இந்தியா ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை சரியாகப் பெற வேண்டும்? -கே. அசோக் வர்தன் ஷெட்டி

 சாதிவாரி கணக்கெடுப்பு மில்லியன் கணக்கான மக்களின் உண்மையான வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. உண்மைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அரசாங்கக் கொள்கைகளை உருவாக்குவது ஒரு முக்கியமான படியாகும்.


அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்க்க நரேந்திர மோடி அரசு எடுத்த முடிவு ஒரு துணிச்சலான மற்றும் முக்கியமான படியாகும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அடையாள அரசியலுக்கு அடிபணியவில்லை. மாறாக மில்லியன் கணக்கான மக்களின் உண்மையான அனுபவங்களை அங்கீகரிப்பதாகும். இது ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது ஒரு நியாயமான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க உதவுகிறது. தனது சொந்தப் பிரச்சினைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு நாடு, முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்க முடியாது.


சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா சமூக நீதியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் சாதியை ஒழிக்க முயன்றது. இரண்டு குறிக்கோள்களும் முரண்படுவதால் இந்த அணுகுமுறை சிறப்பாக செயல்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியைக் கணக்கிட மறுப்பது சாதியைப் புறக்கணிக்கும் யோசனையின் ஒரு பகுதியாகும். இருப்பினும், கல்வி, வேலைகள் மற்றும் தேர்தல்களில் இடஒதுக்கீடு உட்பட சமூக நீதியை அரசியலமைப்பு கோருகிறது. இந்தக் கொள்கைகள் செயல்பட, துல்லியமான சாதி தரவு தேவை. அரசியலமைப்பு "பிரிவு" ("class") என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், இந்திய உச்சநீதிமன்றம் பல முறை சாதி என்பது பின்தங்கிய குழுக்களை அடையாளம் காண தேவையான வழியாகும் என்றும் நியாயமான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு விரிவான சாதி தரவு தேவை என்றும் தீர்ப்பளித்துள்ளது.


1955-ஆம் ஆண்டு எழுதிய 'மொழியியல் மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்' (‘Thoughts on Linguistic States’) என்ற கட்டுரையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து சாதித் தரவை விலக்கும் முடிவை விமர்சித்தார். அவர் அதை "அற்பமான புத்திசாலித்தனத்திற்கு" ஒரு எடுத்துக்காட்டு என்று அழைத்தார். சமூகத்தில் அனைவரையும் நியாயமாகச் சேர்க்க சாதித் தரவைச் சேகரிப்பது மிக முக்கியமானது. சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கொள்கைகளை உருவாக்குதல், இடஒதுக்கீட்டை நிர்வகித்தல் மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு இது உதவுகிறது. இந்தத் தரவு இல்லாமல், இந்தியாவின் பல விளிம்புநிலைக் குழுக்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து விடுபட்டுள்ளன. இது உயர் சாதியினர் மற்றும் செல்வாக்கு மிக்க பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) ஒரு சிறிய குழு, சாதித் தகவல் இல்லாததற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, செல்வம், வாய்ப்புகள் மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அனுமதித்துள்ளது. இவற்றை திரும்பிப் பார்க்கும்போது, ​​இது இந்தியாவின் மிகப்பெரிய கொள்கைத் தவறுகளில் ஒன்றாகும்.


சட்ட மற்றும் நிர்வாகத் தேவை


1951ஆம் ஆண்டு முதல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சாதியினர் (SCs) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (STs) கணக்கிடப்பட்டுள்ளனர். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) கணக்கிடப்படவில்லை. இருப்பினும் மூன்று குழுக்களும் கல்வி மற்றும் பொது வேலைகளில் இடஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்க்காததற்குக் காரணம், SCs மற்றும் ST-களைப் போலல்லாமல், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. இருப்பினும், 73வது மற்றும் 74வது திருத்தங்களுடன் இது மாறியது. இது உள்ளூர் அரசாங்கத் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது. இந்த மாற்றங்களைச் செயல்படுத்த, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) பற்றிய விரிவான தரவு தேவை.


2019-ஆம் ஆண்டில், அரசாங்கம் உயர் சாதியினரிடையே பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (Economically Weaker Sections (EWS)) இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இது அனைத்து சாதிகள் பற்றிய முழுமையான தரவுகளையும் சேகரிப்பது அவசியமாக்கியது.


இந்தியாவின் இடஒதுக்கீட்டு முறையில் தற்போது நம்பகமான சாதித் தரவு இல்லை. இது அரசியல் வசதி அல்லது சக்திவாய்ந்த குழுக்களின் அழுத்தத்தின் அடிப்படையில் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. சிறந்த தரவுகளுடன், மராத்தாக்கள், பட்டீதர்கள் மற்றும் ஜாட்கள் போன்ற குழுக்களின் கோரிக்கைகளை நன்கு புரிந்துகொண்டு நிவர்த்தி செய்யமுடியும். தற்போதுள்ள தரவுகள் கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுகின்றன: ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து ஒரு சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிகள் மட்டுமே கணிசமாகப் பயனடைகின்றன. அதே நேரத்தில் பலருக்கு மிகக் குறைவாகவோ அல்லது எதுவும் கிடைக்கவோ இல்லை.


எனவே, உயரடுக்கு சலுகைகளை ஏகபோகமாக்குவதைத் தடுக்கவும், குழுக்களை சிறப்பாக வகைப்படுத்தவும், "கிரீமி லேயர்" (ஒரு குழுவின் பணக்கார பகுதி) என யார் தகுதி பெறுகிறார்கள் என்பதை வரையறுக்கவும் விரிவான சாதித் தரவுகளைச் சேகரிப்பது அவசியம்.


சாதித் தரவு சேகரிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தாண்டிச் செல்ல வேண்டும். அனைத்து அரசாங்க கணக்கெடுப்புகளும், பட்டியல் சாதியினர் (SCs) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (STs) சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) மற்றும் உயர் சாதியினரையும் உள்ளடக்க வேண்டும். இதனால் முழுமையான மற்றும் துல்லியமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும். 


தோல்வி மற்றும் வெற்றியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது


2010-ஆம் ஆண்டில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி தரவுகளைச் சேர்க்க நாடாளுமன்றம் முடிவு செய்தது. 1931-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் "தாழ்த்தப்பட்ட வகுப்புகள்" சேர்க்கப்படாமல் 4,147 சாதிகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய மானுடவியல் ஆய்வு 6,325 சாதிகளை அடையாளம் கண்டுள்ளது. இருப்பினும், 2011-ஆம் ஆண்டு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census (SECC)) தோல்வியடைந்தது. இது அபத்தமான 46 லட்சம் சாதிகளைப் பட்டியலிட்டது மற்றும் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.


என்ன தவறு நடந்தது? முதலாவதாக, சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-ன் சட்ட கட்டமைப்பின் கீழ் நடத்தப்படவில்லை. எனவே, அதற்கு சட்ட அதிகாரம் இல்லை. இரண்டாவதாக, அத்தகைய விரிவான சமூக கணக்கெடுப்பைக் கையாள்வதில் நிபுணத்துவம் இல்லாத கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களால் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவதாக, கணக்கெடுப்பின் திறந்த கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தின. கணக்கெடுப்பாளர்கள் சாதிகள், மாற்றுப்பெயர்கள், துணை சாதிகள், குடும்பப் பெயர்கள் மற்றும் பிற தொடர்புடைய குழுக்களைக் குழப்பினர். இதன் விளைவாக குழப்பமான மற்றும் பயன்படுத்த முடியாத தரவுகள் கிடைத்தன. இது நாசவேலையால் ஏற்பட்டதா அல்லது ஒரு தவறா? எப்படியிருந்தாலும், ஒரு பெரிய வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. 


மாறாக, பீகாரின் சாதி கணக்கெடுப்பு சிறப்பாக செயல்பட்டது. கணக்கெடுப்பாளர்கள் 214 குறிப்பிட்ட சாதிகளின் தெளிவான பட்டியலையும், "பிற சாதிகள்" ("Other Castes.") என்பதற்கான விருப்பத்தையும் பயன்படுத்தினர். இந்த கணக்கெடுப்பு நன்கு திட்டமிடப்பட்டு சாதிகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்பதை வெற்றிகரமாகக் காட்டியது.


வெற்றிகரமான சாதிக் கணக்கெடுப்புக்கான வரைபடம்


சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC)-2011 தோல்வியை மீண்டும் நிகழாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


1. சட்ட ஆதரவு: சாதி கணக்கெடுப்பை கட்டாயமாக்கும் வகையில் 1948ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தை மாற்றவும், அரசியல் மாற்றங்களிலிருந்து அதைப் பாதுகாக்கவும் செய்ய வேண்டும்.


2. சரியான நிறுவனம்: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் மட்டுமே கையாள வேண்டும். மற்ற நிபுணத்துவம் இல்லாத அமைச்சகங்கள் இந்த பணியை மேற்கொள்ளக் கூடாது.


3. தரப்படுத்தப்பட்ட கேள்வித்தாள்: துணை சாதி, சாதி (பிற பெயர்கள் உட்பட), பெரிய சாதிக் குழு மற்றும் சாதி தொடர்பான குடும்பப்பெயர் (விரும்பினால்) போன்ற விருப்பங்களுடன் பதில் வரையறுக்கப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தவது, ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான டிஜிட்டல் குறியீடுகளை ஒதுக்குவதன் மூலம் பிழைகளைத் தவிர்க்க உதவும்.


4. மாநில-குறிப்பிட்ட சாதிப் பட்டியல்கள்: சாதிப் பட்டியல்களை உருவாக்க மாநில அரசுகள், நிபுணர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இறுதி செய்வதற்குமுன் பொதுக் கருத்துக்காக அவற்றை இணையத்தில் வெளியிட வேண்டும்.


5. கணக்கெடுப்பாளர் பயிற்சி: உள்ளூர் சாதி வேறுபாடுகள் குறித்த தெளிவான வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலுடன், பிராந்திய எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் பயிற்சி அளிக்க வேண்டும்.


6. டிஜிட்டல் கருவிகள்: சரிபார்க்கப்பட்ட சாதிப் பட்டியல்களுடன் கூடிய கையடக்க சாதனங்களை கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கவும், தரவு உள்ளீடு சரியான விருப்பங்களுக்கு மட்டுமே என்பதை உறுதிசெய்ய வேண்டும்.


7. பிரதிநிதித்துவ பணியாளர்கள்: தரவு ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக, பல்வேறு சமூகங்களிலிருந்தும், அவர்களுக்கு மோதல் இல்லாத பகுதிகளிலிருந்தும் கணக்கெடுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.


8. தன்னிச்சையான மேற்பார்வை: மாதிரிகளைச் சரிபார்த்து தரவு துல்லியத்தை உறுதிசெய்ய மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும்.


9. முன்னோட்ட சோதனை: நாடு தழுவிய அளவில் தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் இந்த செயல்முறையைச் சோதிக்கவும்.


1951 முதல், அரசாங்கம் ஏற்கனவே கிட்டத்தட்ட 2,000 சாதிகளை SC/ST பிரிவுகளின் கீழ் கணக்கெடுத்துள்ளது. மீதமுள்ள 4,000 OBC மற்றும் உயர் சாதியினரைக் கணக்கிடுவது சாத்தியம் மற்றும் அவசியமானது. தாமதமான 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த தரவு இடைவெளியை நிரப்ப ஒரு வாய்ப்பாகும். இது சாதி கணக்கெடுப்பை சரியாகப் பெறுவதற்கான நேரம் ஆகும்.


கே. அசோக் வர்தன் ஷெட்டி தமிழ்நாடு அரசின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.


Original article:
Share: