இராணுவ நவீனமயமாக்கலுக்கு நிதியளிக்க இந்தியாவுக்கு 'பாதுகாப்பு வரி' (defence cess) தேவை -சித்தார்த் கபூர்

உயர்ரக பொருட்களுக்கு இத்தகைய வரி விதிக்கப்படுவதால், ஆடம்பரத்திற்காக செலவிடுவது ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு வெளிப்படையான பொதுச் செயலாக மாறும்.


stealth drones :  ஸ்டெல்த் ட்ரோன்கள் என்பது ரேடார் மற்றும் பிற சென்சார்களுக்குக் கண்டறிய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்களாகும்.


hypersonic glide vehicles (HGV) :  ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள் என்பது ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் (5 Mach) செல்லும், தொழில்நுட்பம் கொண்ட ஒரு வகை ஏவுகணையாகும்.


உலகம் இப்போது ஸ்டெல்த் ட்ரோன்கள் (stealth drones), ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள் (hypersonic glide vehicles) மற்றும் அல்காரிதம் அடிப்படையிலான போர் (algorithm-based warfare) போன்ற மேம்பட்ட ஆயுதங்களால் வரையறுக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பழைய ஜெட் விமானங்கள் (old jets), தாமதமான இறக்குமதிகள் (delayed imports) அல்லது அமைதி காலத்தில் செய்யப்பட்ட அனுமானங்களைச் சார்ந்திருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைதி என்பது ஒரு மாயையைத் தவிர வேறில்லை என்றும், எந்தவொரு நிச்சயமற்றத் தன்மைக்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், நிச்சயமற்ற தன்மை மட்டுமே உறுதியானது.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு தாக்குதலையும் ஒரு போர்ச் செயலாகக் கருதும் தெளிவான கொள்கையையும் அது ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானுடனான மோதல்கள் அடிக்கடி நிகழ வாய்ப்புள்ளது. முந்தைய இரண்டு மோதல்களில் வெளிப்பட்டதுபோல், விமானப்படை மீண்டும் முக்கியப் பங்கு வகிக்கும். இருப்பினும், எதிர்காலத்தில் இராஜதந்திர ரீதியில் நிலைமை இன்னும் கடினமாக இருக்கும். பாகிஸ்தான் சீனாவிடமிருந்து J20 அல்லது J35 ஸ்டெல்த் விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சீனா ஆறாம் தலைமுறை விமான முன்மாதிரிகளை (sixth-generation aircraft prototypes) பரிசோதித்து வருகிறது. இதற்கு நேர்மாறாக, இந்தியா தனது சொந்த ஐந்தாம் தலைமுறை விமானத்தை நிலைநிறுத்த கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகாலம் ஆகும்.


தற்போது, இந்திய விமானப்படை 32 படைப்பிரிவுகளை இயக்குகிறது. இது 42 படைப்பிரிவுகளின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட மிகக் குறைவு. இந்தியாவின் போர் விமானங்கள் திறமையானவை என்றாலும், திறன் மட்டும் போதாது. வான்வெளி மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் சிக்கலானதாகவும் மாறி வருகிறது. அத்தகைய சூழலில், இந்தியா பாதிக்கப்படக்கூடியதாக இருக்க முடியாது.


எனவே, இந்தியாவின் ஆயுதப் படைகளை முழுமையாக, குறிப்பாக விமானப்படையை நவீனமயமாக்குவது இனி ஒரு விருப்பமல்ல. அது அவசியமானது. உள்நாட்டு இயந்திர மேம்பாடு முதல் மின்னணு போர் அமைப்புகள் மற்றும் மூலோபாய ட்ரோன் குழுக்கள் வரை, பாதை தெளிவாக உள்ளது. நிச்சயமற்றது நோக்கமல்ல, ஆனால் நிலையான மற்றும் பாதுகாக்கப்பட்ட நிதியளிப்புக்கான பாதைதான். இந்தியப் பொருளாதாரம் இதை ஆதரிக்கும் அளவு மற்றும் வலிமையைக் கொண்டுள்ளது. ஆனால், திசையின்றி பணமும், அரசியல் உறுதியும் செயலாக்கமும் இல்லாத முன்னோக்கு பார்வையும் வீணே.


மெதுவான வேகம், முன்னுரிமை இல்லை


இன்று அரசாங்க செலவினங்களில் கணிசமான பகுதி வழக்கமான செலவுகளில் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ளவை பெரும்பாலும் துண்டு துண்டாக பிரிக்கப்பட்ட திட்டங்களிலும், படிப்படியாக முன்னேறும் திட்டங்களிலும் மெல்லியதாக பரவுகின்றன. இதன் விளைவாக, பாதுகாப்பிற்கான மூலதன கொள்முதல் வேகமும் முன்னுரிமையும் இல்லாமல் உள்ளது. எண்கள் காகிதத்தில் பெரிதாக தோன்றலாம், ஆனால் நோக்கம் ஒதுக்கீடுகளில் அல்ல, மாறாக விளைவுகளில் அளவிடப்பட வேண்டும்.


எனவே, இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்துவதில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான தேசிய பங்களிப்பாக ஒரு தனித்துவமான மற்றும் உணர்ச்சி ரீதியாக திறன்வாய்ந்த பாதுகாப்பு வரி (defence cess) தேவை. இது தற்போதுள்ள ஜிஎஸ்டி அமைப்பில் ஒரு சிறிய மாற்றமாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக, அது அதன் ஆயுதப் படைகளுக்கு நாட்டின் ஒருங்கிணைந்த ஆதரவைக் காட்டும் முற்றிலும் தனித்தனி கருவியாக இருக்க வேண்டும்.


இந்த வரி என்பது உயர்-ஆடம்பர சேவைகள் (ultra-luxury services) மற்றும் உயர் ரக கார்கள் (ultra-luxury goods such as high-end cars), இறக்குமதி செய்யப்பட்ட நகைகள் (imported jewellery), தனியார் ஜெட் விமானங்கள் (private jets), பிரீமியம் மதுபானங்கள் (premium liquor) மற்றும் பிற விருப்ப கொள்முதல்கள் போன்ற உயர்-ஆடம்பர பொருட்களுக்கு 5-10% கூடுதல் கட்டணத்தைக் குறிக்கும். தற்போதுள்ள மறைமுக வரிகளைப் போலன்றி, இந்த கூடுதல் கட்டணம் விலைப்பட்டியல்களில் "ரக்ஷா செஸ்" (Raksha cess) என தெளிவாக வகைப்படுத்தப்படும். இது ஜிஎஸ்டி கட்டமைப்பிலிருந்து வெளிப்படையானதாகவும், தனித்துவமாகவும் இருக்கும்.


இது ஆடம்பரப் பொருட்களுக்குச் செலவிடும் மக்களிடமிருந்து, புலப்படும் மற்றும் தன்னார்வ பங்களிப்பை அறிமுகப்படுத்துவதும், குறிப்பாக தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கி அதை வழிநடத்துவதும் இதன் யோசனையாகும். இந்த அணுகுமுறை சலுகையையும் நோக்கத்தையும் இணைக்கக்கூடும். இது நுகர்வோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்கேற்க அனுமதிக்கும். அவர்களின் செலவு அதிக பொறுப்புணர்வுடன் இணைக்கப்படும்.


கடந்த காலத்தில், பல நாடுகள் நுகர்வை பங்களிப்புடன் சீரமைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய நெருக்கடியின்போது இத்தாலி ஆடம்பரப் பொருட்களுக்கு சிறப்பு வரிகளை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் போன்றவற்றை சொந்தமாக வைத்திருப்பது நிதிப் பொறுப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தொடர்ந்து ஆடம்பர வரிவிதிப்பைப் பயன்படுத்துகிறது. இது பொருளாதார நீதியை மேம்படுத்துவதற்கான ஒரு நுட்பமான வழியாக செயல்படுகிறது. சீனா ஒரு அணுகுமுறையை எடுத்தது. இதன் ஆடம்பர எதிர்ப்பு பிரச்சாரத்தை ஒரு தேசிய முயற்சியாக மாற்றியது. இதற்கு முக்கியமான தொழில்களை நோக்கி மூலதனத்தை திருப்பிவிடுவதே இலக்காக இருந்தது.


நுகர்வு மற்றும் அர்ப்பணிப்பு


இந்திய சூழலில், இந்த அணுகுமுறை ஒரு தனித்துவமான உளவியல் மற்றும் நிதி நன்மையை வழங்கும். ஏனெனில், இது பணக்கார நபர்களுக்கு காணப்படும் மற்றும் தன்னார்வ தேசபக்தி மூலம் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்க அனுமதிக்கும். ஆடம்பரச் செலவுகள் தேசத்திற்கான வலுவான அர்ப்பணிப்புடன் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை இது காண்பிக்கும். பொது மக்களுக்கு, இது ஒரு தார்மீகக் கதையை உருவாக்கும். இந்தியாவின் வளர்ச்சியிலிருந்து அதிகம் சம்பாதித்தவர்கள் நாட்டைப் பாதுகாக்க வெளிப்படையாக உதவுகிறார்கள் என்பதையும் இது காண்பிக்கும்.


இந்த வரியின் (cess) சக்தி அது எவ்வளவு பணம் சேகரிக்கிறது என்பதில் மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அதன் வலிமை அது எவ்வளவு தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்தும் வரும். இது எளிமையாகவும், கவனம் செலுத்தியதாகவும், தார்மீக அடிப்படையில் புரிந்துகொள்ள எளிதாகவும் இருக்கும்.


மிக முக்கியமாக, இது மக்களின் நடத்தையை மாற்றக்கூடும். ஆடம்பரப் பொருட்களுக்குச் செலவிடுவது ஆயுதப் படைகளை ஆதரிப்பதற்கான ஒரு புலப்படும் வழியாக மாறும். ஒரு ஸ்போர்ட்ஸ் கார் அல்லது ஒரு டிசைனர் கடிகாரத்திற்கு செலுத்தப்படும் கூடுதல் செலவு குழப்பமான அரசாங்க பட்ஜெட்டில் மறைந்துவிடாது. அதற்குப் பதிலாக, புதிய போர் ஜெட் இயந்திரங்களை உருவாக்க அல்லது மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான மென்பொருளுக்கு நிதியளிக்க இது பயன்படுத்தப்படும்.


இருப்பினும், செயல்படுத்தல் நோக்கத்துடன் ஒத்துப்போக வேண்டும். இந்த வரி காலாவதியாகாதவாறு, வெளிப்படையாக நிர்வகிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறையில் மூலதன செலவினங்களுக்கு தெளிவாக ஒதுக்கப்பட வேண்டும். சேகரிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் நவீனமயமாக்கலுக்கு தடமறியக்கூடியதாக இருக்க வேண்டும். காலப்போக்கில், இந்த வரி, ஒரு வரி கருவியிலிருந்து தேசிய பெருமைத் திட்டமாக உருவாகலாம்.


இந்த யோசனை தற்போது அர்த்தமுள்ளதாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியா இப்போது எளிய கணக்கியலிலிருந்து கற்பனைக்கு மாற வேண்டிய நேரம் இது. தேசிய விவரிப்பு முக்கியமான ஒரு கட்டத்தில் இந்தியா உள்ளது. அந்த விவரிப்பை ஒரு தெளிவான நோக்கத்துடன் இணைக்க கூடுதல் வரி உதவும். இது நிதி ரீதியாக பொறுப்பான முறையில் இதைச் செய்ய முடியும். இது அரசியல் ரீதியாக இடையூறுகளைத் தவிர்க்கவும், மக்களை சமூக ரீதியாக ஒன்றிணைக்கவும் உதவும்.


இந்தியாவுக்கு வழிமுறைகள் உள்ளன. அதற்குத் தேவையானது ஒரு சரியான கட்டமைப்பு ஆகும். நாட்டிற்கும் ஒரு செய்தி தேவை - ஒவ்வொரு ஆடம்பரமும் பொறுப்புணர்வுடன் வர வேண்டும். மேலும் ஒவ்வொரு இன்பச் செயலும் நாட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.


சித்தார்த் கபூர் ஒரு வழக்கறிஞர் மற்றும் பொதுக் கொள்கை ஆர்வலர்.


Original article:

India needs a ‘defence cess’ to fund military modernisation -Sidharth Kapoor  

Share: