2023-24 ஆம் ஆண்டில், கிராமப்புற மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் மற்றும் நகர்ப்புற மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு இரண்டு உணவுத்தட்டு (two thalis) வாங்க முடியாது. இது வறுமை மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட உணவுப் பற்றாக்குறையின் அளவுகள் மிக அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
2025 ஜனவரியில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office) 2023-24-ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பை (survey of household consumption expenditure) வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் வறுமை குறித்த ஏராளமான மதிப்பீடுகள் வந்துள்ளன. இவற்றில், இரண்டு அதிக கவனத்தைப் பெற்றுள்ளன. முதல் அறிக்கை ஜனவரியில் SBI-ன் அறிக்கை, அதைத் தொடர்ந்து உலக வங்கியின் (World Bank) அறிக்கை ஆகியவை ஆகும். அவர்கள் இதே போன்ற ஆய்வறிக்கைகளை தெரிவிக்கின்றனர். முதல் அறிக்கை கிராமப்புற வறுமையில் குறிப்பிடத்தக்க சரிவை எடுத்துக்காட்டுகிறது. இது FY24-ல் கிராமப்புற வறுமை 4.86 சதவீதமாக மதிப்பிடுகிறது. இது நகர்ப்புற வறுமை 4.09 சதவீதமாகவும் மதிப்பிடுகிறது. உலக வங்கியின் அறிக்கை இன்னும் நம்பிக்கைக்குரியது. இது 2022-23-ஆம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவிற்கு 2.8 சதவீதமாகவும், நகர்ப்புற இந்தியாவிற்கு 1.1 சதவீதமாகவும் "தீவிர வறுமை" (extreme poverty) என மதிப்பிடுகிறது. இந்த மதிப்பீடுகள் துல்லியமாக இருந்தால், இந்தியாவில் வறுமை கிட்டத்தட்ட மறைந்திருக்கும். இது கொண்டாட ஒரு காரணமாக இருக்கும்.
வறுமை குறித்த இந்த மதிப்பீடுகள் பல பதில்களைத் தந்துள்ளன. அவை, நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், இந்த விளைவு அதன் கொள்கைகளின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது என்று விரைவாகக் கூறி வருகின்றனர். கணக்கெடுப்பு முறைகள் பின்னர் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதால், 2011-12-ஆம் ஆண்டிற்கான சமீபத்திய நுகர்வுத் தரவுகளுடன் ஒப்பிடப்படாதது குறித்து விமர்சகர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். இந்தியாவில் வாழ்க்கைத் தரம் குறித்த பிரச்சினையை இரு ஆய்வுகளும் புறக்கணிக்கிறது. மேலும் இந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலான வறுமை அளவீட்டின் தற்போதைய முறை இந்த விஷயத்தில் ஏதாவது குறிப்பிடுவதற்கு வழிவகுக்கும். இறுதியாக, மானிய ஆட்சிக்கு (subsidy regime) வறுமையில் "வரலாற்று ரீதியாகக் குறைந்த" நிலை என்ன குறிக்கிறது என்ற கேள்வியை மேலும் நடுநிலையாக நிற்கும் பார்வையாளர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வறுமை அளவீடு (poverty measurement) என்பது வாழ்க்கைக்கும் வேலை செய்வதற்கும் தேவையான குறைந்தபட்ச கலோரி உட்கொள்ளலை அனுமதிக்கும் அளவுக்கு நுகர்வு செலவின அளவை மதிப்பிடுவதை உள்ளடக்கியது. கலோரிகள் உணவு மற்றும் பானத்தின் மூலம் உட்கொள்ளும் ஆற்றலை அளவிடுவதால், இந்த முறை ஒரு உடலியல் அணுகுமுறையைக் குறிக்கிறது. இருப்பினும், இதைப் பார்க்க மற்றொரு வழியும் இருக்கலாம் என்பது விவாதத்திற்குரியது. உணவு நுகர்வுக்கான ஆற்றல், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் உணவைப் பார்க்கிறார்கள் என்பதை அங்கீகரிப்பதாகும். சமூகங்கள் காலப்போக்கில் உணவு நுகர்வுக்கான புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மத்தியஸ்தம் செய்யப்பட்ட விதிமுறையை அடைந்துள்ளன. இந்தியாவில், இந்த விதிமுறை பெரும்பாலும் உணவுத் தட்டு குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. *தாலி என்பது கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய உணவுத் தட்டாகும். இந்தியா முழுவதும் இது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், ஒரு தட்டில் பொதுவாக அரிசி அல்லது ரொட்டி, பருப்பு மற்றும் காய்கறிகள் இருக்கும். உணவு மற்றும் மலிவு விலையைப் பொறுத்து பால், இறைச்சி அல்லது மீன் சேர்க்கப்படலாம்.
இந்தியர்கள் பொதுவாக உணவுத் தட்டை நல்ல ஊட்டச்சத்தை வழங்கும் முழுமையான மற்றும் சீரான உணவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
இந்திய வாழ்வில் உணவுத் தட்டின் மையத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதற்கான அளவீடாக அதைக் கருதுவது பொருத்தமானதாக இருக்கும். இது உணவின் அடிப்படையில் வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதைக் குறிக்கிறது. ஆனால், உணவு நுகர்வின் அளவை அதன் மிக முக்கியமான அங்கமாகக் கருத வேண்டும். இப்போது, கேட்கவேண்டிய ஒரு அர்த்தமுள்ள கேள்வி என்னவென்றால், "தினசரி உணவு செலவு எத்தனை உணவுத் தட்டுகளுக்குச் சமம்?" உணவு நுகர்வை அளவிட சைவ உணவுத் தட்டின் விலையைப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால், சைவ உணவுத்தட்டு மிகவும் அடிப்படை உணவாகும். ஒரு உணவுத் தட்டின் விலை ரூ.30. இந்த விலை மதிப்பீட்டு நிறுவனமான கிரிசிலிடமிருந்து வருகிறது. கிரிசில் வீட்டில் சமைத்த உணவுத் தட்டின் விலையைக் கணக்கிடுகிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து மூலப்பொருள் செலவுகள் குறித்த தரவை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 2023-24-ஆம் ஆண்டுக்கான நுகர்வு கணக்கெடுப்பில் கொடுக்கப்பட்ட தனிநபர் உணவு நுகர்வு மதிப்பு, பொது விநியோக முறையிலிருந்து வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இலவசமாகப் பெறப்பட்ட பொருட்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.
2023-24-ஆம் ஆண்டில், கிராமப்புற மக்களில் 40 சதவீதம் பேர் வரை ஒரு நாளைக்கு இரண்டு உணவுத்தட்டு வாங்க முடியாது. நகர்ப்புற இந்தியாவில், மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் வரை ஒரு நாளைக்கு இரண்டு உணவுத்தட்டு வாங்க முடியாது. வறுமை மதிப்பீடுகள் ஒரே தரவுகளைப் பயன்படுத்தி பரிந்துரைக்கும் உணவுப் பற்றாக்குறை மிக அதிகமாக இருப்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. அந்த வறுமை மதிப்பீடுகளை நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். வாழ்க்கைத் தரத்தின் மதிப்பீட்டிற்கும், SBI மற்றும் உலக வங்கியின் வறுமை மதிப்பீடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டிற்கான ஒரு சாத்தியமான காரணம், மொத்த நுகர்வு செலவினத்திற்கு மாறாக உணவுக்கான செலவினத்தை நுகர்வுக்கான தொடர்புடைய அளவீடாக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இதற்கான காரணம் பின்வருமாறு, வீட்டுவசதி, போக்குவரத்து, தொலைபேசி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய ஐந்து அத்தியாவசிய செலவினங்கள் உள்ளன. அவை ஒரு குடும்பம் அதன் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென்றால் தவிர்க்க முடியாது. இப்போது, உணவுக்கான செலவு எஞ்சியதாக முடிகிறது. எனவே, உணவு நுகர்வு மூலம் வாழ்க்கைத் தரத்தை அளவிடும்போது, உண்மையான உணவு செலவினங்களைப் பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும். மறுபுறம், வறுமை மதிப்பீட்டிற்கு பொருட்களின் அடிப்படையில் ஒரு உணவுத் தரநிலை தேவை. உணவுத்தட்டு குறியீடு (thali index) இந்த நோக்கத்திற்கு பொருந்துகிறது. இது உணவு உட்கொள்ளலின் கலோரி மதிப்பையும் பொருத்துகிறது.
மானியங்கள் பற்றிய பிரச்சினையை இப்போது விவாதிப்போம். பொருளாதாரக் கொள்கையில் மானியங்கள் தொடர வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் இதை சமீபத்தில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட வறுமை மதிப்பீடுகளின் அடிப்படையில் அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இந்த விவாதம் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம். நீண்ட காலமாக, அரசியல் கட்சிகள் போட்டிரீதியாக நலன்சார்ந்ததை ஆதரிக்க மானியங்களைப் பயன்படுத்தி வருகின்றன. எங்களின் ஆய்வுகள், நுகர்வுக்கான உணவுத்தட்டு குறியீட்டைப் பயன்படுத்துகின்றன. உணவு மானியங்கள் அகற்றப்படாமல் சரிசெய்யப்பட வேண்டும் என்பதை அவை காட்டுகின்றன. உதாரணமாக, கிராமப்புற இந்தியாவில், 70வது சதவீதத்தில் தனிநபர் மானியம் 5-வது சதவீதத்தில் உள்ளதைப் போன்றது. இருப்பினும், 70வது சதவீதத்தில் உள்ளவர்கள் மானியங்கள் இல்லாமல் உணவுத் தட்டுகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வாங்க முடியும்.
எனவே, பணக்கார குழுக்களுக்கான உணவு மானியங்களை நிறுத்திவிட்டு, ஏழை குழுக்களுக்கு அவற்றை அதிகரிப்பது நல்லது. இந்த அணுகுமுறை இப்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் கௌரவ வருகைப் பேராசிரியர் மற்றும் ராஜ் பாட்னாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர் ஆவர்.