சுனாமிகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் இடம், ஆழம், பிளவு வகை மற்றும் நிலநடுக்கத்தின் அளவு ஆகியவை அடங்கும்.
ரஷ்யாவின் தொலை தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், புதன்கிழமை காலை ஹவாய் தீவுகள் மற்றும் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் அமெரிக்க கரையோரங்களுக்குத் தொடங்கிய 16 அடி உயர சுனாமி அலைகள் எழுந்தன.
ஈக்வடார், இந்தோனேசியா, பெரு, கொலம்பியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் பல்வேறு நிலைகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஒரு நிலநடுக்கம் எவ்வாறு சுனாமிக்கு வழிவகுக்கும் என்பதைப் பார்க்கலாம்.
முதலில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணி எது?
நிலநடுக்கம் என்பது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே நிகழும் அசைவினால் ஏற்படும் தரையின் கடுமையான அதிர்வாகும். பூமியின் இரண்டு பகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடக்கும் போது இது நிகழ்கிறது. இது சேமித்து வைக்கப்பட்ட 'மீள் அழுத்த' ஆற்றலை (elastic strain energy) நில அதிர்வு அலைகளாக (seismic waves) வெளியிடுகிறது. இது பூமி முழுவதும் பரவி நில அதிர்வை ஏற்படுத்துகிறது.
பூமியின் வெளிப்புற மேற்பரப்பு, புவியோடு, டெக்டோனிக் தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது. இந்தத் தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை பிளவு மண்டலங்களால் ஆனவை — இரண்டு பாறைத் தொகுதிகளுக்கு இடையேயான முறிவு மண்டலங்கள். டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவான வேகத்தில் நகர்கின்றன, ஒருவருக்கொருவர் சறுக்கி, மோதிக்கொள்கின்றன. தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கரடுமுரடாக இருப்பதால், அவை ஒருவருக்கொருவர் சிக்கிக்கொள்ள, மற்ற பகுதிகள் தொடர்ந்து நகர்கின்றன.
பூகம்பம் ஏற்படுவது, புவித்தட்டு போதுமான அளவு நகர்ந்து, பிளவுகளில் ஒன்றில் விளிம்புகள் பிரிந்து விடும்போது நிகழ்கிறது. ஐக்கிய மாகாண புவியியல் ஆய்வு மையம் (USGS) கூறுகையில், “பூகம்பம் தொடங்கும் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள இடம் பூகம்ப ஆரம்பப் புள்ளி (ஹைபோசென்டர்) எனப்படுகிறது, மற்றும் அதற்கு நேரடியாக மேலே பூமியின் மேற்பரப்பில் உள்ள இடம் பூகம்ப மையப் புள்ளி (எபிசென்டர்) எனப்படுகிறது.”
நிலநடுக்கம் எவ்வாறு சுனாமிக்கு வழிவகுக்கிறது?
சுனாமிகள் உருவாவதில் பல காரணிகள் ஈடுபட்டுள்ளன.
இருப்பிடம் & ஆழம்: நிலநடுக்கம் கடல் அடிப்பகுதியை இடமாற்றம் செய்யும் ஒரு கடல் நிகழ்வாக இருக்க வேண்டும். இது ஒரு ஆழமற்ற நிலநடுக்கமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இவை மேற்பரப்பிற்கு வரும்போது, மேற்பரப்பிற்கு கீழே ஆழமாக நிகழும் நிலநடுக்கங்களுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றலை கொண்டிருக்கும். ஆழமான நிலநடுக்கங்கள் நில அதிர்வு அலைகள் கதிர்வீச்சு முறையில் மேற்பரப்பிற்கு நகரும்போது அதிக தூரம் பரவுகின்றன என்றாலும், அதிக தூரம் பயணிக்கும்போது ஆற்றலை இழக்கின்றன.
ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக பூஜ்ஜியத்திற்கும் 70 கிமீக்கும் இடையில் ஆழத்தைக் கொண்டுள்ளன. கம்சட்கா நிலநடுக்கத்தைப் பொறுத்தவரை, ரஷ்யாவின் கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு கிழக்கே 136கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், 19.3கி.மீ ஆழம் குறைவாக இருந்தது. நிலநடுக்கம், சுனாமி அலைகளை உருவாக்க முடிந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
பிளவு வகை: சுனாமியை ஏற்படுத்தும் பூகம்பங்கள் பொதுவாக "தலைகீழ்" (reverse) பிளவு காரணமாக நிகழ்கின்றன. பிளவுக்கு மேலே உள்ள பாறை, கீழே உள்ள பாறையுடன் ஒப்பிடும்போது மேல்நோக்கி நகரும். பாறைகள் ஒன்றாகத் தள்ளப்படுவதால் இது நிகழ்கிறது. இந்தப் பிளவு இயக்கம் சுருக்க விசைகளால் ஏற்படுகிறது.
அளவு பெரியதாகவும், கடல் தளத்திற்கு அருகில் இருந்தால், அத்தகைய நிலநடுக்கத்திலிருந்து வரும் ஆற்றல் கடல் தளத்தை திடீரென உயர்த்தவோ அல்லது வீழ்ச்சியடையவோ காரணமாக இருக்கலாம். கடலில் ஏற்படும் இந்த இந்த திடீர் செங்குத்து இடப்பெயர்ச்சிதான் பொதுவாக சுனாமி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கை கூறுகிறது.
கம்சட்கா நிலநடுக்கமும் தலைகீழ் பிளவுகளின் விளைவாகும் என்று USGS தெரிவித்துள்ளது. கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் குரில்-கம்சட்கா அகழி உள்ளது. இது ஒரு டெக்டோனிக் தட்டு எல்லையாகும். அங்கு பசிபிக் தட்டு ஓகோட்ஸ்க் தட்டுக்கு அடியில் ஆண்டுக்கு சுமார் 86மிமீ என்ற விகிதத்தில் தள்ளப்படுகிறது. இது டெக்டானிக் தரநிலைகளின்படி ஒப்பீட்டளவில் அதிக வேகமாகும். மேலும், இப்பகுதியில் பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ காரணமாகிறது.
அளவு: சுனாமிகள் பொதுவாக 7.0க்கும் அதிகமான அளவு கொண்ட நிலநடுக்கங்களால் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், மிகவும் அழிவுகரமான வகையான சுனாமிகள் பொதுவாக 8.0ஐ விட அதிகமான அளவு கொண்ட நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த வகையான சுனாமிகள் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், பரந்த பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும்.
கம்சட்கா நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவில் பதிவானது. மேலும், 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.