டிரம்பின் வரி விதிப்பு தாக்குதல்களுக்கு மத்தியில் சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மீள்பார்வை செய்தல். -திலீப் பி சந்திரன்

 பிரதமர் நரேந்திர மோடியின் சுதேசி அழைப்பு 1905-1911-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதேசி இயக்கத்தை நினைவுப்படுத்துகிறது. இருப்பினும், சுதேசி இயக்கம் தோன்றியதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என்ன, அது எவ்வாறு சுயாட்சிக் கொள்கைக்கான (Swaraj) பரந்த அழைப்பாக உருவானது?


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள அனைவரையும் - கட்சிகள், தலைவர்கள் மற்றும் குடிமக்கள் - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆதரிக்கவும் பயன்படுத்தவும் ஊக்குவித்தார். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற விரும்பினால் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.


தேசிய இயக்கத்தின் மரபில் வேரூன்றிய பிரதமரின் சுதேசி அழைப்பு, 1905-1911 சுதேசி இயக்கத்தை நினைவுபடுத்துகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள பிரிவினைக்கு எதிரான போராட்டங்களில் தோன்றிய சுதேசி இயக்கம், பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணித்து, சுதேசி பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பிரிட்டிஷ்  மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியது.


பிரிவினை ஒரு தேசத்தை ஒருங்கிணைத்தபோது


ஜூலை 19, 1905 அன்று, அப்போதைய இந்திய வைஸ்ராய் Lord Curzon வங்காளத்தை இரண்டு மாகாணங்களாக பிரிக்க இருப்பதாக அறிவித்தார்- கிழக்கு வங்காளத்திலும் அசாமிலும் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வசித்து வந்தனர். அதே நேரத்தில் வங்காளம் என்று அழைக்கப்படும் மேற்குப் பகுதியில் பெரும்பாலும் இந்துக்கள் வசித்து வந்தனர்.


இந்தியத் தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1903-ல் முதன்முதலில் பகிரப்பட்ட Lord Curzon-னின் முடிவு வந்தது. இவை 1899-ல் கல்கத்தா மாநகராட்சியில் அவர் கொண்டு வந்த பிரபலமற்ற மாற்றங்கள், பின்னர் 1904-ல் பல்கலைக்கழக விதிகளில் (University Act) மாற்றங்கள் மற்றும் 1904-ல் ஒரு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் (Official Secrets Act) ஆகியவற்றுடன் தொடங்கின.


நிர்வாகத்தை எளிதாக்குவதற்காகவே வங்காளப் பிரிவினை என்று Lord Curzon-னின் ஆதரவாளர்கள் கூறினர். ஆனால், தேசியவாதத் தலைவர்கள் இதை பிரித்தாளும் கொள்கை (divide and rule policy) என்று கூறினர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்கி கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து தலைவர்களைப் பிரிக்க ஆங்கிலேயர்கள் விரும்பினர்.  


‘காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள மையமாக கொல்கத்தா (கல்கத்தா) உள்ளது. இது வங்காளம் மற்றும் இந்தியா முழுவதையும் பாதிக்கிறது’ என்று Lord Curzon-னின் வார்த்தைகளில் பிரித்தாளும் கொள்கை தெளிவாகத் தெரிந்தது.

தேசியவாதிகள், அவர்களின் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், பிரிவினையை இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பெருமையின் மீதான தாக்குதலாகக் கருதினர். இந்த மக்கள் விரோத உத்திக்கு பதிலளிக்கும் விதமாக பரவலான எதிர்ப்பு இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு வழி வகுத்தது.


ஆக்கபூர்வமான சுதேசியிலிருந்து (constructive Swadeshi) புரட்சிகர அரசியல் வரை


மிதவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அனுப்பி Curzon-னின் நியாயமற்ற செயல்களைத் (mendicant policies) தடுக்க முயன்றனர். ஆனால், இது பலனளிக்கவில்லை. எனவே, வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராட மக்கள் ஒரு புதிய வழியைத் தேடினர். பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்கும் யோசனையை முதன்முதலில் கிருஷ்ணகுமார் மித்ரா ஜூலை 13, 1905 அன்று தனது வாராந்திர பத்திரிகையான சஞ்சிவனியில்  (Sanjivani) பரிந்துரைத்தார். பின்னர், ஆகஸ்ட் 7, 1905 அன்று, கல்கத்தா டவுன் ஹாலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் தேசியவாதத் தலைவர்கள் இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டனர்.


இந்த இயக்கம் வங்காளப் பிரிவினை நாளான (partition day) அக்டோபர் 16 அன்று தொடங்கியது. ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த மக்கள் வண்ணமயமான ராக்கி கயிறுகளை (rakhi bandhan) பரிமாறிக் கொண்டனர். பஞ்சம் மற்றும் நோய்களின் போது மற்றவர்களுக்கு உதவிய தன்னார்வக் குழுக்களான சமிதிகளின் எழுச்சியை மக்கள் ஆதரித்தனர். இந்தக் குழுக்கள் சமூகப் பணிகளில் மக்களுக்கு பயிற்சி அளித்தன. உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகளை அமைத்தன. மேலும், பண்டிகைகளின் போது சுதேசி செய்தியை பரப்பினார்.


பிரிவினையை ரத்து செய்வது ஒரு தொலைதூரக் கனவாகத் தோன்றத் தொடங்கியபோது, உள்நாட்டுத் தொழில்கள், தேசியப் பள்ளிகள் மற்றும் கிராம அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஆக்கபூர்வமான சுதேசி என்ற உத்தி போதுமானதாக இருக்காது என்று மக்கள் கருதினர்.


எனவே, அரவிந்தோ கோஷ் மற்றும் பிபின் சந்திர பால் போன்ற போர்க்குணமிக்க தலைவர்கள் சுதேசி கொள்கைகளை விரிவுபடுத்தி, பிரிட்டிஷ் பொருட்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பட்டங்களைத் துறத்தல் மற்றும் அரசு சேவைகளைத் துறத்தல் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்தனர். இந்தக் காலகட்டத்தில், வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகியவை புரட்சிகர அரசியலின் மையங்களாக உருவெடுத்தன. இதற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகிய மூன்று தலைவர்கள் தலைமை தாங்கினர். அவர்கள் அனைவரும் ஒன்றாக Lal-Bal-Pal என்று அழைக்கப்பட்டனர்.


உள்நாட்டு பொருளாதாரத்தின் (indigenous economy) மறுமலர்ச்சி


இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதான பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துவதையும், உள்நாட்டு பொருளாதாரத்தை மறுமலர்ச்சி செய்வதை சுதேசி இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அந்நிய ஆட்சியை நம்பியிருப்பதற்கு எதிரான கிளர்ச்சியாக கோபால கிருஷ்ண கோகலே இதைக் கருதினார். அதே, நேரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி இதை ‘பாதுகாப்புவாத இயக்கம்’ (protectionist movement) என்று அழைத்தார்.


புறக்கணிப்பு ஆரம்பத்தில் சில வெற்றிகளைப் பெற்றது - பிரிட்டிஷ் பொருட்களின் இறக்குமதி குறைய ஆரம்பித்தது. அதே, நேரத்தில் இறக்குமதியைக் குறைத்தது மற்றும் காலனித்துவ பொருளாதாரத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய மோசமான (derogatory) வேலை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர் வேலைநிறுத்தங்களைத் தூண்டியது. அக்டோபர் 21, 1905-ல் உருவாக்கப்பட்ட அச்சுப்பொறி சங்கம் (Printers’ Union), தொழிலாளர் சுரண்டலை முன்னிலைப்படுத்திய முதல் தொழிலாளர் சங்கங்களில் ஒன்றாகும்.


இந்த இயக்கம் இந்திய தொழில்களை ஊக்குவித்தது மற்றும் கைத்தறி, பட்டு நெசவு மற்றும் பிற உள்நாட்டு கைவினை கலைகள் போன்ற துறைகளை மீட்டெடுத்தது. இந்திய மூலதனத்துடன் தேசிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இந்த இயக்கம் சென்னைக்கு பரவியபோது, கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை சவால் செய்ய வ.உ.சிதம்பரம் ஒரு சுதேசி கப்பல் போக்குவரத்து முயற்சியை முன்மொழிந்தார். வ.உ.சிதம்பரம் 1906-ஆம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை (Swadeshi (Steam Navigation Company (SSNC)) ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாகப் பதிவு செய்தார்.


தேசியக் கல்வி இயக்கத்திலும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. உதாரணமாக, சதீஷ் சந்திர முகர்ஜியால் நிறுவப்பட்ட விடிவெள்ளி கழகம் (Dawn Society) நவம்பர் 5, 1905-ல் தேசிய கல்வி கவுன்சிலை தொடங்கியது. தேசிய கல்விக்கான அழைப்பு, வட்டார மொழியில் (vernacular language) தொழில்நுட்பப் பயிற்சியையும் ஊக்குவித்தது. இருப்பினும், குறைந்த வேலை வாய்ப்புகளுடன் கூடிய தேசிய கல்வி மற்றும் மூலதனப் பற்றாக்குறையை எதிர்கொண்ட உள்நாட்டுத் தொழில்கள், நீண்ட காலத்திற்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடின.


சுதேசி எவ்வாறு சுயராஜ்யத்திற்கான தேவையாக வளர்ந்தது


வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் நின்றுவிடும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர். ஆனால் சுதேசி இயக்கம் பெரிதாகி சுயராஜ்ஜியத்திற்கான போராட்டமாக மாறியது. இது பல இளைஞர்கள், படித்தவர்களை ஈர்த்தது. முதல் முறையாக, பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களும் சுதந்திர இயக்கத்தில் இணைந்தனர். இந்தக் காலகட்டத்தில், தேசியவாத கருத்துக்களைக் கொண்ட வட்டார மொழி செய்தித்தாள்கள் விரைவான வளர்ச்சியும் காணப்பட்டது.


வங்காளத்தில் உள்ள இளம் தேசியவாதிகள் பிரிவினையை 'தேசிய அவமானம்' (national insult) என்று கருதினர். அவர்கள் ரவீந்திரநாத் தாகூரின் ஆத்மசக்தி (சுய-வலிமைப்படுத்துதல்) என்ற கருத்தாக்கத்தைப் போல, சுயசார்புக்கான வெறும் அழைப்பில் அவர்கள் திருப்தி அடையவில்லை. மேலும், புரட்சிகர அரசியலுக்கு (revolutionary politics) அழைப்பு விடுத்தனர். பிபின் சந்திர பாலின் நியூ இந்தியா, அரவிந்த கோஷின் வந்தே மாதரம், பிரம்மபந்தாப் உபாத்யாயின் சந்தியா மற்றும் யுகாந்தர் போன்ற வெளியீடுகள் சுயராஜ்யத்திற்கான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன, அமைதியான சுயசார்பு இயக்கத்தை  (self-reliance) போதுமானதாக இல்லை  என்று நிராகரித்தன.


அரசியல் புரட்சிவாதம் விரைவில் பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் மெட்ராஸ் போன்ற பிற மாகாணங்களுக்கும் பரவியது, இது காலனிய அரசாங்கத்தின் அடக்குமுறைகளைத் தூண்டியது. உதாரணமாக, 1907ஆம் ஆண்டு பஞ்சாபில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து லாலா லஜ்பத் ராய் மற்றும் அஜித் சிங் ஆகியோர் மாண்டலேவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதேபோல், பால் கங்காதர் திலக் மற்றும் அவரது கூட்டாளிகளான கபர்டே மற்றும் முன்ஜே ஆகியோர் மகாராஷ்டிராவில் திலகின் கேசரி மற்றும் மராத்தா செய்தித்தாள்கள் மூலம் தீவிர பத்திரிகையியல் மற்றும் சிவாஜி திருவிழா போன்ற மத-அரசியல் பண்டிகைகள் மூலம் புறக்கணிப்பு மற்றும் செயலற்ற எதிர்ப்பை விரிவுபடுத்தினர், இது திலகின் நாடு கடத்தலில் முடிந்தது.


சுதேசி காலம் புரட்சிகர குழுக்கள் மற்றும் போர்க்குணம் கொண்ட நடவடிக்கைகளின் திடீர் வளர்ச்சியையும் கண்டது. தனிப்பட்ட புரட்சியாளர்கள் அடக்குமுறையான பிரிட்டிஷ் அதிகாரிகளை இலக்காகக் கொள்ள ஆரம்பித்தனர். இது ஏப்ரல் 1908-ல் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்ல சாகியின் முஜாஃபர்பூர் வெடிகுண்டு தாக்குதலில் பிரிங்கில் கென்னடியின் மனைவி மற்றும் மகளை கொன்றதிலும், ஜூன் 1908-ல் தாக்கா அனுசிலன் சமிதியின் புலின் தாஸின் பரா கொள்ளையிலும் காணப்பட்டது.



சுதேசி இயக்கத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்


குறிப்பிடத்தக்க வகையில், சுதேசி என்ற கருத்தை 1872ஆம் ஆண்டு M.G.. ரனாடேவின் விரிவுரைத் தொடரில் காணலாம். அதில் அவர் ஒருவரின் சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவை சிறந்தவையாக இல்லாவிட்டாலும் கூட அந்த பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ரவீந்திரநாத் தாகூரைப் போன்ற ஆக்கபூர்வமான சுதேசி ஆதரவாளர்கள், சுய உதவியை (ஆத்ம-சக்தி) வலியுறுத்தினர். மேலும், கிராம மட்டத்தில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட பாரம்பரிய இந்து சமூகத்தை மறுமலர்ச்சி செய்ய அழைப்பு விடுத்தனர்.


சுதேசி இயக்கம் (1905-1911) தேசிய இயக்கத்தின் காந்திய கட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல உத்திகளுக்கு அடித்தளம் அமைத்தது. பின்னர், மகாத்மா காந்தி சுதேசி கருத்தை ஆன்மீக துறையில் விரிவுபடுத்தி அதை ஒரு தார்மிக கடமையுடன் இணைத்தார். ‘எனது அருகில் உள்ள அண்டை வீட்டாரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே நான் பயன்படுத்த வேண்டும் மற்றும் அவை எங்கு குறைபாடுடன் இருந்தாலும் அவற்றை திறமையாகவும் முழுமையாகவும் ஆக்குவதன் மூலம் அந்த தொழில்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று அவர் எழுதினார்.


இருப்பினும், சுதேசி இயக்கத்தின் தலைவர்களிடையே முக்கியமாக இரண்டு நிலைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. முதலாவதாக, அவர்கள் அரசியல் முறைகள் மற்றும் இலக்குகளில் உடன்பட முடியவில்லை, இதன் விளைவாக 1907-ல் சூரத் அமர்வில் இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகள் மற்றும் தீவிர குணம் கொண்டவர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. இரண்டாவதாக, மத மறுமலர்ச்சியை அரசியல் முறைகளுடன் இணைப்பதில் சர்ச்சை இருந்தது. தேசியவாதத்தை இந்து அடையாளங்களுடன் இணைப்பது சிறுபான்மை சமுதாயங்களை தேசிய இயக்கத்திலிருந்து பிரித்தது.


காலனிய நிர்வாகம் இந்த பதற்றங்களை சுரண்டி வேண்டுமென்றே வகுப்புவாத பிளவுகளை வளர்த்தது. இது 1906-ல் முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் மற்றும் 1909-ல் மார்லே-மின்டோ சீர்திருத்தங்களில் (Morley-Minto Reforms) முஸ்லிம்களுக்கு தனித்தனி தேர்தல் தொகுதிகளை அறிமுகப்படுத்தியதில் காணப்பட்டது.


சுருக்கமாக, சுதேசி இயக்கம் மக்களை தேசியவாத அரசியலில் அணிதிரட்டுவதிலும், பல்வேறு அரசியல் சக்திகளை ஒன்றிணைப்பதிலும் வெற்றி பெற்றது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட இலக்கிலிருந்து விலகிச் சென்ற போர் குணம் கொண்ட போக்குகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்டகால வெற்றியை அடைய, சக்திவாய்ந்த சக்திகளுக்கு உணர்ச்சிபூர்வமான பதில்கள் போதுமான மூலதனம், உள்ளடக்கிய பங்கேற்பு மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட உத்திகளுடன் இருக்க வேண்டும் என்று தேசிய இயக்கத்தின் வரலாறு நமக்கு அறிவுறுத்துகிறது.



Original article:

Share: