வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய கட்டுக்கதையை அம்பலப்படுத்துதல் -அரோலிப்சா தாஸ், உபைத் முஷ்டாக்

 வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Employment Linked Incentive (ELI)) இந்தியாவின் வேலையின்மை நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சியாக இருந்தாலும், கொள்கையின் வடிவமைப்பு தொழிலாளர் சந்தையில் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தலாம்.


ஜூலை 1, 2025 அன்று, அரசாங்கம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரிக்கும் வகையில் ₹99,446 கோடி செலவில் வேலைவாய்ப்பு இணைப்பு ஊக்கத் திட்டத்தை (ELI) அங்கீகரித்தது. இருப்பினும், இது தொழிலாளர் சந்தையில் மூலதன-தொழிலாளர் சமச்சீரின்மை, முறையான-முறைசாரா துறைப் பிரிவு, மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கும் வேலைத்திறனுக்கும் இடையேயான தொடர்ச்சியான பொருத்தமின்மை ஆகியவை பெரும்பாலான தொழிலாளர்களை, குறிப்பாக குறைந்த திறன் கொண்டவர்களையும் முறைசாரா தொழிலாளர்களையும் புறக்கணிக்கின்றன என்று கடுமையான கவலைகளை எழுப்புகிறது.


திட்டத்தில் சிக்கல்கள்


வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முயற்சியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் தொழிலாளர் சந்தைக்கு ஒரு முதலாளி-மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் (employer-centric approach) பிரதிபலிக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, குறிப்பாக உற்பத்தித் துறையில், முதலாளிகளுக்கு நிதி ஊக்கத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் என்பது மானிய மூலதனத்தைப் போலவே தெரிகிறது. இது ஏற்கனவே உள்ள மூலதன-உழைப்பு சமச்சீரற்ற தன்மையை (capital-labour asymmetries) ஊக்குவிக்கக்கூடும். இதன் விளைவாக, இது தொழிலாளர்களைவிட முதலாளிகளின் பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த வழிவகுக்கும். இது ஏற்கனவே உள்ள அதிக ஊதிய இடைவெளிகளை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, இது திட்டத்தின் நன்மைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் முறைசாரா மற்றும் குறைந்த திறமையான பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.


இந்தியாவின் தொழிலாளர் சந்தை நெருக்கடியின் மையத்தில் வேலைகள் பற்றாக்குறை மட்டுமல்ல, கடுமையான திறன் பொருந்தாத தன்மையும் உள்ளது. 2024-2025-ஆம் ஆண்டுகளின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பட்டதாரிகளில் 8.25% பேர் மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. 53% பட்டதாரிகளும், 36% முதுகலைப் பட்டதாரிகளும் குறைந்த திறன் அல்லது தொடக்கத் தொழில்களில் குறைந்த வேலையில் உள்ளனர். இந்த மோசமான சீரமைப்பு ஊதிய விளைவுகளில் மேலும் பிரதிபலிக்கிறது: சிறப்புப் பணிகளில் உள்ள பட்டதாரிகளில் 4.2% பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். அதே சமயம் குறைந்த திறன் வேலைகளில் கிட்டத்தட்ட 46% பேர் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இந்த புள்ளிவிபரங்கள் இந்தியாவின் கல்வி-வேலைவாய்ப்பு இணைப்புத்திட்டத்தின் (education-to-employment pipeline) திறமையின்மையை மட்டும் வெளிப்படுத்துகிறது. ஆனால், தொழில்துறை கோரும் திறன்கள் தொழிலாளர்களுக்கு இல்லாத ஒரு தொழிலாளர் சந்தையில் முதலாளியை மையமாகக் கொண்ட ஊக்கத்தொகைகளின் பயனற்ற தன்மையும் உள்ளது. இந்திய இளைஞர்களில் 4.9% (15-29 வயது) மட்டுமே முறையான தொழிற்கல்வி பெற்றுள்ளனர். வலுவான திறன் பயிற்சி திட்டங்கள் இல்லாமல், ELI திட்டம் வேலைகளுக்குத் தயாராக இல்லாத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளுக்கு பணத்தை வழங்குகிறது.


இத்திட்டமானது, ஏற்கனவே முறையான பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைகள்/நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க ஆர்வம் காட்டுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு (Employee’s Provident Fund Organisation (EPFO)) உதவுகிறது. இது திட்டத்தை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது என்றாலும், சமூகப் பாதுகாப்பு, முறையான ஒப்பந்தங்கள் அல்லது வேலைப் பாதுகாப்பு இல்லாத முறைசாரா வேலைகளில் பணிபுரியும் 90% தொழிலாளர்களை இது விட்டுவிடுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த வரம்பு மற்றும் விலக்கு முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான இடைவெளியை மேலும் மோசமாக்கக்கூடும். முறையான துறை அரசாங்க உதவியையும் பணத்தையும் பெறுகிறது. அதே நேரத்தில் முறைசாரா துறை புறக்கணிக்கப்படுகிறது. இந்தத் திட்டம், குறைந்த ஊதியம் பெறும், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களைப் புறக்கணித்து, பெரும்பாலும் பெரிய, பணக்கார நிறுவனங்களுக்கு அரசாங்கப் பணத்தை வழங்குவதன் மூலம் சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும். முறைசாரா துறையில் அரசின் கணிசமான முதலீடு, புதிய தொழிலாளர் சந்தையில் நுழைபவர்களில் பெரும்பாலோரை தொடர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் முறைசாரா பணியாளர்களைத் தவிர்த்து விடுகிறது.


மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டம் மறைமுக வேலையின்மையை (disguised unemployment) இயல்பாக்கும் - மக்களுக்கு வேலைகள் இருக்கலாம். ஆனால், உண்மையில் பயனுள்ள வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம். இது விவசாயம் மற்றும் முறைசாரா சேவைகளில் அடிக்கடி நிகழ்கிறது. இது குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த ஊதியத்திற்கு வழிவகுக்கிறது. சில நிறுவனங்கள் மானியப் பணத்தைப் பெறுவதற்காக பழைய வேலைகளை ‘புதிய வேலைகள்’ என்றும் அழைக்கலாம்.


உற்பத்தியில் இந்தத் திட்டத்தின் சிறப்பு கவனம் ஒரு துறைசார்ந்த பார்வையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. பொருளாதார மாற்றத்திற்கு உற்பத்தி மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், அதிகரித்த தானியங்கி மற்றும் தீவிர மூலதனத்தின் காரணமாக இந்தியாவில் அதன் வேலைவாய்ப்பு நெகிழ்ச்சித்தன்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று, உற்பத்தி மொத்த வேலைவாய்ப்பில் 13%-க்கும் குறைவாகவே பங்களிக்கிறது. அதே, நேரத்தில் விவசாயம் மற்றும் சேவைகள் இணைந்து ஏறக்குறைய 70% பணியாளர்களைப் பயன்படுத்துகின்றன. நீட்டிக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மூலம் உற்பத்திக்கு விகிதாசாரமற்ற சலுகைகளை வழங்குவதன் மூலம், இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத்  திட்டம் தொழிலாளர் தொகுப்பின் பெரிய பிரிவுகளை, குறிப்பாக பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களை ஓரங்கட்டக்கூடும். இதன், காரணமாக அவர்கள் குறைந்த திறன் சேவைகள் அல்லது விவசாயத்தில் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக ஏற்படக்கூடும். இந்தத் துறைசார் ஏற்றத்தாழ்வு, உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் முதன்மை இயந்திரமாக இருக்கும் என்ற காலாவதியான அனுமானத்தைக் குறிக்கிறது.


இதற்கு மாற்று என்னவாக இருக்க முடியும்?


ELI திட்டம் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இருந்தாலும், அது தொழிலாளர் சந்தையில் உள்ள கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தும் என்று கொள்கை வடிவமைப்பு சுட்டிக்காட்டுகிறது. முறைசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு, வேலை தரத்தை மேம்படுத்துதல் அல்லது சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் இல்லாததையும் இது எடுத்துக்காட்டுகிறது. திறன் மேம்பாடு மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் முதலீடு குறைந்த திறமையுள்ள தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். மேலும், குறுகியகால வேலைவாய்ப்பு உருவாக்கத்திலிருந்து நீண்டகால நிலையான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனை நோக்கி அதிக முயற்சிகள் மாற்றப்பட வேண்டும். தொழிலாளர் உரிமைகள் மற்றும் பேரம் பேசும் சக்தியில் சமரசம் செய்யாமல் இதைச் செய்ய வேண்டும். இறுதியாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வேலைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அது  அனைவருக்கும் பயனளிக்கும் நியாயமான மற்றும் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் (sustainable development strategy) கொண்டிருக்க வேண்டும்.


அரோலிப்சா தாஸ் மற்றும் உபைத் முஷ்டாக் ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள SRM-பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர்கள்.



Original article:

Share: