தனிநபர் மசோதா, இந்தியாவின் சட்டமன்ற நிலப்பரப்புக்கு ஒரு தங்கச் சுரங்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
தனிநபர் மசோதாக்கள் (Private Member’s Bills (PMBs)) அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டங்களை பரிந்துரைக்க அனுமதிக்கின்றன. இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், பெரும்பாலான சட்டங்கள் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமைச்சகங்களால் வரைவு செய்யப்பட்டு, அமைச்சர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் வருகின்றன. ஒவ்வொரு அமர்விலும், வெள்ளிக்கிழமைகள் பொதுவாக தனிநபர் மசோதாக்கள் பற்றிய விவாதத்திற்காக ஒதுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் தாங்களாகவே செயல்படக்கூடிய சில வழிகளில் தனிநபர் மசோதாகளும் ஒன்றாகும்.
இருப்பினும், இந்த முக்கியமான தலையீடு படிப்படியாக சிதைந்து வருகிறது. அடிக்கடி ஏற்படும் இடையூறுகள், முன்கூட்டிய ஒத்திவைப்புகள் மற்றும் அரசாங்க அலுவல்களுக்கு அதிகரித்து வரும் முன்னுரிமை ஆகியவை தனிநபர் மசோதாவை ஒரு தீவிரமான சபை நடவடிக்கைக்குப் பதிலாக ஒரு அடையாளமாக குறைத்துள்ளன. தனிநபர் மசோதாவைப் புறக்கணிப்பது ஒரு நடைமுறைக் குறைபாடாகும். மேலும், அது ஜனநாயகப் பின்னடைவையும் குறிக்கிறது.
தனிநபர் மசோதா போக்குகள், 17வது மற்றும் 18வது மக்களவை
சுதந்திரத்திற்குப் பிறகு, வெறும் 14 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளன. மேலும், 1970 முதல் எந்த மசோதாவும் இரண்டு அவைகளையும் கடந்ததில்லை. 17வது மக்களவையில் (2019-24), 729 தனிநபர் உறுப்பினர் மசோதாக்களும், மாநிலங்கவையில் 705 மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், மக்களவையில் இரண்டு மசோதாக்கள் மற்றும் மாநிலங்களவையில் 14 மட்டுமே விவாதிக்கப்பட்டன.
18வது மக்களவையில், இதுவரை 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 2024ன் தொடக்க மற்றும் வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடர்களில், மக்களவையில் 64 தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், ஒன்று கூட விவாதிக்கப்படவில்லை.
குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்களவையில் இரண்டு வெள்ளிக்கிழமைகள் இடையூறுகளால் பாதிக்கப்பட்டன. மற்றொரு, வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு குறித்த பொது விவாதத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது. வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடரில்கூட, வழக்கமாக தனிநபர் உறுப்பினர்ரகளுக்கு ஒதுக்கப்பட்ட முதல் வெள்ளிக்கிழமை, ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை குறித்த விவாதங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. மக்களவையில் ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே தனிநபர் தொடர்பான செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டது. அதுவும் ஒரு தீர்மானத்திற்காக மட்டுமே. மாநிலங்களவையில், வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடரின் போது பட்டியலிடப்பட்ட தனிநபர் மசோதாகளில், ஒரே வெள்ளிக்கிழமை 49 மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், ஒன்றின் மீது மட்டுமே விவாதம் தொடங்கியது, ஆனால், அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் (adjourned) அது குறைக்கப்பட்டது.
தனிநபர் மசோதாக்கள் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிசார்பின்றி தனிப்பட்ட நம்பிக்கைகள், தொகுதி கோரிக்கைகள் அல்லது உருவாகும் சமூகத் தேவைகளைப் பிரதிபலிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான தளத்தை வழங்கியுள்ளன.
குறிப்பிடத்தக்க ஒரு உதாரணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே அவர்கள் அக்டோபர் 28, 2019 அன்று லோக் சபாவில் அறிமுகப்படுத்திய “இணைப்பை துண்டிக்கும் உரிமை” (Right to Disconnect) மசோதாவாகும். இந்த மசோதா ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட வேலை தொடர்பான தகவல்தொடர்பிலிருந்து விலகுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதை முன்மொழிந்தது, டிஜிட்டல் காலத்தில் வேலை தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகரித்துவரும் அத்துமீறலை நிவர்த்தி செய்தது. இது ஆரம்ப நிலையை தாண்டி முன்னேறவில்லை என்றாலும், மன ஆரோக்கியம், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் அதிகமாக இணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் தொழிலாளர் உரிமைகள் குறித்த முக்கியமான தேசிய உரையாடலை இந்த மசோதா தூண்டியது. இது தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் எவ்வாறு முன்னோக்கி சிந்திக்கும் மற்றும் பாரம்பரியமற்ற யோசனைகளுக்கான வாகனங்களாக இருக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கடைசியாக தனிநபர் மசோதா சட்டமாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவை இன்னும் பொருத்தமானவையாக உள்ளனவா?
மாறாக, சில தனிநபர் உறுப்பினர் மசோதாக்கள் அதிக உறுதியான சட்டமியற்றும் தாக்கத்தைக் கொண்டிருந்தன. 2014-ல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கவையின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் “திருநங்கைகளின் உரிமைகள்” (Rights of Transgender Persons) மசோதாவை அறிமுகப்படுத்தினார். ஏப்ரல் 24, 2015 அன்று, இந்த மசோதா 40 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்ட முதல் தனிநபர் மசோதாவாக வரலாற்றை உருவாக்கியது. இது மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-க்கு இது அடித்தளமிட்டது. இந்த மசோதா தனிநபர் முன்முயற்சிகள் எவ்வாறு சட்டமியற்றும் கொள்கையை வடிவமைக்க முடியும் என்பதையும், சமூக ரீதியாக உணர்திறன் வாய்ந்த பிரச்சினைகளில் அரசாங்க நடவடிக்கையை கட்டாயப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.
தனிநபர் மசோதாக்கள் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தன்னிச்சையாக சிந்திக்க இடமளிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் சினாய்யா ஷெட்டி அவர்களின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை அளிக்கும் மசோதா இதற்கு ஒரு உதாரணம். அவரது தலையீடானது, அரசாங்க முன்னுரிமைகளால் அடிக்கடி கட்டுப்படுத்தப்படும் கருவூல அமர்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட தனிப்பட்ட நுண்ணறிவு அல்லது தொகுதி கருத்துக்களின் அடிப்படையில் சட்டங்களை அறிமுகப்படுத்த தனிநபர் உறுப்பினர் மசோதாக்களைப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தன்னிச்சையான செயல்பாட்டிற்கான இடம் சுருங்குகிறது (Shrinking space for independent action)
தனிப்பட்ட சட்டமியற்றல் முன்முயற்சிக்கான குறைக்கப்பட்ட இடத்திற்கு பங்களித்த மாற்றங்களை ஒருவர் புறக்கணிக்க முடியாது. 10-வது அட்டவணை மூலம் கட்சித்தாவல் தடை சட்டத்தை (Anti-Defection Law) அறிமுகப்படுத்திய 52-வது அரசியலமைப்பு திருத்தம், அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், குறிப்பாக கருவூல அமர்வு உறுப்பினர்கள், தங்கள் கட்சியின் சட்டமியற்றல் கொள்கையை தன்னிச்சையாக கேள்வி கேட்பதற்கோ அல்லது அதிலிருந்து விலகுவதற்கோ உள்ள திறனை வரம்புக்குட்படுத்தும் எதிர்பாராத விளைவையும் இது கொண்டுள்ளது. இத்தகைய கட்டமைக்கப்பட்ட சூழலில், தனிநபர் மசோதா என்பது கட்சி எல்லைகளைக் கடந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான கொள்கை மாற்றுகளை பரிந்துரைக்கக்கூடிய சில வழிகளில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் வாக்காளர்கள் கட்சி சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் என்றாலும், அவர்களின் தேர்வுகள் பெரும்பாலும் தனிநபரின் நேர்மை, நிபுணத்துவம் மற்றும் தொகுதிக்குள் உள்ள சாதனைப் பதிவு ஆகியவற்றால் சமமாக பாதிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்காக மட்டுமல்லாமல், தங்கள் தொகுதியினரின் ஆர்வங்கள் மற்றும் கவலைகளுக்கு குரல் கொடுப்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தனிநபர் உறுப்பினர் மசோதா செயல்முறையைப் பாதுகாக்க, ஒரு தொடர் நடைமுறை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
முதலாவதாக, தனிநபர் மசோதாக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை புனிதமானதாகக் (sacrosanct) கருதுவது அவசியம். தேசிய அவசரநிலை சூழ்நிலைகளைத் தவிர, நடைமுறை மற்றும் வணிக நடத்தை விதிகளில் திருத்தங்கள் இந்த நேரத்தை மீறுவதிலிருந்து வெளிப்படையாகப் பாதுகாக்க வேண்டும். தனிநபர் உறுப்பினர் மசோதாக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், நிலைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். பயனுள்ள விவாதம் மற்றும் தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை ஏற்றுக்கொள்ளும் திறனையும் செயல்படுத்துகிறது.
தரம், பொருத்தம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கான மசோதாக்களைத் திரையிடுவதற்குப் பொறுப்பான தனிநபர் மசோதாகளுக்காக குறிப்பாக ஒரு மறுஆய்வுக் குழுவை நிறுவுவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்கலாம். பொது முக்கியத்துவம் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான ஆதரவின் அடிப்படையில் விவாதத்திற்கான முன்னுரிமைப் பட்டியலைக்கூட இது பரிந்துரைக்கலாம். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது பரவலாக ஆதரிக்கப்படும் மசோதாக்கள் காலக்கெடுவிற்குள் அவையை அடைவதற்கு ஒரு விரைவான வழிமுறையும் அறிமுகப்படுத்தப்படலாம்.
அரசாங்கம் தனது சொந்த சட்டமியற்றும் பணிகளுக்கு போதுமான நேரம் இல்லை என்று நினைத்தால், வெள்ளிக்கிழமைகளை தனிநபர் மசோதாக்களுக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தின் வேலை நேரத்தை அதிகரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது, இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும். இதில் மதிய உணவு இடைவேளையும் அடங்கும். ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களை மட்டும் கூடுதலாகச் சேர்ப்பது கூட, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நேரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பூஜ்ஜிய நேரம் (Zero Hour) மற்றும் கேள்வி நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும். இந்தியா விரைவில் தொகுதி மறுவரையறை செய்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், சீர்திருத்தத்தின் அவசரம் முன்னெப்போதையும்விட அதிகமாக உள்ளது.
சர்வதேச நடைமுறையிலிருந்து மாற்றியமைக்கக்கூடிய ஒரு கட்டாய சீர்திருத்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பத்துநிமிட விதி - எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பிரையும் ஒரு தனி நபர் உறுப்பினர் மசோதாவுக்கு ஆதரவாக 10 நிமிடங்கள் வரை ஒரு குறுகிய உரையை நிகழ்த்தலாம். அதன் அறிமுகத்துடன், அதன் பிறகு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சமமான நேரத்திற்கு அதை எதிர்க்கலாம். இது நீண்டநேர இடைவெளிகள் இல்லாமல் மசோதாக்களை அறிமுகப்படுத்தவும், கேட்கவும், பதிவு செய்யவும் அனுமதிக்கிறது. இந்திய சூழலில் இதேபோன்ற ஒரு விதியை ஏற்றுக்கொள்வது, தற்போதுள்ள தனி நபர் மசோதா நடைமுறைகளுக்கு கூடுதலாகவோ அல்லது மாற்றாகவோ அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற யோசனைகள் பொதுக் களத்தில் நுழைவதற்கான ஒரு வழியை உருவாக்கலாம்.
இந்திய குடியரசுத்தலைவர்/மாநிலங்கவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதில் தனி நபர்களின் பங்கை வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்தனி நபர் மசோதாக்களை இந்தியாவின் சட்டமன்ற நிலப்பரப்புக்கு "தொலைநோக்குப் பார்வை கொண்டவை, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டவை மற்றும் ஒரு தங்கச் சுரங்கம்" என்று அவர் விவரித்தார். இந்த பொறிமுறையானது உண்மையாக ஆதரிக்கப்படும்போது அதன் மதிப்பு மற்றும் திறனை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
மெஹுல் சாப்ரா & அதர்வா தேஷ்முக் 2024-25ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்ட உதவியாளர்களாக (Legislative Assistants to Members of Parliament (LAMP)) உள்ளனர்.