மாநில நிதி நிலைமைகள் கவலைக்கிடமான போக்கை காட்டுகின்றன.

 மாநிலங்கள் தங்கள் நிலுவையில் உள்ள கடனைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


கோவிட்-க்குப் பிறகு ஒன்றிய அரசின் நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளின் முன்னெடுப்பு, பெரும்பாலான மாநிலங்களால் ஈடுசெய்யப்படவில்லை. மருத்துவச் செலவுகள் மற்றும் பலவீனமான பொருளாதாரத்தை ஆதரிப்பு ஆகியவை நிதியாண்டு 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளில் அதிக பற்றாக்குறையை ஏற்படுத்தியது. ஆனால், 2030-ம் ஆண்டுக்குள் அதன் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கோவிட்-க்கு முந்தைய நிலைகளுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. மேலும், 2022 முதல் நிதிநிலைக்கு வெளியே கடன் வாங்குவதை நிறுத்தியுள்ளது. பல மாநிலங்கள் இதேபோன்ற விவேகத்தைக் காட்டவில்லை. மாநிலங்களில் கடன் அளவுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து கவலைகள் உள்ளன. சுகாதாரம் மற்றும் கல்விக்கு செலவிடுவதற்குப் பதிலாக, மாநிலங்கள் அதிக இலவசங்களை வழங்குகின்றன.


நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட தரவு, மாநில அரசுகள் நிதியாண்டு 2025-ம் ஆண்டில் நிதிநிலைக்கு வெளியே கடன்களில் (அரசு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட கடன்கள்) 38 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன, இது ₹29,335 கோடியாக உள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் எடுத்த கடன்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் உத்தரவாதங்களும் அதிகமாகவே உள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் முந்தைய ஆண்டைவிட FY26-ல் அதிக சந்தை கடன் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளன. FY22 முதல், ஒன்றிய அரசு மாநிலங்களின் இந்த நிதிநிலை அறிக்கை அல்லாத கடன்களை மொத்த மாநில கடன்களுடன் சேர்த்து வருகிறது. இந்த நிதிநிலை அல்லாத கடன்கள் கோவிட் தாக்கத்தின்போது, உச்சமான ₹67,181 கோடியிலிருந்து குறைந்திருந்தாலும், கடந்த நிதியாண்டில் அதிகரிப்பு காணப்பட்டது. இந்த உயர்வு, மாநிலங்கள் தங்கள் வருவாய் அனுமதிக்கும் அளவைவிட அதிகமாக செலவிடுகின்றன என்பதைக் குறிக்கிறது. தற்செயல் பொறுப்புகளான உத்தரவாதங்கள், மொத்த கடன் சுமையையும் அதிகரிக்கின்றன. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் இராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் தங்கள் மாநில GSDP-யில் 8-15 சதவீதத்திற்கு சமமான உத்தரவாதங்களை வழங்கியுள்ளன.


உத்தரவாதங்களைக் கணக்கிடாமல்கூட, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த கடன்-GSDP விகிதம் FY25-ல் 28.8 சதவீதமாக இருந்தது என்று RBI-ன் மாநில நிதி அறிக்கை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே விருப்பமான 25 சதவீத அளவைவிடக் குறைவான கடன்-GSDP விகிதத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் 39-52 சதவீத விகிதங்களில் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்த கடன்களைக் கொண்டுள்ளன. பெரிய மாநிலங்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானவை 2026 நிதியாண்டில் அதிக சந்தைக் கடன்களுக்கு பட்ஜெட் செய்வதால், கடனைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலான மாநிலங்களுக்கு முன்னுரிமையாக இல்லை என்று தெரிகிறது. அதிகரித்து வரும் வட்டி செலவுகள் வளர்ச்சி மற்றும் மூலதன செலவினங்களுக்கு கிடைக்கும் பணத்தைக் குறைக்கின்றன. எனவே, மாநிலங்களின் நிலுவையில் உள்ள கடனைக் குறைப்பது அவசரமானது. வரிவருவாயைத் திரட்டுவதில் மாநிலங்கள் குறைவான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும், அவை வரி அல்லாத வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும். மாநில பயன்பாட்டு சேவைகளுக்கான மானியங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 2025 நிதியாண்டில் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கு செலவிடப்படும் ₹1 லட்சம் கோடிக்கும் இது பொருந்தும். அதேபோல், 'பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு' (old pension scheme) மீண்டும் மாறுவது, அதைத் தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு இறுதியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.


வருவாய் பக்கத்தில், 2026-ம் நிதியாண்டுக்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி முடிவடையக்கூடும் என்பது மாநில பட்ஜெட்டுகளை பாதிக்கும். இருப்பினும், மாநிலங்களுக்கு கனிம உரிமைகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை உறுதி செய்து, இந்த வரியிலிருந்து பின்னோக்கிய கோரிக்கையை வசூலிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவு சில மாநிலங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மொத்தத்தில், மாநிலங்கள் தங்கள் செலவினங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தூய்மையான பரப்பரப்பு நடவடிக்கைகளை மெதுவாக்க வேண்டும்.



Original article:

Share: