ஸ்டார்ட்அப்20 உலகிற்கு வழங்குவது என்ன? -சிந்தன் வைஷ்ணவ், கியுலியா அஜ்மோன் மார்சன் & வுயானி ஜரானா

 இந்தியாவில் ஸ்டார்ட்அப்20 (Startup20) நாங்கள் தொடங்கியபோது, ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான மற்றும் சுதந்திரமான ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தைப் பேணுவதோடு, உலகம் முழுவதும் ஸ்டார்ட்அப் அமைப்புகளை சீரமைக்க உதவும் கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதே எங்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது.


2023-ஆம் ஆண்டு இந்தியாவின் G20 தலைமையின்போது ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. உலகத் தலைவர்கள் ஸ்டார்ட்அப்20-ஐ G20-ன் அதிகாரப்பூர்வ பகுதியாக முறையாக ஏற்றுக்கொண்டனர். இது G20 அமைப்புக்கு ஒரு முக்கியமான படியாகும். இதற்கு முன்பு, அனைத்து வணிக நிறுவனங்கள் அல்லது புதிய ஸ்டார்ட்அப்கள் போன்றவை  பிசினஸ் 20 (Business 20 (B20)) குழு மூலம் மட்டுமே கையாளப்பட்டன. ஸ்டார்ட்அப்20 இப்போது சேர்க்கப்பட்டுள்ளதால், ஜி20 வணிகத்திற்காக இரண்டு தனித்தனி குழுக்களைக் கொண்டுள்ளது. அவை: பெரிய, நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு B20 மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கு Startup20 போன்றவை ஆகும். கொள்கைகளை வடிவமைப்பதில் இரு குழுக்களும் இப்போது இவை சமமான பங்கைக் கொண்டுள்ளன.


இந்த சாதனை கிட்டத்தட்ட பத்துவருட நிலையான முன்னேற்றத்தின் விளைவாகும். 2015-ஆம் ஆண்டில், துருக்கி G20 அமைப்பை வழிநடத்தியபோது, சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் மீது கவனம் செலுத்தும் ஒரு குழு உருவாக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டில், ஜப்பான் இளம் தொழில்முனைவோர் கூட்டணியைத் (Young Entrepreneurs’ Alliance) தொடங்கியது. அது இன்னும் தனியாக இயங்குகிறது. 2021-ஆம் ஆண்டில், இத்தாலி G20 புதுமை லீக் (Innovation League) எனப்படும் முதல் G20 தொடக்கப் போட்டியை அறிமுகப்படுத்தியது. இந்தோனேசியா இதை 2022-ல் G20 டிஜிட்டல் புதுமை வலையமைப்பாக விரிவுபடுத்தியது. துருக்கி மற்றும் இந்தோனேசியா போன்ற வளரும் நாடுகளையும், இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளையும் உள்ளடக்கிய இந்த முயற்சிகள், தொடக்கநிலையாளர்களும் சிறு வணிகங்களும் நியாயமான மற்றும் நீடித்த உலகளாவிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்ற வளர்ந்து வரும் புரிதலைக் காட்டின.


இந்தியா வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் காட்சியைப் பயன்படுத்தி ஸ்டார்ட்அப்20-ஐ உருவாக்க பரிந்துரைத்தது. இது ஜி20-க்கு ஒரு புதிய சமநிலையைச் சேர்த்தது மற்றும் பெரிய நிறுவனங்களின் வலிமையையும் சிறிய நிறுவனங்களின் நெகிழ்வுத்தன்மையையும் இணைத்தது. கோவிட் தொற்றுநோய் இந்தக் கலவை எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை நிரூபித்தது. இந்த தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்குள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இது இதற்கு முன்பு நடந்ததில்லை. மாடர்னா, பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆய்வகங்கள் போன்ற சிறிய நிறுவனங்கள் தடுப்பூசிகளை ஆரம்பத்தில் உருவாக்க உதவியது. ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட்டாண்மை மூலம் அவற்றை உலகம் முழுவதும் பரப்ப உதவியது. பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் ஒரு பெரிய தாக்கத்திற்காக எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை இது காட்டுகிறது.


இந்தியாவில் ஸ்டார்ட்அப்20 தொடங்கப்பட்டபோது, ஒவ்வொரு நாட்டின் ஸ்டார்ட்அப் காட்சியின் சுதந்திரம் மற்றும் தனித்துவமான குணங்களை மதிக்கும் அதே வேளையில், உலகளாவிய ஸ்டார்ட்அப் அமைப்பை ஒன்றிணைக்கும் கொள்கை யோசனைகளை உருவாக்குவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. 2024-ஆம் ஆண்டில் பிரேசில் ஜி20 தலைமையை ஏற்றுக்கொண்டபோது, இந்த யோசனை அதன் முதல் உண்மையான சவாலை எதிர்கொண்டது. பிரேசில் தனது சொந்த ஸ்டார்ட்அப் அமைப்பை மேம்படுத்த விரும்பியது. இதனால் அது அதன் அரசாங்கத்திடமிருந்து ஆதரவையும் உலகளவில் கவனத்தையும் பெற்றது. மேலும் இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய கொள்கைப் பணிகளைத் தொடர விரும்பியது. இரண்டு இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த அமைப்பு 2025-ல் தென்னாப்பிரிக்காவில் அதன் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கும்போது பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொண்டது.


முதல் இரண்டு ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு வணிக சமூகங்களின் பகிரப்பட்ட தேவைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்க ஸ்டார்ட்அப்20 ஒரு தெளிவான செயல்முறையை உருவாக்க உதவியது. இருப்பினும், இரண்டு முக்கிய சிக்கல்கள் தெளிவாகின. இந்த யோசனைகளை தேசிய கொள்கைகளாக மாற்றுவதற்கான சரியான அமைப்பு இல்லை. மேலும் நீண்டகால பின்தொடர்தலை உறுதி செய்வதற்கான வழி இல்லை. இதைச் சரிசெய்ய, மன்றம் ஒரு சர்வதேச செயலகத்தை அமைக்க பரிந்துரைத்தது. இது ஸ்டார்ட்-அப் அமைப்பின்  உணர்வோடு நன்கு பொருந்தக்கூடிய ஒரு தீர்வாகும்.


இந்தியாவின் முதல் கொள்கை அறிக்கை, உலகளாவிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் G20 நாடுகளின் ஒருங்கிணைந்த முதலீட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற வலுவான அழைப்பை விடுத்தது. இந்த இலக்கை அடைய, அது சில அடிப்படை நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. முதலில், ஸ்டார்ட்-அப்களுக்கான பொதுவான வரையறையை உருவாக்கி, நிர்வாக விதிகளை சீரமைத்தல், இரண்டாவதாக, ஸ்டார்ட்-அப்கள் உலகளாவிய பணம், திறமை மற்றும் சந்தைகளை அணுக உதவும் அமைப்புகளை உருவாக்குதல், மூன்றாவதாக, பொதுவாக பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் குழுக்களை ஆதரிப்பதன் மூலம் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல், நான்காவதாக, நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) போன்ற உலகளாவிய இலக்குகளை ஆதரிக்கும் ஸ்டார்ட்-அப்களைக் கண்டுபிடித்து வளர்க்க உதவுதல் போன்றவை இதில் அடங்கும்.


பிரேசில் ஏற்கனவே உள்ள யோசனைகளை மேம்படுத்தி புதியவற்றைச் சேர்த்தது. நிதித்துறையில், முதலீட்டுத் தகவல்களை மிகவும் சீரானதாக மாற்றவும், பணத்தைத் திரட்ட டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தவும், ஆழமான தொழில்நுட்பத்தை ஆதரிக்க கலப்புநிதி கருவிகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்தது. இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை முக்கிய கவனம் செலுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வட்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிறுவனங்களில் தொடக்கங்களை முன்னிலைப்படுத்தியது. பிரேசிலின் G20 திட்டத்தின் முக்கிய பகுதிகளான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நல்ல நிறுவன மேலாண்மைக்கும் இது முக்கியத்துவம் அளித்தது. நெறிமுறை புதுமைக்கான விதிகளை உருவாக்குவதற்கும், நாடுகள் முழுவதும் விதிமுறைகளை சீரமைப்பதற்கும் ஒரு புதிய பணிக்குழு அமைக்கப்பட்டது.


தென்னாப்பிரிக்கா, G20 தலைவராக, ஜூலை 21 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் ஸ்டார்ட்அப்20-ன் 2025 கூட்டங்களைத் தொடங்கியது. ஐந்து சிறப்புக் குழுக்களான அடித்தளம் மற்றும் கூட்டணிகள், நிதி மற்றும் முதலீடு, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை, வர்த்தகம் மற்றும் சந்தை அணுகல், நகரியங்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவு மூலம் இந்தப் பணி தொர்ந்து செயல்படுத்தும்.


தென்னாப்பிரிக்க அத்தியாயத்தில் பல புதிய முன்னேற்றங்கள் உள்ளன. முதல் முறையாக, நகரியங்கள் மற்றும் கிராமப்புறங்கள் கொள்கைகளில் சிறப்புக் கவனம் பெறுகின்றன. தனியார் துறைத் தலைவர்கள் நாட்டின் நலன்களுக்காகப் பேச ஊக்குவிக்கப்படுகிறார்கள். மிக முக்கியமாக, கொள்கை பரிந்துரைகளை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான தீவிர முயற்சி இப்போது நடந்து வருகிறது.


ஸ்டார்ட்அப்20 தனது மூன்றாவது ஆண்டைத் தொடங்குகையில், நாம் ‘இந்த மன்றம் இல்லாமல் என்ன செய்ய முடியாது’ என்ற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்க வேண்டும். அது என்ன செய்யப் போகிறது? இதற்கான பதில் தெளிவாக உள்ளது: ஸ்டார்ட்அப்20 என்பது ஜி20 நாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு வணிக சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒன்றிணைந்து தங்கள் தேவைகளை வெளிப்படுத்தக்கூடிய மிக உயர்ந்த மட்ட தளமாகும். இது வேகமாக நகரும் ஸ்டார்ட்-அப் உலகம் பெரிய வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் உலகளாவிய கொள்கை விவாதங்களில் குரல் கொடுக்க அனுமதிக்கிறது.


வைஷ்ணவ் ஸ்டார்ட்அப்20-ன் நிறுவனத் தலைவராகவும், அஜ்மோன் மார்சன் சர்வதேச செயலக உறுப்பினராகவும், ஜரானா தென்னாப்பிரிக்கத் தலைவராகவும் உள்ளனர்.



Original article:

Share: