1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த இடஒதுக்கீடு வரம்பை சாதிவாரிக் கணக்கெடுப்பு மாற்றக்கூடும். -ஆபிரகாம் தாமஸ்

 நீதிமன்றங்கள் அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்த, தெளிவான தரவுகளை வலியுறுத்தியுள்ள நிலையில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள சாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விஷயங்களை மாற்றக்கூடும்.


இப்போது பல காலங்களாக, 1992-ல் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த வரம்பைத் தாண்டி இடஒதுக்கீட்டை அதிகரிக்க ஒரு அழுத்தம் இருந்து வருகிறது. இருப்பினும், இது நீதிமன்றங்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.


அத்தகைய மாற்றங்களை ஆதரிக்க நீதிமன்றங்கள் உறுதியான தரவுகளைக் கோரியுள்ளன. இப்போது, ஒன்றிய அரசு அறிவித்த சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.


1992-ம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு இந்திரா சாவ்னி வழக்கு (Indira Sahwney case) என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய தீர்ப்பு, ஒரு விதிமுறையாக, இடஒதுக்கீடு 50% வரம்பை மீறக்கூடாது என்ற விதியை வகுத்தது. அதன்பிறகு பல ஆண்டுகளில், இந்த வரம்புக்கு அப்பால் இடஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் சட்டங்கள் உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டன. ஆனால் நீதிமன்றங்கள் இந்தச் சட்டங்களைத் தடை செய்தபோதும், பின்தங்கிய நிலையின் அளவுகோல்கள் மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் (ஏதேனும் இருந்தால்) பற்றிய தரவுகளின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.


இடஒதுக்கீட்டை நீட்டிப்பதில் உச்சநீதிமன்றம் தீவிர பங்கு வகித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீட்டை வழங்குவதை ஆதரித்துள்ளது. அரசு வேலைகளில் பதவி உயர்வுகளில் பட்டியலிடப்பட்ட வகுப்புகள் (எஸ்சி) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டையும் இது ஆதரித்துள்ளது.


1992-ம் ஆண்டு வழக்கில், ஓபிசிக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதன் அரசியலமைப்புச் செல்லுபடியை நீதிமன்றம் பரிசீலித்தது. இந்தப் பரிந்துரை மண்டல் ஆணையத்திடமிருந்து (Mandal Commission) வந்தது. இது நாட்டின் மக்கள் தொகையில் 52% பேர் ஓ.பி.சி.க்கள் என்று மதிப்பிட்டுள்ளது.


நீதிமன்றம் இந்த 27% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது. ஆனால், சில குறிப்பிட்ட நிபந்தனைகளை விதித்தது. வருமானம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் ஓ.பி.சி.களில் உள்ள செல்வந்தர்களைக் குறிக்கும் "கிரீமி லேயரை" தெளிவுபடுத்த முடிவு செய்தது. இது அசாதாரண நிகழ்வுகளைத் தவிர, மொத்த இடஒதுக்கீடுகளுக்கு நீதிமன்றம் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்தது. இது 50%-ஐ தாண்டக்கூடாது என்பதை உறுதி செய்தது. இந்த வரம்பில் எஸ்.சி.க்களுக்கு 15%, எஸ்.டி.க்களுக்கு 7.5% மற்றும் ஓ.பி.சி.க்களுக்கு 27% இடஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.


2006-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் பட்டியலிடப்பட்ட வகுப்புகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஆதரவாக பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பில் உள்ள 16(4A) மற்றும் 16(4B) ஆகியவற்றின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்தது.


எம் நாகராஜ் vs இந்திய ஒன்றியம் வழக்கில்-2006 (M Nagaraj vs Union of India case) ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு, உச்சவரம்பின் வரம்பான 50%, கிரீமி லேயர் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. மேலும், பிரிவு 16-ன் கீழ் பொது வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த "பிற்படுத்தப்பட்ட நிலை" (backwardness), "பிரதிநிதித்துவத்தின் போதாமை" (inadequacy of representation) மற்றும் "ஒட்டுமொத்த நிர்வாக செயல்திறன்" (overall administrative efficiency) ஆகியவற்றுக்கான வலுவான காரணங்களை மாநிலம் நிரூபிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் கூடுதல் வரம்புகளை விதித்தது. இது இல்லாமல், பிரிவு 16-ல் உள்ள வாய்ப்பு சமத்துவத்தின் கட்டமைப்பு சரிந்துவிடும் என்று அது குறிப்பிடுகிறது.


2018-ம் ஆண்டில், எம். நாகராஜ் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியிருந்தது. ஜர்னைல் சிங் vs லச்மி நரேன் குப்தா (Jarnail Singh vs Lacchmi Narain Gupta) வழக்கில், பதவி உயர்வுகளுக்கு எஸ்சி/எஸ்டி சமூகங்களின் பின்தங்கிய நிலையை மாநிலங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், மாநிலங்கள் பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்து, SC/ST பிரிவினரின் போதுமான பிரதிநிதித்துவத்தைக் காட்ட தரவுகளை வழங்க வேண்டும் என்று அது கோரியது.


இடஒதுக்கீட்டு சலுகைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஜாட் (Jats) இன மக்களை OBC பட்டியலில் சேர்க்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் முடிவை அது ரத்து செய்தது. இந்த முடிவு பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில மாவட்டங்களை பாதித்தது.


மேலும், மராத்தியர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை நீட்டிக்கும் மகாராஷ்டிராவின் 2018 சட்டத்தை அது ரத்து செய்தது, இது மாநிலத்தில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடுகள் 50%-ஐ மீறும் என்ற அடிப்படையில். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பை (socially and economically backward class (SEBC)) ஒன்றிய அரசு மட்டுமே வரையறுக்க முடியும் என்றும் அந்த தீர்ப்பு கூறியது. இந்த முடிவைத் தொடர்ந்து, SEBC-களை அடையாளம் காண மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரத்தை மறுசீரமைக்கும் சட்டப்பிரிவு 342A-ஐ நாடாளுமன்றம் திருத்த வேண்டியிருந்தது.


2021-ஆம் ஆண்டு தீர்ப்பில், உள்ளாட்சி அமைப்புகளில் மாநிலங்கள் எவ்வாறு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் விளக்கியது. இது மூன்று-படி செயல்முறையை வகுத்துள்ளது. முதலில், மாநிலங்கள் ஒரு ஆணையத்தை நியமிக்க வேண்டும். இரண்டாவதாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBCs) அளவு மற்றும் பின்தங்கிய நிலையை அளவிட ஆணையம் உண்மையான தரவுகளை சேகரிக்க வேண்டும். மூன்றாவதாக, எந்தவொரு உள்ளாட்சி அமைப்பு இடத்திலும் மொத்த இடஒதுக்கீடு 50% வரம்பை மீறாமல் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த விதியின் காரணமாக, பல மாநில அரசுகள் முதலில் ஆணையங்களை அமைத்தன.


2019-ம் ஆண்டில், ஒன்றிய அரசு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இருந்து விலகிச் சென்றது. அது அரசியலமைப்பு (103-வது) திருத்தச் சட்டத்தை (Constitution (One Hundred and Third) Amendment Act) நிறைவேற்றியது. இது இடஒதுக்கீடு இல்லாத பிரிவில் இருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (economically weaker sections (EWS)) 10% இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் ”ஜன்ஹித் அபியான் vs இந்திய ஒன்றியம்” (Janhit Abhiyan vs Union of India) வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இதை விசாரித்தது. 3:2 பெரும்பான்மையால் நீதிமன்ற அமர்வு சட்டத்தை உறுதி செய்தது. இந்தச் சட்டம் 50% இடஒதுக்கீடு வரம்பைத் தாண்டியது. ஆனால் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது என்று அமர்வானது தீர்ப்பளித்தது.


EWS இடஒதுக்கீடானடு 50% விதிக்கு விதிவிலக்காக உள்ளது. தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு மட்டுமே மற்றொரு விதிவிலக்கு ஆகும். இருப்பினும், அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சட்டத்தை வைப்பதன் மூலம் தமிழ்நாடு இதை அடைந்தது. இந்தச் சட்டம் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது இப்போது நீதித்துறை மறுஆய்வுக்குத் திறக்கப்பட்டுள்ளது. 50%-க்கு மேல் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் பிற மாநில சட்டங்களுக்கும் ஒரு சவால் உள்ளது. இந்த சவால் இன்னும் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது.


சாதி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் அறிவியல்சார் கணக்கெடுப்பு ஆகும். இது உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவுகோல்களை பூர்த்தி செய்யக்கூடும்.


Original article:
Share: