தமிழ்நாடு மாநில திட்டக்குழு அறிக்கை, 30 ஆண்டுகளில் கட்டுமான பரப்பு அதிகரிப்பால் வெப்ப அழுத்தம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது

 சென்னை, கரூர் மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகள் இப்போது தமிழ்நாட்டின் மிகவும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ளன. அதே நேரத்தில் உதகமண்டலம் மற்றும் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த பகுதிகள் கூட வெப்பமாகிவிட்டன என்று அறிக்கை கூறுகிறது.


தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் (State Planning Commission (SPC)) பகுப்பாய்வு, நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்களால் உயரும் வெப்பநிலை மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்தை உருவாக்குகிறது என்பதை அறிக்கை வெளிக்காட்டுகிறது.


நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டுமானப் பகுதி மற்றும் காலநிலை தொடர்புகளின் பத்தாண்டு கால மதிப்பீடு (Urban Growth and Thermal Stress: A Decadal Assessment of Built-Up Area and Climate Interactions in Tamil Nadu) என்ற தலைப்பில் இந்த ஆய்வு, தமிழ்நாடு வெப்பக் குறைப்பு உத்தி (2024) அடிப்படையாகக் கொண்டது. இது 30 ஆண்டுகால தரவுகளைப் பயன்படுத்துகிறது  செயற்கைக்கோள் படங்கள், நில உயர வரைபடங்கள் மற்றும் காலநிலை பதிவுகள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெப்பத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைக் முதல் முறையாக வெளிக்காட்டுகிறது.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, பல நகர்ப்புறவாசிகள் நீண்ட காலமாக உணர்ந்ததை உறுதிப்படுத்துகிறது - நகரங்கள் வெப்பமாகவும் வேகமாகவும் மாறி வருகின்றன என்பதையும் வெளிக்காட்டுகிறது.


2015-ஆம் ஆண்டு நிலவரப்படி சென்னையில் 74% கட்டுமானப் பகுதி, கோவை மற்றும் திருப்பூர் போன்ற தொகுதிகள் குறிப்பிடத்தக்க நகர்ப்புற விரிவாக்கத்தைக் கண்டுள்ளன. இது நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்புடன் நேரடியாக தொடர்புடையது. இந்த மாற்றங்கள் வெப்ப அசௌகரியத்தை மோசமாக்குவது மட்டுமல்லாமல், கட்டுமானம் மற்றும் ஆற்றல் அமைப்புகளையும் சிரமப்படுத்துகின்றன.


பகுப்பாய்வு செய்யப்பட்ட 389 தொகுதிகளில், 94 தொகுதிகள் வெப்பநிலையில் கடுமையான நீண்டகால அதிகரிப்பைக் காட்டின. அதே, நேரத்தில் 64 தற்போது கடுமையான வெப்ப அழுத்தத்தை அனுபவித்து வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், சென்னை, கரூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 25 தொகுதிகள் இரண்டு வகைகளிலும் அடங்கும், இதனால் அவை தமிழ்நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களாகின்றன.


பாரம்பரியமாக குளிர்ச்சியான உயரமான பகுதிகளான கொடைக்கானல், உதகமண்டலம் மற்றும் ஏற்காடு இனி பருவநிலை புகலிடங்களாக இல்லை.


காடுகள் அழிவு மற்றும் சுற்றுலா சார்ந்த வளர்ச்சி காரணமாக, கொடைக்கானல் 0.7°C மற்றும் திருத்தணியில் 1.2°C வரை குறிப்பிடத்தக்க வெப்பமயமாதல் பதிவாகியுள்ளது. வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 17 மலைப்பகுதிகளில் உள்ளன. இது வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழ்விடங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கவலையை அதிகரிக்க செய்கிறது.


எதிர்கால காலநிலை சூழ்நிலைகளின்கீழ் (RCP 4.5 மற்றும் 8.5), தமிழ்நாடு 2050-ஆம் ஆண்டிற்குள் 0.9°C முதல் 2.7°C வரை ஆண்டு காற்று வெப்பநிலை அதிகரிப்பை அனுபவிக்கக்கூடும். இத்தகைய மாற்றங்கள் பயிர்கள், நீர் வழங்கல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு - குறிப்பாக வெளிப்புற தொழிலாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு - தீங்கு விளைவிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.


தமிழ்நாட்டிற்கான உலகளாவிய உகந்த வெப்பநிலை குறியீடு (Universal Thermal Comfort Index) இப்போது பல மாவட்டங்களில் "வலுவான வெப்ப அழுத்தத்தை" பதிவு செய்கிறது. இது உயரும் வெப்பநிலை மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் வெப்பத்தின் நேரடி தாக்கத்தையும் குறிக்கிறது.


மாநில திட்டக்குழுவின் அறிக்கையின்படி, தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தின் (Tamil Nadu State Land Use Research Board (TNSLURB)) படி, கடந்த 20-ஆண்டுகளில் 3,025 சதுர கிலோமீட்டருக்கு மேல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த இழப்புகள் மேற்பரப்பு அல்பிடோவை (albedo) மாற்றி, ஆவியாதலைக் குறைத்து, நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை (Urban Heat Island effect) அதிகரிக்கச் செய்கின்றன. அதே நேரத்தில், ஒரு காலத்தில் பயிரிடப்பட்ட நிலங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் காலநிலை தடுப்பு பகுதிகளை மேலும் பாதிப்படைய செய்கின்றது.


1985-ஆம் ஆண்டில் சிறிய கட்டிடப் பரப்பளவைக் கொண்ட புறநகர் மண்டலங்களான ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் போன்ற பகுதிகள் விரைவாக நகரமயமாக்கப்பட்டு, இப்போது அதிக வெப்பத் தீவிரத்தைப் பதிவு செய்துள்ளன. கடலோரப் பகுதிகள் ஏற்கனவே கடல் மட்ட உயர்வு மற்றும் புயல்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இப்போது, ​​அவை மிக அதிக வெப்பத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் ஒன்றாகக் கையாள கவனமாகத் திட்டமிடுவது மிகவும் முக்கியம்.


பயனுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள்


தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வெப்பத்தை எதிர்த்துப் போராட, குறிப்பாக நகரங்கள், அருகிலுள்ள பகுதிகள் மற்றும் மலைகளில், புத்திசாலித்தனமான திட்டமிடல் தேவை என்று அறிக்கை கூறுகிறது.


பூங்காக்கள், பசுமை கூரைகள் மற்றும் ஊடுருவும் மேற்பரப்புகள் போன்ற பசுமை கட்டமைப்பை நகர திட்டமிடலில் ஒருங்கிணைப்பது நகர்ப்புற வெப்பத் தீவு விளைவைக் குறைக்கலாம், அதே நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிட குறியீடுகள் செயலற்ற குளிரூட்டும் அம்சங்கள், பசுமைப் போர்வை மற்றும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்க வேண்டும்.


நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும், எந்தெந்த நிலங்கள் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்றவை என்பதை சரிபார்ப்பது, கட்டுமானத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிக மரங்களை நடுவது முக்கியம் என்று அறிக்கை கூறுகிறது.


குறிப்பாக, கிராமங்கள் மற்றும் தரவு பற்றாக்குறை உள்ள பகுதிகளில், செயற்கைக்கோள்கள் மற்றும் தரையிலிருந்து நிகழ்நேரத் தரவைப் பயன்படுத்தி சிறந்த வெப்பக் கண்காணிப்பையும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. மிகவும் ஆபத்தில் உள்ள பகுதிகளில் உதவியை மையப்படுத்த, மாஸ்டர் பிளான்கள் மற்றும் பொலிவுறு நகர திட்டங்கள் (Smart City proposals) போன்ற முக்கியமான திட்டங்களில் வெப்பத் தரவைச் சேர்க்க பரிந்துரைக்கிறது.



Original article:

Share: