மக்களின் பசியைப் போக்குவதற்கு, உண்மையிலேயே ஊட்டமளிக்கும் உணவை பெற மண்ணுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. இது வேளாண்மைய சார்ந்தது மட்டுமல்ல, இது பொது சுகாதாரத்திற்கும் முக்கியமானது.
1960-ஆம் ஆண்டுகளில் PL-480 திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் உணவு உதவியை நம்பியிருந்த இந்தியா, ஒருநாள் உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 2024-25-ஆம் ஆண்டில், மொத்த உலகளாவிய சந்தையான 61 மில்லியன் டன்களில் இந்தியா 20.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. உலகின் மிகப்பெரிய உணவு விநியோகத் திட்டமான பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவையும் இந்தியா செயல்படுத்துகிறது. இது 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமையை வழங்குகிறது. இருப்பினும், இந்திய உணவுக் கழகத்திடம் சுமார் 57 மில்லியன் டன் அரிசி உள்ளது. இது 20 ஆண்டுகளில் மிக உயர்ந்த இருப்பு மற்றும் ஜூலை 1, 2025 நிலவரப்படி 13.54 மில்லியன் டன் என்ற இடையக விதிமுறையைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.
வறுமை வெகுவாகக் குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் தீவிர வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 2011-ல் 27.1% ஆக இருந்தது (2022-ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5% பேர் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு குறைவான உயரம் கொண்டவராக உள்ளனர். மேலும், 32.1% பேர் எடை குறைவாக உள்ளனர். 19.3% பேர் தங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு உள்ளனர் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2019–21) கூறுகிறது. இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு இப்போது போதுமான கலோரிகளை மட்டுமல்ல, போதுமான ஊட்டச்சத்துக்களையும் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு முக்கியமான ஆனால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் விஷயம் மண்ணின் ஆரோக்கியம் ஆகும். மண்ணில் நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாதபோது, அது பண்ணை உற்பத்தியைக் குறைத்து பயிர்களில் ஊட்டச்சத்தைக் குறைக்கிறது. மோசமான மண்ணில் வளர்க்கப்படும் பயிர்களிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், மக்களிடையே மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. உதாரணமாக, மண்ணில் துத்தநாகம் குறைவாக இருந்தால், கோதுமை மற்றும் அரிசியிலும் துத்தநாகம் குறைவாக இருக்கும். இது மக்களில் துத்தநாகக் குறைபாட்டை ஏற்படுத்தும், இது குழந்தைகளின் வளர்ச்சி குன்றுவதோடு தொடர்புடையது. வளர்ச்சி குன்றிய தன்மை குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் எதிர்கால வேலை வாழ்க்கையை பாதிக்கிறது.
இந்திய மண்ணைப் பார்க்கும்போது, மண் சுகாதார அட்டை திட்டத்தின் (Soil Health Card Scheme) கீழ் 2024ஆம் ஆண்டில் பரிசோதிக்கப்பட்ட 8.8 மில்லியனுக்கும் அதிகமான மண் மாதிரிகளில், 5%-க்கும் குறைவான இடங்களில் போதுமான நைட்ரஜன் இருந்தது, 40% மட்டுமே போதுமான பாஸ்பேட் இருந்தது, 32% போதுமான பொட்டாஷ் இருந்தது, மற்றும் 20% மட்டுமே போதுமான மண் கரிம கார்பன் இருந்தது.
மண் கரிம கார்பன் (Soil Organic Carbon (SOC)) மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் குணங்களை பாதிக்கிறது. இந்த குணங்கள் மண் தண்ணீரை எவ்வளவு நன்றாகத் தக்கவைத்துக்கொள்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்துகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. எவ்வளவு SOC போதுமானது என்பது பற்றிய விவாதமும் உள்ளது. இந்திய மண் அறிவியல் நிறுவனம் 0.50% முதல் 0.75% வரையிலான SOC போதுமானது என்று கூறுகிறது. ஆனால் மண் நிபுணர் ரத்தன் லால் கூறுகையில், மண்ணில் குறைந்தது 1.5% முதல் 2% கார்பன் இருக்க வேண்டும்.
நமது மண்ணிலும் கந்தகம் மற்றும் இரும்பு, துத்தநாகம் மற்றும் போரான் போன்ற சிறிய ஆனால் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இல்லை. இந்தப் பற்றாக்குறை மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இந்தியாவின் மண்ணின் பல பகுதிகளை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டுவர அவசர ஏற்பாடுகள் தேவை. எனவே அவை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவின் சில பகுதிகளில், விவசாயிகள் அதிகமாக நைட்ரஜனை பயன்படுத்துகிறார்கள். ஆனால், போதுமான பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இல்லை. உதாரணமாக, பஞ்சாபில், நைட்ரஜன் பயன்பாடு பரிந்துரைக்கப்பட்டதைவிட 61% அதிகமாக உள்ளது, ஆனால் பொட்டாசியம் பயன்பாடு 89% குறைவாகவும், பாஸ்பரஸ் பயன்பாடு 8% குறைவாகவும் உள்ளது. தெலுங்கானா இதேபோன்ற முறையைக் காட்டுகிறது. நைட்ரஜன் பயன்பாடு 54% அதிகமாக உள்ளது. ஆனால் பொட்டாசியம் பயன்பாடு 82% குறைவாகவும், பாஸ்பரஸ் பயன்பாடு 13% குறைவாகவும் உள்ளது. இந்தப் பிரச்சனை பல மாநிலங்களிலும் உள்ளது. அதிகப்படியான நைட்ரஜன் மற்றும் மிகக் குறைந்த பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவது பயிர்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. இந்தியா முழுவதும், தானியங்களுக்கான உரங்களின் பங்கு 1970ஆம் ஆண்டுகளில் 1:10 ஆக இருந்தது. 2015இல் வெறும் 1:2.7 ஆகக் குறைந்துள்ளது.
குருணைவடிவ யூரியாவைப் பயன்படுத்துவது அதிக நைட்ரஜன் இழப்புக்கு வழிவகுக்கிறது. நைட்ரஜனில் சுமார் 35-40% மட்டுமே பயிர்களால் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை நைட்ரஸ் ஆக்சைடாக காற்றில் வெளியேறுகின்றன. கார்பன்-டை-ஆக்சைடைவிட மிகவும் வலிமையான பசுமை இல்ல வாயு அல்லது நிலத்தடி நீரில் கசிந்து, நைட்ரேட்டுகளால் மாசுபடுத்துகிறது, இது தண்ணீரை குடிக்க பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. எனவே, அதிகப்படியான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது பயிர் விளைச்சலை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும், விவசாயத்தைத் தவிர வேறு விஷயங்களுக்கு நிறைய யூரியா பயன்படுத்தப்படுகிறது. மேலும் அண்டை நாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.
மண்ணை மீண்டும் ஆரோக்கியமாக்குவதற்கும், பயிர்கள் மற்றும் மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், இந்தியா தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும். சிந்திக்காமல் அதிக உரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமாக மண் ஊட்டச்சத்தை நிர்வகிக்க வேண்டும். இதன் பொருள், சரியான மண் பரிசோதனை மற்றும் ஒவ்வொரு மண் மற்றும் பயிரின் தேவைகளின் அடிப்படையில், சரியான அளவு உரங்களைப் பயன்படுத்துவதாகும்.
மக்களின் பசியை போக்குவதற்கு, உண்மையிலேயே ஊட்டமளிக்கும் உணவைப் பெற மண்ணுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. இது வேளாண்மையை சார்ந்தது மட்டுமல்ல, இது பொது சுகாதாரத்திற்கும் முக்கியமானது.
இது எவ்வளவு முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (International Economic Relations (ICRIER)) மற்றும் OCP நியூட்ரிகிராப்ஸ் (OCP Nutricrops) ஆகியவை இந்தியாவிலும் பிற இடங்களிலும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன. OCP நியூட்ரிகிராப்ஸ் மண் ஊட்டச்சத்து மற்றும் நிலையான உணவு உற்பத்திக்கான உரங்களில் மேம்பட்ட அறிவைக் கொண்டுள்ளது. ஒன்றாக, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மண் ஊட்டச்சத்து தீர்வுகளை உருவாக்க, பயன்படுத்த மற்றும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்வுகள் அதிக பயிர்களை வளர்க்கவும், அவற்றை அதிக சத்தானதாக மாற்றவும் உதவும்.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதற்கும், உணவை எப்படி வளர்க்கிறோம் என்பதற்கும் தொடர்பு ஏற்பட, முதலில் பூமியை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு தேசமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
குலாட்டி ICRIER இல் புகழ்பெற்ற பேராசிரியராகவும், வெர்குட்ஸ் OCP நியூட்ரிக்ரோப்ஸில் முதன்மை அறிவியல் அதிகாரியாகவும், ஜுனேஜா ICRIER-ல் ஆராய்ச்சி சக ஊழியராகவும் உள்ளார்.