MSc thesis) முடித்தார். 1923-ல், 'ரூபாயின் பிரச்சனை: அதன் தோற்றம் மற்றும் அதன் தீர்வு' (The Problem of the Rupee: Its Origin and Its Solution) என்ற ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை எழுதினார். இவை வெறும் கல்விப் படைப்புகள் அல்ல. அவை இந்தியாவின் எதிர்கால நிதி மற்றும் பணவியல் அமைப்புக்கான அடித்தளமாக அமைந்தன.
பலவீனமான பணவியல் அமைப்பு (monetary system) ஒரு நாட்டிற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை இந்தப் படைப்புகள் ஆராய்ந்தன. லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் (LSE) இருந்தபோது, அம்பேத்கர் இந்திய நாணய முறையைப் படித்தார். அவர் அதை வெறும் ஒரு பாடமாகப் பார்க்காமல், இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒன்றாகப் பார்க்கிறார். காலனித்துவ பணவியல் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை எவ்வாறு சேதப்படுத்துகின்றன என்பதை விளக்க ஒரு இந்திய அறிஞரின் முதல் தீவிர முயற்சி அவரது ஆய்வறிக்கையாகும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் நாணய மதிப்பின் பவுண்டுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பை எவ்வாறு கையாண்டனர். இது இந்தியாவுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதை அவர் காட்டினார்.
இந்திய நாணய முறையின் அடித்தளத்தை அம்பேத்கர் கேள்விக்குள்ளாக்கினார். அவர் துணிச்சலான, நடைமுறை மற்றும் தொலைநோக்கு தீர்வுகளை முன்மொழிந்தார். தங்கப் பரிமாற்றத் தரத்தை (gold exchange standard) இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு பரிந்துரையாகும். இது அந்த நேரத்தில் பல வளர்ந்த நாடுகளால் பயன்படுத்தப்பட்ட மிகவும் நிலையான மற்றும் நவீன அணுகுமுறையாகும். இது ரூபாயின் மதிப்பை பிரிட்டிஷ் பவுண்டு போன்ற தங்க ஆதரவு நாணயத்துடன் இணைக்கும். இது மாற்று விகிதங்களுக்கு அதிக கணிக்கக்கூடிய தன்மையையும் நியாயத்தையும் கொண்டு வரும்.
அம்பேத்கர் ஒரு மத்திய வங்கியைப் போன்ற ஒரு இந்திய அதிகாரத்தை உருவாக்கவும் அழைப்பு விடுத்தார். இந்த அதிகாரம் நாணய வெளியீடு, பணவியல் கொள்கை மற்றும் பணவீக்க மேலாண்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
அவரது ஆய்வறிக்கை கல்வியாளர்களுக்கு மட்டுமல்ல. 1925-ம் ஆண்டில், அதன் வெளியீட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அம்பேத்கர் தனது கருத்துக்களை ஹில்டன் யங் கமிஷன் (Hilton Young Commission) முன் முன்வைக்க அழைக்கப்பட்டார். இந்த ஆணையம் இந்தியாவின் பணவியல் முறையை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தது. அம்பேத்கர் அவர்களுக்கு நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட பொருளாதாரத் திட்டத்தை வழங்கினார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் 1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் அம்பேத்கரின் கருத்துக்களைப் பிரதிபலித்தது. அவரது ஆய்வறிக்கை இந்திய நிதி ஆணையத்தை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அவரது பணி 1934-ம் ஆண்டு RBI சட்டத்தை வழிநடத்த உதவியது.
சமூக நீதிக்கு பொருளாதாரத் திட்டமிடல் மிகவும் அவசியம் என்று அம்பேத்கர் நம்பினார். சரியான திட்டமிடல் இல்லாமல், சமூக நீதி முழுமையடையாது. பணத்தை ஒரு தொழில்நுட்பப் பிரச்சினையாக மட்டுமல்ல, மனித கண்ணியம், வேலை மற்றும் வாய்ப்புடன் தொடர்புடைய ஒன்றாக அவர் பார்த்தார். பலவீனமான பொருளாதாரம் ஏழைகளின் வாழ்க்கையை கடினமாக்கும் என்று அவர் நினைத்தார். பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கும் மற்றும் நியாயத்தை ஊக்குவிக்கும் ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சியையும், திட்டமிட்ட தொழில்துறை வளர்ச்சியையும் அவர் ஆதரித்தார்.
வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் உறுப்பினராக இருந்த காலத்தில், அம்பேத்கர் தொழிலாளர்களுக்கு உதவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அவற்றில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலை நேரம், மகப்பேறு சலுகைகள் மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான வாரியங்கள் ஆகியவை அடங்கும். நீர், மின்சாரம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்தியாவில் வேலைவாய்ப்பு பரிமாற்றங்களின் நிறுவனர்களில் அம்பேத்கரும் ஒருவராக இருந்தார். நீர்வளங்களை சிறப்பாக நிர்வகிக்க அவர் வலியுறுத்தினார். மத்திய நீர் ஆணையம் (Central Water Commission), மத்திய தொழில்நுட்ப மின் வாரியம் (Central Technical Power Board) போன்ற முக்கியமான நிறுவனங்களையும், தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் (Damodar Valley Project), ஹிராகுட் அணை திட்டம் (Hirakud Dam Project) மற்றும் சோன் நதி திட்டம் (Sone River Project) போன்ற திட்டங்களையும் நிறுவ அவர் உதவினார்.
இன்றைய உலகில், நிதி நிச்சயமற்றத் தன்மையுடன், நிதி ஒழுக்கம் மற்றும் உண்மையான மதிப்பு நாணயம் குறித்த அம்பேத்கரின் கருத்துக்கள் முன்னெப்போதையும்விட மிகவும் பொருத்தமானவை. டிஜிட்டல் நாணயங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிதி முடிவுகள் மற்றும் பரவலாக்கப்பட்ட நிதி ஆகியவற்றை நோக்கி நாம் நகரும்போது, வெளிப்படைத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் நியாயத்தன்மை பற்றிய அவரது கருத்துக்கள் முக்கியமானவை. பணத்திற்கு எது மதிப்பைத் தருகிறது?, அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?, நிதி அதிர்ச்சிகளிலிருந்து சாதாரண குடிமகனை எவ்வாறு பாதுகாப்பது? என்பது பற்றிய முக்கியமான கேள்விகளை அம்பேத்கர் எழுப்பினார். பணவீக்கம் ஏழைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த அவரது எண்ணங்களும், பொறுப்பான நாணய மேலாண்மைக்கான அவரது வலியுறுத்தலும் இன்றும் பொருத்தமானவை. பணவீக்க இலக்கு, பொறுப்பற்ற பண விரிவாக்கத்தைத் தவிர்ப்பது மற்றும் நலன்சார்ந்த, நிதி உள்ளடக்கம் மற்றும் நேரடி நன்மை பரிமாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்த இந்தியாவின் தற்போதைய கொள்கைகள் அம்பேத்கரின் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றன.
இந்தியாவின் ஆரம்பகால மற்றும் மிக முக்கியமான பொருளாதாரக் கருத்துக்களில் சிலவற்றை வடிவமைப்பதில் அம்பேத்கர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது கருத்துக்கள் எண்களுக்கு அப்பாற்பட்டவை ஆகும். அவை நீதி, கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தின. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி ஆணையம் மற்றும் நீர்வழி உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவை அவரது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.
இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு அருகில் உள்ளது. விக்ஸித் பாரத் (வளர்ந்த இந்தியா) அடைய இந்தியா அதன் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும்போது, அம்பேத்கரின் பொருளாதார ஞானத்தைப் பின்பற்றுவது அவருக்கு செலுத்த வேண்டிய ஒரு பொருத்தமான அஞ்சலியாகும்.
கட்டுரையாளர் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மற்றும் பிகானீர் மக்களவை உறுப்பினர்.