தற்போதைய செய்தி:
பல ஆண்டுகளாக விவாதத்தின் மையப் பொருளாக இருந்தபோதிலும், காலநிலை மாற்றம் தொடர்ந்து துரிதப்படுத்தப்படுகிறது. உலகளாவிய வெப்பநிலை 'மிகுவளர்ச்சிப் புள்ளி’ (tipping points) நோக்கி தொடர்ந்து நகர்கிறது மற்றும் பசுமை இல்ல வாயு செறிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்கின்றன. இந்த சூழலில், காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2025-ஆம் ஆண்டின் (Climate Change Performance Index 2025) கண்டுபிடிப்புகளை அறிந்துகொள்வது முக்கியமானது. ஏனெனில், இது காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்வதில் பல்வேறு நாடுகளின் முயற்சிகளின் படத்தை வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (Climate Change Performance Index (CCPI)) என்பது ஒரு தன்னிச்சையான கண்காணிப்பு கருவியாகும். இது 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) காலநிலை தணிப்பு செயல்திறனை கண்காணிக்கிறது. இது சர்வதேச காலநிலை அரசியலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட நாடுகளின் காலநிலை தணிப்பு முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை ஒப்பிடுவதை சாத்தியமாக்குகிறது. இது 2005-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
2. CCPI ஜெர்மன்வாட்ச் (Germanwatch), CAN இன்டர்நேஷனல் மற்றும் நியூ கிளைமேட் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது. ஜெர்மன்வாட்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு ஒவ்வொரு நாட்டின் செயல்திறனையும் நான்கு வகைகளில் மதிப்பிடுகிறது:
(i) பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் (ஒட்டுமொத்த தரவரிசையில் 40%),
(ii) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (20%),
(iii) ஆற்றல் பயன்பாடு (20%) மற்றும்
(iv) காலநிலை கொள்கை (20%) போன்றவையாகும்.
3. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு, ஒவ்வொரு நாடும் பாரிஸில் நிர்ணயிக்கப்பட்ட காலநிலை இலக்குகளை அடைவதற்காக வெளியேற்றங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் பயன்பாடு ஆகிய பகுதிகளில் எந்த அளவிற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுள்ளது என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறது.
2025-ஆம் ஆண்டின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின் சிறப்பம்சங்கள்
1. 2025-ஆம் ஆண்டு, காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (Climate Change Performance Index (CCPI)), முதல் மூன்று நிலைகள் காலியாக உள்ளன. 2025-ஆம் ஆண்டில் காலநிலை மாற்ற தணிப்பிற்கான அனைத்து அளவுகோல்களிலும் ஒரு நாடும் 'மிக உயர்ந்த' தரவரிசையில் இல்லை.
2. 2025-ஆம் ஆண்டில் டென்மார்க் CCPI குறியீட்டில் முதல் நாடாக (4-வது இடத்தில்) தனது தரவரிசையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகையில் மிக உயர்ந்த மதிப்பீட்டையும், பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் மற்றும் காலநிலை கொள்கையில் உயர்ந்த மதிப்பீட்டையும், ஆற்றல் பயன்பாட்டில் நடுத்தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
3. இந்த ஆண்டின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் டென்மார்க்கை அடுத்து நெதர்லாந்து 5-வது இடத்திலும் ஐக்கிய இராச்சியம் 6-வது இடத்திலும் உள்ளன.
2025-ஆம் ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (Climate Change Performance Index (CCPI)) முதல் இடத்தைப் பிடித்த முதல் 10 நாடுகள்:
4. உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 90%-க்கும் அதிகமானவற்றுக்கு காரணமான 64 நாடுகளில், 22 நாடுகள் மட்டுமே 2025-ஆம் ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அதே நேரத்தில் 42 நாடுகள் பின்தங்கியுள்ளன.
5. குறிப்பிடத்தக்க வகையில், G20 நாடுகள் உலகின் பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களில் 75%-க்கும் மேற்பட்டவற்றிற்கு காரணமாக உள்ளன. G20 அமைப்பில் 14 நாடுகள் குறைந்த அல்லது மிகக் குறைந்த CCPI மதிப்பெண்ணைப் பெற்றுள்ளன; எனினும், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை தனிநபர் குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களுடன் சரியான பாதையில் உள்ள இரண்டு G20 நாடுகளாகும்.
6. இதற்கு நேர்மாறாக, சீனா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates (UAE)) மற்றும் பல நாடுகள் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ளன.
2025-ஆம் ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (Climate Change Performance Index (CCPI)) கடைசி இடத்தில் உள்ள 10 நாடுகள்:
2025-ஆம் ஆண்டின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (CCPI) குறித்து இந்தியாவின் பார்வை
1. இரண்டு நிலைகள் கீழே சரிந்து, இந்தியா 2025 CCPI-ல் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. முதன்மை சாதனையாளர்களில் தொடர்ந்து இருக்கிறது. இந்தியா பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் மற்றும் ஆற்றல் பயன்பாடு வகைகளில் முன்னணி தரவரிசையிலும், காலநிலை கொள்கையில் நடுத்தர தரவரிசையிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தரவரிசையில் குறைந்த இடத்தில் உள்ளது.
2. இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கையில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, பெரிய அளவிலான சூரிய மின் நிலையங்கள் மற்றும் கூரை சூரிய மின் திட்டத்தின் (Rooftop Solar Scheme) அமலாக்கம் மூலம் இது நடந்துள்ளது. இந்த ஊக்கமளிக்கும் சாதனைகள் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் நிலக்கரியை சார்ந்தே உள்ளது மற்றும் நிபுணர்கள் அதன் படிப்படியான நீக்கம் மிகவும் மெதுவாக நகர்வதாக நம்புகின்றனர்.
Nexus அறிக்கை
1. உயிரி பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் குறித்த அரசுகளுக்கிடையிலான அறிவியல்-கொள்கை தளம் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES)) உலகளாவிய அறிவியல் நிபுணர்களின் குழுவாகும். இது கடந்த ஆண்டு உயிரி பன்முகத்தன்மை, நீர், உணவு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இது Nexus அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.
2. இது இந்த பல நெருக்கடிகளுக்கிடையிலான தொடர்புகளைப் பார்க்கும் முதல் வகையான அறிக்கையாகும். இந்த குழு காலநிலை மாற்றம், உயிரி பன்முகத்தன்மை இழப்பு, உணவு பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, மற்றும் ஆரோக்கிய அபாயங்கள் போன்ற ஐந்து முக்கிய சவால்களை ஆய்வு செய்தது .
3. Nexus அறிக்கை அடையாளம் காணப்பட்ட ஐந்து உலகளாவிய சவால்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை எடுத்துக்காட்டியது. அனைத்து சவால்களுக்கும் பதில்கள் ஒத்திசைக்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும். இதனால் இவற்றில் ஏதேனும் ஒன்றில் எடுக்கப்படும் நேர்மறை நடவடிக்கைகள் மற்றவற்றில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். இது தற்போதைய அணுகுமுறைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
4. உதாரணமாக, உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் ஒரு நேர்மறை நடவடிக்கையாகும். இது நிலம் மற்றும் நீர் வளங்கள் மற்றும் உயிரி பன்முகத்தன்மை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம்.
5. அறிக்கையில், பல்வேறு துறைகளில் பயன்களை வழங்கும் ஒத்திசைவான அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வது முக்கியமானது என்று வாதிடப்படுகிறது. இத்தகைய பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக, காடுகள், மண் மற்றும் கண்டல் காடுகள் போன்ற கார்பன் நிறைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டமைப்பது, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவும் அபாயத்தைக் குறைக்க உயிரியல் பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பது, நிலையான ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவிப்பது, மற்றும் முடிந்தவரை இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைச் சார்ந்திருப்பது ஆகியவை அடங்கும்.