வேளாண் துறையில் பொது முதலீடு என்பது ஒரு சவாலாகவே உள்ளது.
இந்தியா பல விவசாயத் திட்டங்களை, ஒருங்கிணைந்த குடை திட்டங்களாக (integrated umbrella programmes) இணைத்துள்ளதுடன், இது கொள்கை வகுப்பில் தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒத்திசைவை (coherence) மேம்படுத்துவது, நிர்வாகத்தை மிகவும் திறமையாக்குவது மற்றும் இதற்கான பலன்களை சிறப்பாக வழங்குவதே இதன் குறிக்கோளாகும். 2024–25-ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ₹1,22,529 கோடி ஒதுக்கீடு மற்றும் மொத்த மானியங்கள் ₹4.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்பதை நிதி அமைச்சகம், 2024 அறிக்கையின்படி குறிப்பிட்டுள்ளது. இது விவசாயத்திற்கான வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அரசாங்கம் சமீபத்தில் பிரதம மந்திரி தன்யா யோஜனாவை அறிமுகப்படுத்தியது. இது ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (Rashtriya Krishi Vikas Yojana) மற்றும் கிருஷோன்னதி யோஜனா (Krishonnati Yojana) போன்ற பழைய திட்டங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த முயற்சிகள் கிராமப்புற வளர்ச்சிக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஆனால் திட்டங்களை இணைப்பது விவசாயத் துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? அல்லது பொது முதலீடு இப்போது உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டுமா?
குடை திட்டங்கள் (umbrella schemes) அடிப்படை ஆதரவை வழங்கினாலும், பிரதம மந்திரி தன் தானியா யோஜனா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ₹4,000 கோடி போன்ற வருடாந்திர ஒதுக்கீடுகள், துறையின் பரந்த மற்றும் மாறுபட்ட தேவைகளுடன் ஒப்பிட வேண்டும். பல்வேறு வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலங்களில் 146 மில்லியனுக்கும் அதிகமான செயல்பாட்டு நிலங்கள் பரவியுள்ள நிலையில், தேவையான முதலீட்டின் அளவு தற்போதைய திட்டங்கள் மட்டும் வழங்கக்கூடியதைவிட அதிகமாக உள்ளது.
மூலதன உருவாக்கம் புறக்கணிக்கப்பட்டது
இன்று விவசாயத்தில் பொது முதலீடு பெரும்பாலும் உள்ளீட்டு மானியங்களில் (input subsidies) கவனம் செலுத்துகிறது. இது பெரும்பாலும் நீண்டகால மூலதன உருவாக்கத்தைப் புறக்கணிக்கிறது. இதன் காரணமாக, இந்தத் துறை வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான வரையறுக்கப்பட்ட திறனைக் கொண்டுள்ளது. உதாரணங்களில் நீர்ப்பாசன வலையமைப்புகள் (irrigation networks), குளிர்பதன சேமிப்புச் சங்கிலிகள் (cold storage chains), கிராமப்புற சாலைகள் (rural roads) மற்றும் தளவாட அமைப்புகள் (logistics systems) ஆகியவை அடங்கும். இந்த சொத்துக்கள் உற்பத்திக்கும் சந்தைகளுடன் இணைப்பதற்கும் மிகவும் முக்கியம். விவசாயத்தில் இந்தியாவின் மொத்த மூலதன உருவாக்கம் (Gross Capital Formation (GCF)) வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15-17 சதவீதம் ஆகும். இது மிகவும் வளர்ந்த வேளாண் பொருளாதாரங்களில் காணப்படும் 30 சதவீதத்தை விட மிகக் குறைவு. (ஆதாரம்: நிதி ஆயோக், 2021)
குறைவான முதலீட்டின் ஒரு முக்கிய விளைவு அறுவடைக்குப் பிந்தைய இழப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 15-20 சதவீதம் விளைபொருள்கள் இழக்கப்படுகின்றன. சேமிப்பு, போக்குவரத்து மற்றும் செயலாக்க வசதிகள் போதுமானதாக இல்லாததால் இது நிகழ்கிறது. இந்த இழப்புகள் கிட்டத்தட்ட ₹92,000 கோடி பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன (ICAR, 2022). இதை சரிசெய்ய, வேளாண் உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund (AIF)) உருவாக்கப்பட்டது. இது பத்து ஆண்டுகளுக்கு ₹1 லட்சம் கோடி திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பணம் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பரவ வேண்டும். இதன் பொருள் ஒவ்வொரு மாவட்டமும் ஆண்டுக்கு ₹15 கோடிக்கும் குறைவாகவே பெறுகிறது. இந்தத் தொகை இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானதாக இருக்காது.
வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development (R&D)) ஒரு முக்கியமான ஆனால் குறைவான ஆதரவுள்ள பகுதியாகவே உள்ளது. தற்போது, இந்தியா அதன் வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.3 சதவீதத்தை மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விரிவாக்க சேவைகளுக்கு செலவிடுகிறது. இது FAO பரிந்துரைத்த 1 சதவீதத்தைவிட மிகக் குறைவு. இருப்பினும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் கிட்டத்தட்ட 14 ரூபாய் வருமானத்தை ஈட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (ICAR-NIAP, 2021). காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள், துல்லிய வேளாண் மற்றும் நீர்-திறனுள்ள தொழில்நுட்பங்களில் முதலீடுகள் உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்தும். குறிப்பாக, காலநிலை மற்றும் சந்தையின் தாக்கங்களை எதிர்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
வேளாண் விரிவாக்க சேவைகளை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. கிருஷி விஞ்ஞான மையங்கள் (Krishi Vigyan Kendras (KVK)) மற்றும் டிஜிட்டல் தளங்கள் (digital platforms) நல்ல வளங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் திறனுடன் செயல்படுகின்றன.
புதுமையான மாதிரிகள்
பல மாநிலங்கள் புதிய மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான மாதிரிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த மாதிரிகள் மதிப்புமிக்க பாடங்களை வழங்குகின்றன. அதாவது, அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்த பஞ்சாப் AIF-ஐப் பயன்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ரிது பந்து திட்டம் (Rythu Bandhu scheme) விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் வருமான ஆதரவை வழங்குகிறது. வேளாண் பண்ணைகளில் வளங்களை உருவாக்க உத்தரபிரதேசம் MGNREGA நிதியைப் பயன்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில், பைலட் திட்டங்கள் (pilot projects) AI அடிப்படையிலான துல்லியமான விவசாய கருவிகளைப் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்பம் விவசாயத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன (MoAFW, 2023; NITI ஆயோக், 2022). உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உத்திகள், நிறுவனங்களால் முறையாக நிதியளிக்கப்பட்டு ஆதரிக்கப்படும்போது, உண்மையான முடிவுகளைத் தரும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.
தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதில் பொது முதலீடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நபார்டு வங்கியின் (NABARD) கூற்றுப்படி, விவசாயக் கடன் நிதியாண்டு 2026-ம் ஆண்டுக்குள் ₹32 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வலுவான பொது உள்கட்டமைப்பு மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகள் இருக்கும்போது இந்தக் கடன் சிறப்பாகச் செயல்படும்.
இந்தியாவின் வேளாண் கொள்கை காலப்போக்கில் நிறைய மாறிவிட்டது. இது சிதறிய திட்டங்களிலிருந்து ஒருங்கிணைந்த குடை திட்டங்களுக்கு மாறியுள்ளது. இப்போது, இந்த முன்னேற்றத்தை எதிர்காலத்தை மையமாகக் கொண்ட முதலீட்டு உத்தியை ஆதரிக்க வேண்டும்.
வாழ்வாதாரத்திலிருந்து நிலைத்தன்மைக்கு நகர, மானியங்கள் மூலதன முதலீடுகளுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இந்த முதலீடுகள் மீள்தன்மையை உருவாக்கி போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, உள்ளூர் நிறுவனங்களுக்கு நெகிழ்வான நிதியை வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இந்த நிதி அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்வது அடிநிலை மட்டத்தில் புதுமைகளைத் திறக்கும். e-NAM போன்ற டிஜிட்டல் தளங்கள் விவசாயிகளை சந்தைகள் மற்றும் சேவைகளுடன் இணைக்க உதவும். இருப்பினும், விவசாயிகள் தங்கள் டிஜிட்டல் திறன்களையும் மேம்படுத்தினால் இது சிறப்பாகச் செயல்படும்.
இறுதியில், வேளாண் ஆதரவை விரிவுபடுத்துவது மட்டும் முக்கியக் குறிக்கோளாக இருக்கக்கூடாது. விவசாயத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதே முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
எழுத்தாளர் சென்னை விஐடியின் இணைப் பேராசிரியர் ஆவர்.