இந்த வளங்கள் இல்லாமல், அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதியின் தரத்தை வழங்குவதில் அமைப்பு பின்னடைவு அடைகிறது.
1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரிகள் (Legal Services Authorities Act) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சட்ட சேவை அமைப்புகள், இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 80% பேருக்கு இலவச சட்ட உதவி வழங்கும் பணியை மேற்கொள்கின்றன. இருப்பினும், உண்மையான அணுகல் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை, 15.50 லட்சம் பேர் மட்டுமே சட்ட உதவி சேவைகளைப் பெற்றனர் - இது எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவான அளவாகும். இது முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட 12.14 லட்சத்திலிருந்து 28% அதிகரிப்பைக் குறிக்கிறது.
பொதுவாக உள்ளூர் நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சிறார் நீதி வாரியங்களுடன் (juvenile justice boards) இணைக்கப்பட்ட இந்த முன்பக்க அலுவலகங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், காவலில் இருப்பவர்களுக்கும், பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குழுவின் மூலம் இலவச சட்ட ஆலோசனை வழங்குகின்றன. கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில், சட்ட உதவி மையங்கள் (Legal Aid Clinics) கிராமப் பகுதிகளுக்கு சேவை செய்கின்றன. தேசிய அளவில், 2025ஆம் ஆண்டு இந்தியா நீதி (India Justice Report) அறிக்கையின் படி, ஒவ்வொரு 163 கிராமங்களுக்கும் ஒரு சட்ட சேவை மையம் உள்ளது. இந்த சேவைகளின் கிடைக்கும் தன்மை மற்றும் இருப்பு கிடைக்கும் நிதி மற்றும் மனித வளங்களைப் பொறுத்து இருக்கும்.
சட்ட உதவிக்கான பட்ஜெட்
சட்ட உதவிக்கான பட்ஜெட் மொத்த நீதி பட்ஜெட்டில் (காவல்துறை, சிறைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி) 1%க்கும் குறைவாகவே உள்ளது. இது மாநிலங்களால் வழங்கப்படுகிறது மற்றும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) மூலம் ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது. இது மாநில சட்ட சேவைகள் ஆணையங்களுக்கு (State Legal Services Authorities (SLSAs)) மானியங்களை வழங்குகிறது.
மொத்த ஒதுக்கீடு 25 மாநிலங்களில் 2017-18-ல் ரூ.601 கோடியிலிருந்து 2022-23-ல் ரூ.1,086 கோடியாக இரட்டிப்பானது. இந்த வளர்ச்சி மாநில சட்ட உதவி பட்ஜெட்டுகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டது. இது ஒட்டுமொத்தமாக ரூ.394 கோடியிலிருந்து ரூ.866 கோடியாக அதிகரித்தது. 13 மாநிலங்கள் சட்ட உதவி பட்ஜெட்டுக்கான தங்கள் அந்தந்த ஒதுக்கீடுகளை 100%-க்கும் அதிகமாக அதிகரித்தன. அவற்றில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் முன்னணியில் இருந்தன. அதே காலகட்டத்தில் (2017-18 முதல் 2022-23 வரை), NALSA-ன் நிதி ரூ.207 கோடியிலிருந்து ரூ.169 கோடியாக குறைந்தது. தேசிய சட்ட சேவைகள் ஆணைய நிதியின் பயன்பாடும் 75%-லிருந்து 59%-ஆக குறைந்தது.
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களுக்கான தேசிய சட்ட சேவைகள் ஆணைய 2023 கையேட்டின்படி, மாநில சட்ட சேவைகள் ஆணையங்கள் முன்னர் அனுமதி பெறாமல் NALSA நிதியிலிருந்து பணத்தை சில விஷயங்களுக்கு செலவிட முடியாது. இவற்றில் திட்ட அல்லது முன்பக்க அலுவலக ஊழியர்களை பணியமர்த்துதல், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவது, வெளி ஊழியர்களுக்கு பணம் செலுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், உணவு விநியோகம் மற்றும் மரங்களை நடுதல் போன்றவை அடங்கும். அதற்குப் பதிலாக, நிதி குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சட்ட சேவை ஆணையம் உத்தரவிட்டது. சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கு 50%, விழிப்புணர்வு திட்டங்களுக்கு 25% மற்றும் மத்தியஸ்தம் (Mediation) மற்றும் தகராறு தீர்வுக்கு 25% உச்சவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2019 முதல், சட்ட உதவிக்கான தேசிய தனிநபர் செலவு தோராயமாக ரூ.3-லிருந்து ரூ.7-ஆக இரட்டிப்பானது. 2022-23-ஆம் ஆண்டின் உண்மையான செலவு புள்ளிவிவரங்களின் படி அதிகபட்ச செலவு ஹரியாணாவில் (ரூ.16) இருந்தது, அதே நேரத்தில் ஜார்க்கண்ட் (ரூ.5), அசாம் (ரூ.5), உத்தர பிரதேசம் (ரூ.4), பீகார் (ரூ.3), மற்றும் மேற்கு வங்கம் (ரூ.2) சராசரி ரூ.6 தனிநபர் செலவை விட குறைவாக செலவிட்டன.
சுருங்கி வரும் முன்னணி வரிசை
குறைந்த நிதி முன்னுரிமை மற்றும் ஏற்கனவே உள்ள நிதியை மோசமாகப் பயன்படுத்துவதன் தாக்கம் முன்னணி பதிலளிப்பவர்களையே பாதிக்கிறது. பயிற்சி பெற்ற சமூக வளங்களான சட்ட உதவி தன்னார்வலர்கள் (Para-legal volunteers), விழிப்புணர்வை உருவாக்குகிறார்கள், தகராறுகளைத் தீர்ப்பதில் உதவுகிறார்கள், மேலும் மக்களுக்கும் சட்ட உதவி சேவைகளுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுகிறார்கள். சட்ட உதவி தன்னார்வலர்களின் மொத்த எண்ணிக்கை 2019 மற்றும் 2024-க்கு இடையில் 38% குறைந்துள்ளது. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 5.7 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2023-ல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 3.1 ஆக மட்டுமே இருந்தது. மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு சட்ட உதவி தன்னார்வலர் மட்டுமே இருந்தார்.
குறைந்த பட்ஜெட் சட்ட உதவி தன்னார்வலர்கள் (ஒரு நாளுக்கு அடிப்படையில் ஊதியம்வழங்கப்படுகிறது) களத்தில் பணியமர்த்தும் திறனையும் கட்டுப்படுத்துகின்றன. பல ஆண்டுகளாக, பயிற்சி பெற்ற மற்றும் பணியமர்த்தப்பட்ட துணை சட்ட தன்னார்வலர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2023-24-ல், பயிற்றுவிக்கப்பட்ட 53,000 சட்ட உதவி தன்னார்வலர்களில், வெறும் 14,000 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். அதே சமயம் 2019-20-ல், 63,000 பேர் பயிற்றுவிக்கப்பட்டனர் மற்றும் 22,000 பேர் பணியமர்த்தப்பட்டனர். சட்ட உதவி தன்னார்வலர்களுக்கான கௌரவ ஊதியத்தை திருத்த மாநிலங்கள் தயக்கம் காட்டுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவை அரிதான விதிவிலக்குகளைத் தவிர, இந்தியா முழுவதும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு கீழே உள்ளன. மார்ச் 31, 2023 நிலவரப்படி, கேரளா மட்டுமே சட்ட உதவி தன்னார்வலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.750 கௌரவ ஊதியம் வழங்கிய ஒரே மாநிலமாக இருந்தது. 22 மாநிலங்கள் ஒரு நாளுக்கு ரூ.500 வழங்கின, மூன்று மாநிலங்கள் ரூ.400 வழங்கின, மற்றும் மீதமுள்ள மூன்று மாநிலங்களான குஜராத், மேகாலயா மற்றும் மிசோரம் ரூ.250 வழங்கின. இது அடிப்படை தினசரி செலவுகளை ஈடுகட்ட கூட போதுமானதாக இல்லை.
2022ஆம் ஆண்டு வரை, சட்ட சேவைகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இருவருக்கும் வழக்குகளை எடுத்துக் கொண்டனர். 2022 முதல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டுமே உதவும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (Legal Aid Defence Counsel (LADC)) என்ற புதிய திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (National Legal Services Authority (NALSA)) நடத்தி வருகிறது. இந்தத் திட்டம் பொது பாதுகாப்பு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் தற்போதுள்ள வழக்கறிஞர் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. பொது பாதுகாவலர் அமைப்பின் (Public Defender System) மாதிரியில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், ஒதுக்கப்பட்ட ஆலோசகர் அமைப்பை நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள்/குற்றவாளிகள் அர்ப்பணிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மூலம் தரமான மற்றும் பயனுள்ள சட்ட உதவியை அணுக முடியும் என்பதை உறுதி செய்ய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் இந்தத் திட்டத்தை தொடங்கியது. இது இப்போது இந்தியாவின் 670 மாவட்டங்களில் 610 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. 2023-23-ஆம் ஆண்டில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்களுக்காக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ரூ.200 கோடியை சிறப்பாக ஒதுக்கியது அந்த தொகை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. எனினும், 2024-25-ல், ஒதுக்கீடு ரூ.147.9 கோடியாக குறைந்தது. சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் திட்டம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஏனெனில், இது மற்ற வழக்கறிஞர்களுக்கும் முழு அமைப்பிற்கும் வேலைப்பளுவைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இது இன்னும் புதியது என்பதால், இது வெற்றியடைந்ததா என்று சொல்வது கடினமாக உள்ளது.
சட்ட உதவிக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநிலங்கள் முயற்சிகளை மேற்கொண்டாலும், சீரற்ற சேவை தரம், பொறுப்புடைமை செயல்முறை இல்லாதது மற்றும் நம்பிக்கையின்மை போன்ற நீண்டகால பிரச்சினைகள் இன்னும் அதன் செயல்திறனைக் குறைக்கின்றன. அதிக பணம் மற்றும் ஊழியர்களைச் சேர்ப்பதன் மூலம் இந்த சிக்கல்களில் பலவற்றை சரிசெய்ய முடியும். சட்ட உதவி அமைப்புகளை பயனுள்ளதாக மாற்ற அவற்றின் திறனை அதிகரிப்பது அவசியம். இந்த வளங்கள் இல்லாமல், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதியின் தரத்தை வழங்குவதில் இந்த அமைப்பு தோல்வியடைகிறது.
அர்ஷி ஷோகட், சௌமியா ஸ்ரீவஸ்தவா மற்றும் வாலே சிங் ஆகியோர் இந்திய நீதி அறிக்கையில் பணிபுரிகின்றனர்.