பீகார் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டில் புலம்பெயர் பெண் வாக்காளர்கள் எவ்வாறு வாக்குரிமை இழக்கிறார்கள்? -பிரசென்ஜித் போஸ்

 மக்கள் அடிக்கடி இடம்பெயர்வது அவர்களின் தீவிர சரிபார்ப்பு இயக்கத்தை நியாயப்படுத்துவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் பெண்கள் இடம்பெயர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும் திருமணத்தைப் பற்றி தேர்தல் ஆணையம்  குறிப்பிடத் தவறிவிட்டது.

தற்போதைய செய்தி:


பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (Special Intensive Revision (SIR)) கணக்கெடுப்பு கட்டம் ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது.


தரவு என்ன காட்டியது?


இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த தரவு, ஜூன் 24, 2025 நிலவரப்படி, சிறப்பு தீவிர திருத்த பயிற்சிக்கான அடிப்படைப் பட்டியலாக இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு நிரந்தர இடம்பெயர்வு முக்கியக் காரணமாக இருப்பதை வெளிப்படுத்தியது.  மொத்த நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், 55%-க்கும் மேற்பட்ட பதிவுகள் நிரந்தரமாக மாற்றப்பட்டவை அல்லது கண்டுபிடிக்க முடியாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஏறக்குறைய 34% உயிரிழந்துள்ளனர் என்றும், 10.8% மட்டுமே பல பதிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அட்டவணை 1-ல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது



உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தனி சட்டமன்றத் தொகுதி (separate Assembly Constituency (AC)) வாரியாக விலக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியல்களை வெளியிட்டதன் மூலம், துல்லியமான தரவு பகுப்பாய்வை சாத்தியமாக்கியுள்ளது. பீகாரில் அதிக வாக்காளர் நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில், நீக்கப்பட்ட 4.73 லட்சம் பெயர்களில் 56% பெண்கள் என்று தி இந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நீக்கப்பட்ட 2.68 லட்சம் பெண்களில், 46% பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களாகவும், 27% பேர் கண்டுபிடிக்க முடியாதவர்களாகவும், 20% பேர் இறந்தவர்களாகவும், 6% பேர் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்களாகவும் குறிக்கப்பட்டுள்ளனர். நிரந்தரமாக இடம்பெயர்ந்ததற்காக நீக்கப்பட்ட பெண்களில், 66% பேர் 18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இது அட்டவணை 2-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இடம்பெயர்ந்த பெண் வாக்காளர்களை பெருமளவில் நீக்குவது எதைக் குறிக்கிறது?


18–39 வயதுக்குட்பட்டவர்களில் 'நிரந்தரமாக இடம் பெயர்ந்ததற்காக' (permanently shifted) பெண் வாக்காளர்களின் விகிதாச்சாரமற்ற நீக்கம், திருமணமான பெண்கள் பெருமளவில் விலக்கப்படுவதைக் குறிக்கிறது. ஏனெனில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள் பீகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெண் இடம்பெயர்வுக்கு திருமணம் முக்கிய காரணம் என்பதைக் காட்டுகிறது. 


2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, பீகாரில் குடிபெயர்ந்த பெண்களில் 85.7% பேர் திருமணத்தின் காரணமாக இடம்பெயர்ந்தனர். 2025ஆம் ஆண்டு பீகார் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை இடம்பெயர்ந்தோருக்கு அநீதியானது மட்டுமல்லாமல், பெண் வாக்காளர்களுக்கு, குறிப்பாக இளம் திருமணமான பெண்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக உள்ளது என்பதை இது குறிக்கிறது.


ஒரு குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஒரு நபரின் தகுதி அளவுகோல் என்னவென்றால், அவர்கள் அந்தத் தொகுதியில் ‘இயல்பு வசிப்பவராக’ (ordinarily resident”) இருக்க வேண்டும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act), 1950-ல் வழங்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், ‘இயல்பாக வசிப்பவராக’ என்ற கருத்து சட்டங்களில் எங்கும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இது தன்னிச்சையான (arbitrary) அல்லது தவறான நீக்கங்களுக்கு (erroneous deletions) போதுமான வாய்ப்பை விட்டுச்செல்கிறது. பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ்  பின்பற்றப்பட்ட செயல்முறை, ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் 30 நாட்களுக்குள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். குறிப்பாக இடம்பெயர்ந்த பெண்களுக்கு நியாயமற்ற ஒரு புதிய அதிகாரப்பூர்வமற்ற விதியைச் சேர்த்தது.


அப்படி நீக்கம் செய்வது வாக்குரிமையை இழக்க வழிவகுக்குமா?


ஜூன் 24 தேதியிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் (EC) SIR உத்தரவு, "கல்வி, வாழ்வாதாரம் மற்றும் பிற காரணங்களால் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி இடம்பெயர்வது" என்பதை, "வாக்காளராக பதிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு நபரையும் சரிபார்க்கும் தீவிர சரிபார்ப்பு இயக்கத்திற்கு" நியாயமாகக் குறிப்பிடுகிறது. 

ஆனால், இந்தியாவில் பெண்கள் இடம்பெயர்வதற்கு மிகவும் பொதுவான காரணமான திருமணத்தைப் பற்றி குறிப்பிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. EC-யின் SIR தரவு, பலமுறை வாக்காளர் பதிவு காரணமாக நீக்கப்படுவது, இடம்பெயர்வு காரணமாக நீக்கப்படுவதை விட மிகவும் குறைவு என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்களை, அவர்களின் தற்போதைய வசிப்பிடத்தில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யாமல் நீக்குவது, வாக்குரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகும்.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 20(7)-ன் படி, தேர்தல் பதிவு அலுவலர், ஒரு நபர் எந்தவொரு தொடர்புடைய நேரத்தில் வழக்கமாக வசிக்கும் இடம் குறித்த கேள்வியை, அனைத்து உண்மைகளையும், மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து உருவாக்கக்கூடிய விதிகளையும் கருத்தில் கொண்டு தீர்மானிப்பார் என்று தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் கையேடு (மார்ச் 2023, ஆவணம் 10, பதிப்பு 2) பகுதி 8-ல் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இதுவரை எந்த விதியையும் உருவாக்கவில்லை.


இடம் பெயர்ந்த வாக்காளர்கள், குறிப்பாக திருமணம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் நிலையைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் நடைமுறைத் தெளிவின்மைகளை முதலில் நிவர்த்தி செய்யாமல் - இந்தியாவில் அதிக மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு விகிதம் மற்றும் அதிக அளவிலான மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு கொண்ட மாநிலமான பீகாரில் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR)) செயல்முறையைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 'வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள்' (foreign illegal migrants) மற்றும் குடியுரிமை மீது தேர்தல் ஆணையத்தின் தேவையற்ற கவனம், மிக முக்கியமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பியுள்ளது.


முன்னோக்கி செல்லும் வழி என்ன?


பொதுவாக இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு "இயல்பு குடியிருப்பாளர்" என்பதற்கான சட்டப்பூர்வ வரையறையைக் கண்டறிவதற்கு நேரம் ஆகலாம். ஆனால், பீகாரில் அதிக எண்ணிக்கையிலான இடம் பெயர்ந்த வாக்காளர்களை நியாயமற்ற முறையில் நீக்குவதைத் தடுக்க விரைவான நடவடிக்கைத் தேவை. 


ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய நிலை புதுப்பிப்பு, இன்றுவரை 70,895 கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் 2.28 லட்சம் படிவம் 6 விண்ணப்பங்கள் (புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்) மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த விகிதத்தில், நிரந்தரமாக இடம்பெயர்ந்ததாகவோ அல்லது கண்டுபிடிக்க முடியாததாகவோ கூறி நீக்கப்பட்ட 36 லட்சம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பார்கள்.


உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்தல், நிரந்தரமாக மாற்றப்பட்ட மற்றும் கண்டுபிடிக்க முடியாத வகைகளின் மறு சரிபார்ப்பு செயல்முறையைத் தொடங்குதல், மற்றும் நீக்கப்பட்ட புலம்பெயர்ந்த வாக்காளர்களை அவர்களின் தற்போதைய வசிப்பிடத் தொகுதியில் கட்டாயமாக மீண்டும் சேர்ப்பதை உறுதிசெய்தல் ஆகியவை ஓரளவு நிவாரணம் அளிக்கலாம். 


இடம்பெயர்ந்த பெண்களைப் பொறுத்த வரையில், அவரது பிறந்த குடும்பத்தின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது அவரது திருமணமான குடும்பத்திற்கு மாற்றுவது குறித்த முடிவு பெண் வாக்காளர்களிடமே இருக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் திணிக்கக் கூடாது.


பிரசென்ஜித் போஸ் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் ஆர்வலர்.



Original article:

Share: