ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, மாநிலம் 2024-25 ஆம் ஆண்டில் 11.19% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் முன்னறிவிக்கப்பட்ட மதிப்பீட்டை விட கிட்டத்தட்ட 2.2% அதிகமாகும்.
பல்வேறு மாநிலங்களுக்கான ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 14 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 11.19% உடன் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
2010-11ஆம் ஆண்டில், மாநிலம் 13.12%-ஐப் பதிவு செய்தது. இரண்டு சூழல்களிலும் திராவிட முன்னேற்ற கழகமே ஆட்சியில் இருந்துள்ளது. சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆகஸ்ட் 1, 2025 அன்று தயாரிக்கப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு, அடிப்படை ஆண்டு 2004-05ஆக இருந்தது. ஆனால், இப்போது அது 2011-12 ஆக உள்ளது. மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குனர் கே.ஆர். சண்முகம், இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம்நிலை துறைகளின் வலுவான செயல்திறனே வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறுகிறார்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு, மாநில வாரியான முன்கூட்டிய மதிப்பீடுகள் வெளியிடப்பட்டபோது, தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 9.69%-ஆக இருந்தது. சமீபத்திய, புள்ளிவிவரம் சுமார் 1.5 சதவீத புள்ளிகள் அதிகரிப்பைக் குறிக்கிறது. முதலிடத்தைப் பிடித்ததைத் தவிர, வேறு எந்த மாநிலமும் செய்யாததை தமிழ்நாடு செய்துள்ளது. மாநிலம் இரட்டை இலக்க வளர்ச்சியைப் (double-digit growth) பதிவு செய்துள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளைத் தவிர, கோவா, குஜராத் மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு வரவு செலவு அறிக்கையில் கணிக்கப்பட்டதைவிட புள்ளிவிவரங்கள் அதிகமாக இருந்தன. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) 14.5%-ஆக வளரும் என்று மாநில அரசு கணித்துள்ளது. உண்மையான வளர்ச்சி 9% ஆகவும் சராசரி பணவீக்கம் 5% ஆகவும் இருக்கும். இருப்பினும், உண்மையான வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட 2.2% அதிகமாகும். நிலையான விலையில் (2011-12 அடிப்படை ஆண்டின் அடிப்படையில்), தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25ஆம் ஆண்டில் ரூ.17,32,189 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,57,821 கோடியாக இருந்தது.
திருத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் 2023-24ஆம் ஆண்டிற்கான வலுவான செயல்திறனைக் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.23%-லிருந்து 9.26%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2022-23ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வளர்ச்சி 8.13%-லிருந்து 6.17%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைகளில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (Net State Domestic Product (NSDP)) பற்றிய தரவுகளின்படி, 2024-25ஆம் ஆண்டில் முதன்மை மாநிலங்களான தெலுங்கானா (ரூ.3,87,623) மற்றும் கர்நாடகாவை (ரூ.3,80,906) தொடர்ந்து, தமிழ்நாடு 3-வது இடத்தைப் பிடித்தது. மேலும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் (per capita income) ரூ.3,61,619-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பொருளாதாரப் பாதை குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறையில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் சண்முகம், வலுவான ஏற்றுமதி செயல்திறன் மூலம் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், 2031-32ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் பாதையில் செல்லும் என்று நம்புகிறார். அதிக வளர்ச்சி விகிதம், குறைந்த நிதி, வருவாய் பற்றாக்குறை மற்றும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (debt-to-GSDP ratio) போன்ற நிதி குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அனைத்து முக்கியத் துறைகளும் 2024-25ஆம் ஆண்டில் அடைந்ததைவிட அரை சதவீதம் அதிகமாக வளர்ச்சியடைந்தால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் (2025-26) 12%ஆக இருக்கலாம் என்று டாக்டர் சண்முகம் சுட்டிக்காட்டுகிறார்.
ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி விகித புள்ளிவிவரங்கள், உத்தரப் பிரதேசம் - 8.99% ஆந்திரப் பிரதேசம் - 8.21% தெலுங்கானா - 8.08% கர்நாடகா - 7.37% மற்றும் மகாராஷ்டிரா - 7.27% ஆக உள்ளன.