சிறந்த அணுகலை நோக்கமாகக் கொண்டு, தெலுங்கு தேசம் கட்சி அரசானது பள்ளி சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்கிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான NDA அரசாங்கம், முந்தைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கல்வித்துறை சீர்திருத்தங்களை மறுபரிசீலனை செய்கிறது மற்றும் தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்து வருகிறது. நேர்மறையான முடிவுகளைத் தரும் கொள்கைகள் தக்கவைக்கப்படும் என்றும், உறுதியான முடிவுகளை வழங்கத் தவறிய கொள்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்தப் பணியானது முக்கியமான மற்றும் சவாலானதாக இருப்பதால், புதிய முயற்சிகளின் மையமாக மாணவர்களின் நல்வாழ்வும் எதிர்காலமும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, கல்வித்துறையில் ஒரு இலக்கு சார்ந்த மற்றும் சமநிலையான பார்வையை அமைச்சர் எடுத்து வருகிறார்.
கல்வித் துறை அதிகாரிகள் என்ன வேலை செய்தார்கள், எதில் முன்னேற்றம் தேவை, பங்குதாரர்களுக்கு இடையூறு ஏற்படாமல் எப்படி முன்னேறுவது என மதிப்பீடு செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 58,535 பள்ளிகளில், 68,15,925 மாணவர்கள் மற்றும் 3,13,112 ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும். இதில் 44,285 அரசுப் பள்ளிகளில் 33,37,762 மாணவர்களும், 1,84,898 ஆசிரியர்களும், 789 உதவி பெறும் பள்ளிகளில் 87,612 மாணவர்களும் 3,259 ஆசிரியர்களும், 13,461 தனியார் பள்ளிகளில் 33,90,551 மாணவர்கள் மற்றும் 1,24,955 ஆசிரியர்கள் உள்ளனர்.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கருத்துப்படி, தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கம் முடங்கிய நிலையில், அத்தியாவசிய கட்டமைப்புகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் இல்லாத நிலையில் ஒரு நலன்சார்ந்த கல்வி முறையைப் பெற்றுள்ளது. YSR காங்கிரஸ் கட்சி இந்தக் கூற்றை மறுத்ததுடன், இது "மாநிலத்தில் கல்வித் துறையை முறையாக பலவீனப்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டியது.
மாநிலத்தில் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்ட 12,512 பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 5,312 அரசுப் பள்ளிகள் மற்றும் 14,052 அரசுப் பள்ளிகளில் 20 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டதாக தரவுகள் காட்டுகின்றன. 2022 மற்றும் 2024-க்கு இடையில், அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 10,49,596 குறைந்துள்ளது.
குறைந்துவரும் கற்றல் விளைவுகளால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இந்த நிலைமையை மாற்றியமைக்கும் வலிமையான சவாலை அரசாங்கம் எதிர்கொள்கிறது. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 84.3% பேர் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்றும், 62.5% ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை வாசிப்பில் சிரமப்படுகிறார்கள் என்றும், 8-ம் வகுப்பு மாணவர்களில் 47% பேர் இன்னும் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை என்றும், மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 59.1% பேர் அடிப்படை கழித்தல் சமன்பாட்டை தீர்க்க முடியவில்லை என்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களில் 54.8% பேர் வகுத்தல் சமன்பாடு செய்யத் தெரியவில்லை என்றும், இதில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 12.9% பேர் மட்டுமே அடிப்படை வகுத்தல் சமன்பாடுகளைத் தீர்க்க முடியும் என்றும் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சமீபத்திய கணக்கெடுப்பின் மோசமான முடிவுகளை மேற்கோள்காட்டி, அமைச்சர் நாரா லோகேஷ் முந்தைய முயற்சியான, 2022-23 ஆம் ஆண்டில் போதுமான தயாரிப்பு இல்லாமல் அரசுப் பள்ளிகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (CBSE) மாற்றுதல், அரசு நடத்தும் பள்ளிகளில் ₹58.84 கோடி செலவில் TOEFL-ஐ செயல்படுத்துதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் சர்வதேச இளங்கலை (IB) பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை போன்றவற்றை திரும்பப் பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கு IB திட்டத்திற்காக, இடைக்கால அறிக்கைக்காக ₹4.86 கோடி செலவிடப்பட்டது.
முந்தைய YSRCP அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய முடிவுகளில் ஒன்று GO 117 ஆகும். இது பள்ளிகளை மறுசீரமைத்தது மற்றும் ஆசிரியர் பணியாளர்களை மறுபகிர்வு செய்தது. இது பள்ளிகளை ஆறு பிரிவுகளாகப் பிரித்து, வகுப்புகளை இணைத்தல் (merger) மற்றும் பிரித்தல் (de-merger) ஆகியவற்றை உள்ளடக்கியது. பள்ளிகள் துண்டாடப்படுவதால் (fragmentation), 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2021-22-ல் 1,215-ல் இருந்து 2024-25-ல் 5,312 ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் 20-க்கும் குறைவான அல்லது அதற்கு சமமான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் 5,520-ல் இருந்து 14,052 ஆக அதிகரித்து, மாணவர்களின் கடுமையான சரிவைக் காட்டுகிறது.
GO 117-ன் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க, NDA அரசாங்கம் GO 21-ஐ அறிமுகப்படுத்தியது. இது ஒன்பது வகை பள்ளிகளை உருவாக்குவதன் மூலம் மறுசீரமைப்பு மாதிரியை (restructuring model) திருத்துகிறது. இருப்பினும், GO 21 விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆசிரியர் சங்கங்கள் அதன் "பொதுக் கல்வி முறையில் எதிர்மறையான தாக்கம்" குறித்து கடுமையான கவலைகளை எழுப்பின. ”ஆந்திரப் பிரதேசத்தில் கற்றல் சிறப்பு” என்ற பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக GO 21 உள்ளது. இந்தத் திட்டம் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சிறந்த கற்றல் விளைவுகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் 16,347 ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட ‘மெகா’ மாவட்டத் தேர்வுக் குழு (District Selection Committee(DSC)) தேர்வு, அரசின் இமேஜை உயர்த்தியது. இது, கல்வி நட்சத்திர மதிப்பீடுகளை (academic star ratings) அறிமுகப்படுத்துவதும் பிற நேர்மறையான நடவடிக்கைகளில் அடங்கும். இந்த மதிப்பீடுகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரின் செயல்திறனையும் மதிப்பிட உதவுகின்றன. கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில் பள்ளி சேர்க்கையை அதிகரிக்க அரசாங்கத்தின் இலக்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூடுதலாக, இது பல ஆசிரியர் தொடர்பான செயலிகளை ஒரே தளத்தில் இணைத்துள்ளது.
இடைநிலைக் கல்வியில், இந்த கல்வியாண்டிலிருந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகத் திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்கள் பாடத்திட்டத்தை தேசிய போட்டித் தரங்களுடன் இணைக்கின்றன. 2026-27-ஆம் கல்வியாண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்தத் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் வரம்பு மிகவும் பெரியது. மேலும், பெரிய அமைப்புகளில் மாற்றத்திற்கான எதிர்ப்பு இயற்கையானது. முந்தைய சீர்திருத்தங்கள் இன்னும் சரிசெய்யப்படும்போது இது குறிப்பாக உண்மையாகப் பிரதிபலிக்கும். செயல்படுத்தலில் ஏற்படக்கூடிய ஏதேனும் இடைவெளிகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். கற்றல் தரத்தை மேம்படுத்த, அமைப்பின் நிலைத்தன்மையைப் பாதிக்காமல் கவனமாகத் திட்டமிடுவது அவசியம்.