பெண்கள் பெரும்பாலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்களில் பல முக்கிய பணிகளைச் செய்கிறார்கள். அவர்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள், போராட்டங்களை வழிநடத்துகிறார்கள், உணவு வழங்குகிறார்கள், இயக்கங்களைத் தொடர்ந்து நடத்த உதவுகிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் மீறி, அவர்கள் பொதுவாக முக்கியமான முடிவெடுப்பதில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
இந்தியாவிலும் தெற்காசியாவிலும், தீங்கு விளைவிக்கும் வளர்ச்சி, சுரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களுக்கு எதிராகப் போராடுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அழிவுகரமான சுரங்கம், அணைகள் மற்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது, அவர்களின் குரல்கள் அரிதாகவே கேட்கப்படுகின்றன.
பல இடங்களில், பெண்கள் வலுவான மற்றும் நீண்டகால எதிர்ப்பு இயக்கங்களை வழிநடத்தியுள்ளனர். உதாரணமாக:
ஒடிசாவின் சிஜிமாலியில், பெண்கள் தங்கள் காடுகளையும் வாழ்க்கை முறையையும் அச்சுறுத்தும் சுரங்கத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள். மேலும், அவர்கள் பெரும்பாலும் காவல்துறையினரிடமிருந்து வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
ஜார்க்கண்டின் தேவாஸில், ஆதிவாசி பெண்கள் தங்கள் மூதாதையர் நிலத்தைப் பாதுகாக்க நிலக்கரிச் சுரங்கத்தை தடுத்து நிறுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மீனவ சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தலைமை தாங்குகிறார்கள்.
இந்த போராட்டங்கள், குறிப்பாக பெண்கள், மக்களின் வாழ்க்கையையும் சுற்றுச்சூழலையும் மதிக்கும் வளர்ச்சிக்காக எவ்வாறு நிற்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.
தலைமை அங்கீகரிக்கப்படவில்லை
தீங்கு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தாலும், முக்கியமான விவாதங்களில் இருந்து அவர்கள் பெரும்பாலும் விலக்கப்படுகிறார்கள். பல சமூகங்களில், ஆண்கள் கூட்டங்களை வழிநடத்தி நிலம் பற்றிய முடிவுகளை எடுக்கிறார்கள். அதே நேரத்தில் இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சேதத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் பெரும்பாலும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக நிராகரிக்கப்படுகிறார்கள். அவர்களின் கருத்துக்கள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய ஆழமான அறிவை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக, பங்களாதேஷின் புல்பாரியில், நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். பெரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தபோது போலீஸ் வன்முறையை எதிர்கொண்டனர். இந்தியாவில், மேதா பட்கர் நர்மதா பச்சாவ் அந்தோலனுக்கு தலைமை தாங்கினார். இது பெரிய அணைகளால் ஏற்படும் தீங்குகளை எடுத்துக்காட்டியதற்காக சர்வதேச கவனத்தைப் பெற்றது. இருப்பினும், இந்த வலுவான முயற்சிகளுக்குப் பிறகும், கொள்கைகள் பெரும்பாலும் ஆண்களை விட இடப்பெயர்ச்சி பெண்களை எவ்வாறு வித்தியாசமாக பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றன.
சில தெற்காசிய நாடுகளில் பெண்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டங்கள் உள்ளன. இந்தியாவின் வன உரிமைகள் சட்டம் (India’s Forest Rights Act) (2006) மற்றும் PESA சட்டம் (PESA Act) (1996) ஆகியவை உள்ளூர் கவுன்சில்களில் (கிராம சபைகள்) பெண்களுக்குப் பங்குகளையும், வன வளங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளையும் வழங்குகின்றன. கணவன்-மனைவி இருவரும் நில உரிமையைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும் கொள்கையை நேபாளம் கொண்டுள்ளது. வங்காளதேசம் அதன் காஸ் (Khas) நிலத் திட்டத்தின் கீழ் நில விநியோகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிக்கிறது. ஆனால் உண்மையில், இந்த சட்டங்கள் சரியாக வேலை செய்வதில்லை. நிலம் இன்னும் பொதுவாக ஆணின் பெயரில் பதிவு செய்யப்படுகிறது. மேலும், பெண்கள் அரிதாகவே கூட்டு அல்லது தனி உரிமையாளர்களாக பட்டியலிடப்படுகிறார்கள். இந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உள்ள அமைப்புகள் பெண்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. உள்ளூர் கூட்டங்கள் இன்னும் பெரும்பாலும் ஆண்களால் நடத்தப்படுகின்றன. மேலும், இடம்பெயர்ந்த பல பெண்கள் குடும்பத் தலைவர்களாக அங்கீகரிக்கப்படாததால் அவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை.
பாலினத்தை மையமாகக் கொண்ட தேசிய நிலக் கொள்கை இந்தியாவில் இல்லை. மாநிலத் திட்டங்கள் பெரும்பாலும் தனியர், விதவை அல்லது முறையான ஆவணங்கள் இல்லாத பெண்களைப் புறக்கணிக்கின்றன. 2005ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம் பெண்களுக்கு சமமான பரம்பரை உரிமைகளை வழங்கியிருந்தாலும், பாரம்பரிய மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் இந்த உரிமைகளைத் தடுக்கின்றன. இதன் விளைவாக, சட்ட சிக்கல்கள் மற்றும் கலாச்சார மரபுகள் இரண்டும் இணைந்து, நிலம் பற்றிய முடிவுகளில் இருந்து பெண்களை விலக்கி வைக்கின்றன.
குறிப்பாக இந்தியா போன்ற இடங்களில், காலநிலை மாற்றம் பாலின சமத்துவமின்மையை மோசமாக்குகிறது. வானிலை வெப்பமடைவதால், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து, மாசுபாடு அதிகரிக்கும்போது, பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தண்ணீரைப் பெற நீண்ட தூரம் நடக்க வேண்டும், நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்க வேண்டும், அதிக வேலை செய்ய வேண்டும். ஆனால், இவை அனைத்திற்கும் குறைவான ஊதியம் பெற வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளிலும், பெண்கள் பொதுவாக காலநிலை மாற்றத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளிலிருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவும் யோசனைகளும் காலநிலை நடவடிக்கைக்கான திட்டங்களில் அரிதாகவே சேர்க்கப்படுகின்றன.
சர்வதேச விதிகள் மற்றும் நிதி திட்டங்களில் FPIC (Free, Prior, and Informed Consent) பெரும்பாலும் குறிப்பிடப்பட்டாலும், அது பொதுவாக பெண்களின் கருத்துக்களைக் கருத்தில் கொள்வதில்லை. பெண்கள் பேசுவதற்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்றால், மக்களின் கருத்துக்களைக் கேட்பதில் என்ன பயன்? சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் நீண்டகால விளைவுகளைப் புரிந்து கொள்ளாவிட்டால், அல்லது பெண்களின் தேவைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத ஆண் தலைவர்கள் மட்டுமே அந்த ஒப்புதலை வழங்கினால், மக்கள் ஒரு விஷயத்தை உண்மையிலேயே ஒப்புக்கொண்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
கட்டமைப்பு மாற்றம் தேவை
பாலின நீதி, காலநிலை நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய, மாற்றங்கள் தேவை. நிலம் அல்லது மேம்பாடு குறித்த எந்தவொரு விவாதங்கள் அல்லது முடிவுகளிலும் பெண்களும் இடம்பெறுவதை அரசாங்கங்களும் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் கலந்து கொள்ளக்கூடிய நேரங்களில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தேவைப்படும்போது பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பான இடங்கள் இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு மற்றும் சட்ட உதவி போன்ற ஆதரவும் கிடைக்க வேண்டும். பெண்கள் ஒரு ஆணின் வீட்டின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த உரிமையில் நில உரிமையாளர்களாகக் கருதப்பட வேண்டும்.
மேலும், சமூக இயக்கங்களில் பெண்களின் தலைமை அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டும். பெரும்பாலும், பெண்கள் ஒழுங்கமைத்தல் மற்றும் ஆதரவு வேலைகளில் அதிகம் செய்கிறார்கள். ஆனால், முக்கியமான முடிவெடுப்பதில் இருந்து விலக்கப்படுகிறார்கள். அரசுசாரா நிறுவனங்கள், ஆதரவாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற குழுக்கள் பெண்களை முக்கிய பாத்திரங்களில் சேர்க்க வேண்டும். மேலும், பேச்சுவார்த்தைகள், சட்டம் இயற்றுதல் மற்றும் இழப்பீடு குறித்து முடிவெடுப்பது போன்றவற்றிலும் அவர்களின் பங்கை உறுதி செய்ய வேண்டும்.
வளர்ச்சி நியாயமாக இருக்கவும், காலநிலை கொள்கைகள் நியாயமாக இருக்கவும், பொருளுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தவும், பெண்கள் அவற்றில் சேர்க்கப்பட மட்டும் கூடாது. அவர்கள் அதில் தலைமை தாங்க வேண்டும். அவர்களின் நிலைகள் பலவீனத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் வலிமையையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும். அதை நமது சட்டங்களும் கொள்கைகளும் அதைப் பிரதிபலிக்க வேண்டும்.
பூமிகா சவுத்ரி ஒரு சர்வதேச வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர். அவர் வணிகம் மற்றும் மனித உரிமைகள், பெருநிறுவன பொறுப்புக்கூறல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.