அரசியலமைப்பின் பிரிவு 143 என்ன கூறுகிறது? மற்ற நாடுகளும் அரசாங்கம் தங்கள் நீதித்துறைகளிடம் சட்ட கேள்விகளை எழுப்பக்கூடிய விதிகளைக் கொண்டுள்ளனவா? குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்தில் என்ன கேள்விகள் எழுப்பியுள்ளார்? இந்தக் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டாயமாக பதிலளிக்க வேண்டுமா?
தற்போதைய செய்தி: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, அரசியலமைப்பின் 143-வது பிரிவின் கீழ், சில சட்டக் கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு குறிப்பை வழங்கி, அந்தக் கேள்விகள் குறித்து அதன் கருத்தையும் கேட்டுள்ளார்.
வரலாற்றுச் சூழல் என்ன?
சட்டப்பிரிவு பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகாரம் 1935-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு பழைய சட்டத்திலிருந்து வருகிறது. பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டக் கேள்வியையும் கூட்டாட்சி நீதிமன்றத்தின் கருத்துக்காக அனுப்பும் விருப்புரிமை அதிகாரத்தை (discretionary power) இது கவர்னர் ஜெனரலுக்கு வழங்கியது.
கனட அரசியலமைப்பிலும் (Canadian constitution) இதே போன்ற ஒரு விதி உள்ளது. இந்த வழிமுறை கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு கூட்டாட்சி அல்லது மாகாண அரசாங்கங்களால் குறிப்பிடப்படும் சட்ட கேள்விகள் குறித்து கருத்துக்களை வழங்க அனுமதிக்கிறது. மறுபுறம், அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள கடுமையான அதிகாரப் பிரிவினையை உடைக்கும் என்பதால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு ஆலோசனைக் கருத்துக்களை வழங்குவதில்லை.
விதிகள் என்ன?
சட்டப்பிரிவு 143-ன் படி, முக்கியமான சட்ட அல்லது உண்மை பிரச்சினைகள் குறித்து குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கலாம். இது ஒன்றிய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
அரசியலமைப்பின் 145-வது பிரிவு, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கை குறைந்தது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
உச்ச நீதிமன்றம் தான் சரியென்று நினைக்கும் விதத்தில் விசாரணை நடத்திய பிறகு தனது கருத்தைத் தெரிவிக்கலாம். இந்தக் கருத்து சட்டப்பூர்வமாக குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது. மேலும், அடுத்தடுத்த வழக்குகளில் நீதிமன்றங்கள் இதைப் பின்பற்ற வேண்டியதில்லை.
இருப்பினும், அதன் வலுவான செல்வாக்கு காரணமாக இது அரசாங்கத்தாலும் நீதிமன்றங்களாலும் மதிக்கப்படுகிறது மற்றும் பின்பற்றப்படுகிறது.
கடந்த கால நிகழ்வுகள் என்ன?
தற்போதைய குறிப்புக்கு முன் 1950 முதல் சுமார் 15 குறிப்புகள் உள்ளன. அத்தகைய குறிப்புகளில் இருந்து சில முக்கிய கருத்துக்கள் இங்கே சுருக்கப்பட்டுள்ளன.
முதல் குறிப்பு டெல்லி சட்டங்கள் வழக்கில் (Delhi Laws Act case, 1951) செய்யப்பட்டது. இது “பிரதிநிதித்துவ சட்டம்” (Delegated Legislation) வரையறைகளை வகுத்தது. இதன் மூலம் சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் செயல்படுத்துவதற்கு சட்டமன்ற அதிகாரங்களை நிர்வாகத்திற்கு வழங்க முடியும். கேரள கல்வி மசோதா (Kerala Education Bill, 1958)-ல் குறிப்பிடப்பட்டதன் விளைவாக, அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு நெறிமுறை வழிகாட்டுதல் கோட்பாடுகளுக்கு இடையில் இணக்கமானக் கொள்கையை நீதிமன்றம் வகுத்தது, அத்துடன் பிரிவு 30-ன் கீழ் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் விளக்கத்தையும் வழங்கியது. 1960-ஆம் ஆண்டு பெருபாரி வழக்கில் இந்தியாவால் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவோ அல்லது கையகப்படுத்தவோ பிரிவு 368-ன் கீழ் அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. கேசவ் சிங் வழக்கில் (1965), நீதிமன்றம் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை விளக்கியது. 1974-ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தல் வழக்கில், மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால் தேர்தல் கல்லூரியில் [இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ள நபர்களின் குழுவைத் தேர்தல் கல்லூரி குறிக்கிறது.] காலியிடங்கள் இருந்தபோதிலும் குடியரசுத்தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சிறப்பு நீதிமன்றங்கள் மசோதா (Special Courts Bill, 1978) பற்றிய கருத்து பல வகையில் முக்கியமானதாக இருந்தது. நீதிமன்றம் ஒரு குறிப்பீட்டுக்கு பதிலளிக்க மறுக்கலாம் என்றும், குறிப்பிடப்படும் கேள்விகள் குறிப்பிட்டதாகவும் தெளிவற்றதாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்றும், மேலும் நீதிமன்றம், ஒரு குறிப்பீட்டுக்கு பதிலளிக்கும்போது, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் சலுகைகளை மீறக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது. மூன்றாவது நீதிபதிகள் வழக்கு குறிப்பீடு (Third Judges case reference, 1998) உயர் நீதித்துறைக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம் அமைப்புக்கு (collegium system) விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியது.
உச்சநீதிமன்றம் தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும், இன்றுவரை செய்யப்பட்ட குறிப்புகளில், 1993-ல் ராம ஜென்மபூமி வழக்கு தொடர்பாக ஒரே ஒரு குறிப்புக்கு மட்டும் தனது கருத்தை தெரிவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்போதைய குறிப்பு :
தற்போதைய குறிப்பு, மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் செயல்படுவதற்கான காலக்கெடுவைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் விளைவாகும். அத்தகைய மசோதாக்கள் மீதான ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள் நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போதைய குறிப்பு 14 கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டப்பிரிவுகள் 200 மற்றும் 201-ன் விளக்கத்தைச் சுற்றியுள்ளவை. அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் குறித்து அரசாங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு மசோதாவை சட்டமாக இயற்றுவதற்கு முன் ஒரு கட்டத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது. சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தால் பயன்படுத்தப்படும் அதிகாரங்களின் அளவு பற்றிய கருத்தையும் குறிப்பு கோருகிறது.
ஒன்றிய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகள் இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகும். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும்போது உள்துறை அமைச்சகத்தின் அலுவலகக் குறிப்பில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவை ஏற்றுக்கொண்டது. காவிரிப் பிரச்சனைக் குறிப்பில் (Cauvery dispute reference, 1992) அதன் ஆலோசனைத் திறனில் முந்தைய தீர்ப்புகள் மீது மேல்முறையீடு செய்ய முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. எவ்வாறாயினும், இந்தக் குறிப்பு பற்றிய அதிகாரபூர்வமான கருத்து, நமது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியின் சுமுகமான செயல்பாட்டிற்கு முக்கியமான இந்த அரசியலமைப்பு விதிகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்க்கும் என்று நம்புகிறோம்.
ரங்கராஜன் R. முன்னாள் குடிமைப் பணி அதிகாரி மற்றும் “Courseware on Polity Simplified” என்ற நூலின் ஆசிரியர்.