சமூக நீதி ஆலயங்கள் -மனுராஜ் சண்முகசுந்தரம், ஸ்வேதா சேதுபாஸ்கரன்

 கோயில் விவகாரங்களில் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிரான எந்த வாதமும் சமூக நீதியின் ஆணிவேரைத் தாக்குவதாக இருக்கும்.


சமீபத்தில், தமிழ்நாட்டில் கல்லூரிகளை கட்டுவதற்காக கோயில் நிதி பயன்படுத்தபடுவதாக அரசியல் சர்ச்சை வெடித்தது. அரசியல் விவாதங்களை தாண்டி, மதத்துடன் தொடர்புடைய மதச்சார்பற்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு தனித்துவமான சமூக நீதி மாதிரியை இது எடுத்துக்காட்டுகிறது. முந்தைய சென்னை மாகாணத்தால் உருவாக்கப்பட்ட இந்த மாதிரி, 200 ஆண்டுகள் பழமையான சட்டமன்ற கட்டமைப்பிலிருந்து பலத்தைப் பெறுகிறது. இது இன்றுவரை தொடர்கிறது. இது தென்னிந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்தப் பிரச்சினையைத் தெளிவுபடுத்துவது, வாக்காளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைத் தடுக்க உதவும்.


மத அறக்கட்டளைகள் சட்டம்


மத அறக்கட்டளைகள் மற்றும் உரிமையற்ற சொத்து ஒழுங்குமுறை  (Religious Endowment and Escheats Regulation) மூலம், கிழக்கிந்திய கம்பெனி மத அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியுள்ள ஆரம்பகால சட்டமன்றக் கட்டமைப்பை அமைத்தது. பிரிட்டிஷ் அரசு 1858-ல் இந்தியப் பிரதேசங்கள் மீது நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டபோது, மகாராணி விக்டோரியா ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அதன்படி, மத விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது என்று உறுதியளித்தார். மதப் பிரச்சனைகளால் தொடங்கிய 1857 சிப்பாய் கலகத்திற்குப் பிறகு அரசு மரியாதை இழந்துவிடுமோ என்று ஆங்கிலேயர்கள் கவலைப்பட்டதால் இது தேவைப்பட்டது.




உரிமையற்ற சொத்து ஒழுங்குமுறை (Escheats Regulation) என்பது என்ன?


உரிமையற்ற சொத்து ஒழுங்குமுறை என்பது, உரிமையாளர் இல்லாத அல்லது வாரிசு இல்லாத சொத்துக்களை (escheats) அரசு கையகப்படுத்தி, அவற்றை பொது அல்லது தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பைக் குறிக்கிறது. 


எனினும், மத விவகாரங்களிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக விலகவில்லை. உண்மையில், சென்னை மாகாணம் மீது பிரிட்டிஷ் அதிகாரிகள் மதச் சொத்துக்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்பினர். இறுதியாக, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமநிலையான அணுகுமுறைக்கு உடன்பட்டது. இறையாண்மை அடிப்படையில் மத ரீதியான சடங்குகள் போன்ற நடைமுறைகளில் தலையிட மாட்டோம் என்று கூறினார். இருப்பினும், நிலங்கள் மற்றும்  மதச்சார்பற்ற சொத்துக்களின் மீது தொடர்ந்து அதிகம் செலுத்தினர்.


1920-ஆம் ஆண்டு, நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து, மதராஸ் சட்டமன்றத்தில் இந்து மத அறக்கட்டளைச் சட்டத்தை (1922-ஆம் ஆண்டு மசோதா எண் 12) அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் மத நிறுவனங்களை அரசாங்கம் மேற்பார்வையிட அனுமதிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்தச் சட்டம் சென்னை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கூடுதல் கோயில் பணத்தை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்த அனுமதித்ததால் பலர் அதை எதிர்த்தனர்.


ஒரு கோவிலுக்கு வழங்கப்படும் பணத்தை மதச்சார்பற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியுமா என்பது முக்கிய கேள்வியாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 1925-ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்ட பின்னர் சட்டம் இயற்றப்பட்டது. அப்போதிருந்து, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைச் சட்டம் (Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act) கூடுதல் கோயில் நிதியை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த தொடர்ந்து அனுமதிக்கிறது.

1959 சட்டத்தின் பிரிவு 36, மத நிறுவனங்களின் அறங்காவலர்கள் குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக கூடுதல் பணத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், அது ஆணையரின் அனுமதியைப் பெற்ற பின்னரே நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறுகிறது. 'உபரி' (Surplus) என்பது கோயிலின் பராமரிப்பு மற்றும் அதன் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு மீதமுள்ள பணத்தைக் குறிக்கிறது. அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகளில், இணை ஆணையர் அல்லது துணை ஆணையருக்கு நிதி ஒதுக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.


கோயில்களுக்கான அறக்கட்டளைகள் நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. சோழப் பேரரசு உச்சத்தில் இருந்த கி.பி 970-ஆம் ஆண்டு முதல், கோயில்கள் இறையாண்மை கொண்ட ஆட்சியாளர்களிடமிருந்து ஏராளமான நன்கொடைகளைப் பெற்றன. சோழ ராணி செம்பியன் மகாதேவி கோயில்களுக்கு நிலத்தையும் வளங்களையும் நன்கொடையாக அளித்ததாக வரலாற்றாசிரியர் அனிருத் கனிசெட்டி விளக்குகிறார். இந்த நடைமுறை பின்னர் விஜயநகர பேரரசின் காலத்திலும் பின்பற்றப்பட்டது. கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை; அவை சமூக மற்றும் கலாச்சார மையங்களாகவும், கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன. கல்வி அல்லது கலாச்சார நிகழ்வுகளை நடத்தப் பயன்படுத்தப்பட்ட கோயில் சுவர்களிலும், விசாலமான மண்டபங்களிலும் உள்ள கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. உண்மையான வாதங்கள், கோயில் வளங்கள் கல்விக்காகவும் பயன்படுத்தப்பட்டன என்ற கருத்தை இது ஆதரிக்கிறது.


1959-ஆம் ஆண்டு சட்டம் நீதிமன்றங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1959 சட்டத்தின் பிரிவு 66, உபரி நிதியின் அனுமதிக்கப்பட்ட பயன்பாடுகளில், பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளைத் தொடங்கவும் அவற்றை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. இந்தக் கல்வி நிறுவனங்கள் இந்து மதம் அல்லது கோயில் கட்டிடக்கலை பற்றி கற்பிக்க வேண்டும். இந்த சூழலில், கல்லூரிகளைக் கட்ட கோயில் பணத்தைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது மட்டுமல்ல விதிகளின் அடிப்படையில் அது அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.




சமூக நீதி மரபு


கோயில் நிதியைப் பயன்படுத்துவது பற்றிய விவாதம் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றியது மட்டுமல்ல - அது நம்பிக்கைகள் மற்றும் அரசியலையும் உள்ளடக்கியது. காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில், ஆட்சியாளர்கள் கோயில்களுக்கு பணம் கொடுத்தனர். ஏனெனில், கோயில்கள் அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவின. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கிழக்கிந்திய கம்பெனியும் அரசரும், வருவாய் திரட்டவும், உள்ளூர் கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும் கோயில்களை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியம் என்று கருதினர்.


கடந்த நூற்றாண்டில், சென்னை மாகாணத்திலிருந்து தோன்றிய சுயமரியாதை இயக்கம், கோவில்களை ஒழுங்குபடுத்துவதையும் அவற்றின் வளங்களை மேற்பார்வையிடுவதையும் சாதி எதிர்ப்பு சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதியது. இது இல்லாமல், 1936 மற்றும் 1947-ஆம் ஆண்டுகளில் அனைத்து சாதியினரும் கோயில்களுக்குள் நுழைய அனுமதிக்கும் முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்காது. இன்று, நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர்களை அரசாங்கங்கள் நியமித்துள்ள சில மாநிலங்களில் தமிழ்நாடும் கேரளாவும் அடங்கும்.


இறுதியில், கோயில் விவகாரங்களில் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிரான எந்த வாதமும் சமூக நீதியின் வேரைத் தாக்குவதாக இருக்கும். உபரி நிதிகள் சட்டபூர்வமான முறையில் ஒதுக்கப்படுவதை உறுதிசெய்வதில் அரசாங்கத்தின் பங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்தில் பின்னோக்கிச் செல்வது, தென்னிந்தியா தலைமையிலான சமூக நீதி மற்றும் மத சீர்திருத்தங்களின் நீண்ட வரலாற்றில் பின்னோக்கிச் செல்வதற்கான ஒரு படியாகும்.



Original article:

Share: