ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது -ரஜனி சின்ஹா

 கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை ரிசர்வ் வங்கியின் முடிவுகளைப் பாதிக்கும்.


ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) கூட்டம், பணவீக்கம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில் நடைபெற உள்ளது. இருப்பினும், அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஜூன் மாதத்தில், ரிசர்வ் வங்கி ஏற்கனவே 50 அடிப்படைப் புள்ளிகள் (bps) விகிதங்களைக் குறைத்துள்ளது. எனினும் பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் குறைந்திருந்தாலும், மேலும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு RBI காத்திருந்து கவனிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. RBI தனது நிலைப்பாட்டை "இணக்கமான" நிலையிலிருந்து "நடுநிலை" நிலைக்கு மாற்றியதால், மேலும் விகிதக் குறைப்புகளை நியாயப்படுத்துவது கடினமாகிவிட்டது.


நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index (CPI)) பணவீக்கம் ஜூன் மாதத்தில் சுமார் 2% ஆகக் குறைந்தது. அடுத்த இரண்டு காலாண்டுகளில் சராசரியாக 2.5% குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததே ஆகும்.  உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில் மிக அதிகமாக இருந்த காய்கறிகளின் விலைகள் (சராசரியாக 27% பணவீக்கம்), இப்போது கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக -15% என்ற அளவில்  கூர்மையான சரிவைக் கண்டுள்ளன.


கடந்த ஆண்டு பெய்த நல்ல பருவமழை மற்றும் அதிக விலைகள் காரணமாக, பிற உணவுப் பொருட்களும் குறைந்த பணவீக்கத்தையோ அல்லது விலை வீழ்ச்சியையோ காட்டுகின்றன. பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த சரிவின் பெரும்பகுதி "அடிப்படை விளைவு" (“base effect.”) எனப்படும் புள்ளிவிவர விளைவு காரணமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்ல பருவமழை தொடர்ந்து உணவு விலைகளைக் குறைவாக வைத்திருக்கும். மேலும், ஒட்டுமொத்த பொருட்களின் விலைகள் நிலையானதாக இருக்க வேண்டும். இருப்பினும், அடுத்த ஆண்டு, அடிப்படை விளைவு குறையும் போது பணவீக்கம் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 நிதியாண்டின்  கடைசி காலாண்டில் CPI பணவீக்கம் 4%ஐ விட அதிகமாக இருக்கும் என்றும், 2027 நிதியாண்டில் சராசரியாக 4.5% இருக்கும் என்றும், மேலும் உயரும் போக்கும் கணிசமான அளவில் இருக்கும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டணத்தின் நிச்சயமற்ற தன்மை


அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தகக் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சில நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரியை (ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்கான அபராதம்) விதித்துள்ளது. இது வியட்நாம் (20%) மற்றும் இந்தோனேசியா (19%) போன்ற பிற நாடுகளின் வரிகளை விட அதிகமாகும். இது இந்தியாவை சாதகமற்ற நிலையில் வைக்கிறது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் உள்நாட்டுத் தேவையால் இயக்கப்படுவதாலும், வர்த்தகத்தை பெரிதும் சார்ந்து இல்லாததாலும், ஒட்டுமொத்த தாக்கம் குறைவாக இருக்கலாம். அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% மட்டுமே அதிகரித்துள்ளது. வரிகளின் எதிர்மறையான தாக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.3–0.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்னும் சில நிச்சயமற்ற தன்மை உள்ளது. மேலும், வரிகளைக் குறைக்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முடியும். பொருளாதார வளர்ச்சி தொடர்பான அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கூடுதல் தெளிவுக்காக காத்திருக்கலாம். நல்ல மழைப்பொழிவு, பணவீக்கம் குறைதல், வட்டி விகிதங்கள் குறைதல் மற்றும் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட வருமான வரி போன்ற வளர்ச்சிக்கான நேர்மறையான அறிகுறிகளும் உள்ளன.


நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இப்போதைக்கு விஷயங்களை மாற்றாமல் வைத்திருக்கத் தேர்வுசெய்யலாம். முன்னர் செய்யப்பட்ட 100 அடிப்படை புள்ளி (1%) வட்டி விகிதக் குறைப்பின் விளைவுகள் இன்னும் உணரப்பட்டு வருகின்றன.  மேலும், பொருளாதாரம் முழுமையாகப் பயனடைய அதிக நேரம் ஆகலாம். இந்த வட்டி விகிதக் குறைப்புகளின் விளைவுகளைப் பகிர்ந்து கொள்ள போதுமான பணம் அமைப்பில் இருப்பதையும் ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. கூடுதலாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாலும், அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதாலும், ரூபாய் மேலும் பலவீனமடைவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்க்கலாம்.


பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்த்து, ரிசர்வ் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தது. எனவே, வளர்ச்சி ஒரு பெரிய பிரச்சனையாக மாறாவிட்டால், அதிக வட்டி விகிதக் குறைப்புக்கள் சாத்தியமில்லை. எதிர்காலத்தில், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும். நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 2026 நிதியாண்டின்  நான்காவது காலாண்டில் 4% ஐ விட அதிகமாகவும், 2027 நிதியாண்டில் சராசரியாக 4.5% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, உண்மையான வட்டி விகிதம் சுமார் 1–1.5% ஆகவோ அல்லது 2026இல் இன்னும் குறைவாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் வட்டி விகிதங்களை மேலும் குறைக்க எந்த வலுவான காரணமும் இல்லை.


ரஜனி சின்ஹா, எழுத்தாளர்  மற்றும் CARE Edge Ratings நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share: