பாகிஸ்தானின் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக (persona non grata) அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் பொருள், அவர்கள் இனி நாட்டில் வரவேற்கப்படுவதில்லை என்பதாகும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானை இராஜதந்திர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்த இந்தியா வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து செவ்வாயன்று, இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்ததுள்ளது. அவை,
1. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.
2. அட்டாரி எல்லை (Attari border) மூடப்பட்டது.
3. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு
ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களாக (persona non grata)
அறிவிக்கப்பட்டனர்.
4. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து இந்தியா
தனது பாதுகாப்பு ஆலோசகர்களையும் திரும்பப் பெற்றது.
கூடுதலாக, உயர் ஆணையங்களின் மொத்த எண்ணிக்கை தற்போதைய 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதிக்குள் மேலும் குறைப்புகள் மூலம் இது செய்யப்படும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SAARC Visa Exemption Scheme (SVES)) கீழ் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது. SVES விசாவில் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (Cabinet Committee on Security (CCS)) கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் தனது சவுதி அரேபியா பயணத்தை குறைத்துக் கொண்டார். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் இரவு தாமதமாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். "ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை CCS மதிப்பாய்வு செய்தது. அனைத்துப் படைகளும் விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று குழு முடிவு செய்தது. தாக்குதல் நடத்தியவர்களை ஆதரித்தவர்களும் பொறுப்புக்கூறப்படுவார்கள். சமீபத்தில் தஹாவூர் ராணாவை நாடு கடத்தியதைப் போலவே, பயங்கரவாதிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தொடரும்" என்று அவர் கூறினார்.
தெளிவான எச்சரிக்கை
CCS கூட்டத்திற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது, "பொறுப்பானவர்கள் விரைவில் உரத்த மற்றும் தெளிவான பதிலடியைக் காண்பார்கள்... இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் இருப்பவர்களையும் நாங்கள் குறிவைப்போம்."
குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஏ.கே. சிங், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் உள்ளிட்டோருடன் அவர் ஒரு சந்திப்பை நடத்திய பிறகு பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
பழிவாங்கும் நடவடிக்கை
இராணுவத் தளபதியின் காட்சிப்படுத்தலைக் கண்ட இந்த மூன்று மணி நேரக் கூட்டத்தில், பழிவாங்கும் நடவடிக்கைக்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீநகர் மற்றும் பஹல்காம் இரவு நேர கண்காணிப்புப் பயணத்திலிருந்து டெல்லி திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஐந்து பேர் கொண்ட சி.சி.எஸ்-க்கு கள நிலைமையை விளக்கினார்.
அதே நேரத்தில், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் ஆறு லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) உறுப்பினர்களைக் கொண்ட குழுவைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தன. அந்தக் குழு, அதன் துணை அமைப்பான எதிர்ப்புப் படையுடன் (Resistance Force) சேர்ந்து, தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
மூன்று பயங்கரவாதிகளின் புகைப்பட ஓவியங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் அடில் குரி (Adil Guri) என்றும் அழைக்கப்படும் அடில் தோகர் (Adil Thokar) ஆவர். அவர் அனந்த்நாக்கில் உள்ள கூரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர். அவர் 2018-ல் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றார். உள்ளூர் காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்து கடந்த ஆண்டு திரும்பி வந்தார்.
இந்தத் தாக்குதலில் புலனாய்வுப் பிரிவு, இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்காக NIA-விடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. வியாழக்கிழமை தலைநகரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளிப்பார்.