புலம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பது (Disenfranchisement) தொடர்பான பிரச்சினை இன்னும் சிக்கலானதாக உள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவுகளை பிறப்பிக்கும்போது அவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கிரேக்க புராணத்தின் முக்கிய காவியமான Odyssey-யில், ஒடிஸியஸ் மன்னன் பாறையில் வசிக்கும் அசுரனான Scylla மற்றும் கொடிய சுழல்களை உருவகமாகக் கொண்ட அசுரன் சாரிப்டிஸுக்கும் இடையில் பயணிக்க வேண்டியிருந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட பீகார் தேர்தல் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் (Special Intensive Revision (SIR)), வரைவு வாக்காளர் பட்டியலில் (draft electoral roll) இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதே போன்ற சிக்கலான சூழ்நிலையை (Predicament) எதிர்கொள்கின்றனர்.
‘இயல்பு குடியிருப்பாளர்' (ordinarily resident) என்றால் என்ன?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950இன் விதிகளின்படி, இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People (RP) Act)) பிரிவு 19இன் படி, ஒரு நபர் தனது வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு ஒரு தொகுதியில் 'இயல்பு குடியிருப்பாளராக' இருக்க வேண்டும். இதனால் அவர் அந்தத் தொகுதியுடன் உண்மையான தொடர்புகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். இது பொறுப்புணர்வுள்ள பிரதிநிதித்துவத்தை பராமரிக்க உதவுகிறது. இது மோசடியான பதிவுகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரிவு 20, 'இயல்பு குடியிருப்பாளர்' என்ற சொல்லின் பொருளை விளக்குகிறது. ஒரு தொகுதியில் ஒரு நபர் சொந்தமாக வீடு வைத்திருப்பதாலோ மட்டுமே அவர் அந்தத் தொகுதியில் 'இயல்பு குடியிருப்பாளர்' கருதப்படக்கூடாது என்று இந்த சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது. இருப்பினும், தற்காலிகமாக தங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கும் ஒருவரை அங்கு "இயல்பு குடியிருப்பாளராக" கருதலாம். 2010ஆம் ஆண்டில், நீண்ட காலமாக வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட, தங்கள் கடவுச்சீட்டு (passport) முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள தொகுதியில் பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் பிரிவு 20A சேர்க்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையின் ஒரு பகுதியாக, தங்கள் வசிப்பிடத்தில் காணப்படாத அல்லது கணக்கெடுப்பு படிவங்களைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களை 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்/காணப்படாதவர்கள்' (permanently shifted/not found) என வகைப்படுத்தி, அவர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 19(1)(e), ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும் குடியேறவும் (fundamental right to reside) அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. இதன்படி, எந்தவொரு குடிமகனும் விரும்பினால், தனது வாக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் புதிய வசிப்பிடத்திற்கு மாற்றிக்கொள்ள உரிமை உண்டு இந்த பிரிவு கூறுகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக இந்தப் பிரச்சினை எழுகிறது. 2020-21ஆம் ஆண்டின் கால இடைவெளி தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)), இந்தியாவின் மக்கள்தொகையில் 11% பேர் வேலைவாய்ப்பு தொடர்பான காரணங்களால் புலம்பெயர்ந்துள்ளனர் (migrated) என்று மதிப்பிட்டுள்ளது. 15 கோடி வாக்காளர்கள் தங்கள் மாநிலங்களுக்குள் அல்லது வெளியே புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள், குறுகிய கால அல்லது நீண்ட கால, தங்கள் பகுதியில் வாய்ப்புகள் இல்லாததால் புலம்பெயர்கின்றனர். பல புலம்பெயர் கட்டுமான மற்றும் பாதுகாப்புத் தொழிலாளர்கள் தனியாக (குடும்பம் இல்லாமல்) புலம்பெயர்கின்றனர். அவர்கள் தங்கள் பணியிடத்தில் தற்காலிக குடிசைகள் அல்லது வசிப்பிடங்களில் வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் வேலையின் ஒரு பகுதியாக ஒரு மாநிலத்திற்குள் அல்லது பல்வேறு மாநிலங்களில் கூட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றனர். அவர்கள் சீரான இடைவெளியில் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்பிச் சென்று, தங்கள் குடும்பங்கள் வசிக்கும் இடத்திலிருந்தும், சொத்துக்கள் இருக்கும் இடத்திலிருந்தும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் & அன்ஆர் vs டாக்டர் மன்மோகன் சிங் & மற்றவர்கள் (Election Commission Of India & Anr vs Dr. Manmohan Singh & Ors) (1999) வழக்கில், குவாஹாட்டி உயர் நீதிமன்றம், 'இயல்பு குடியிருப்பாளர்' என்ற சொல் அந்த இடத்தில் வழக்கமாக வசிப்பவரைக் குறிக்கும் என்று சுட்டிக்காட்டியது. அது நிரந்தர தன்மையுடையதாக இருக்க வேண்டும். தற்காலிகமாகவோ அல்லது சாதாரணமாகவோ இருக்கக் கூடாது. ஒரு நபர் நிரந்தரமாக அங்கே வசிக்கும் நோக்கம் கொண்ட இடமாக இருக்க வேண்டும். ஒரு நியாயமான மனிதன் அவனை/அவளை அந்த இடத்தின் குடியிருப்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்தப் பகுதியில் நிரந்தரமாக வசிக்கவில்லை என்றாலும், அவர்கள் அங்கு 'இயல்பு குடியிருப்பாளர்' என்ற கருத்தை இன்னும் பூர்த்தி செய்கிறார்கள் என்று நீதிமன்றங்கள் நம்புகின்றன.
சட்டபூர்வமான தன்மை vs உண்மையான அரசியல் (realpolitik)
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், தங்கள் சொந்த மாநிலம்/தொகுதியை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோர், அவர்கள் வசிக்கும் புதிய வசிப்பிடத்தில் வாக்காளராகப் பதிவு செய்யலாம் என்று கூறுகிறது. இருப்பினும், பல புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் வாக்கை மாற்ற ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களிடம் தங்கள் புதிய வசிப்பிடத்தில் ஆதார் அட்டையைத் தவிர வேறு எந்த ஆவணமும் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், இது சிறப்பு தீவிர திருத்த செயல்முறையின் கீழ் புதிய வாக்காளர் பதிவுக்கான தகுதியுள்ள ஆவணங்களின் பட்டியலில் இல்லை. மேலும், நீதிமன்றங்களால் வகுக்கப்பட்ட இயல்பு குடியிருப்பாளர்' என்ற நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்கிறார்களா என்பதை சவால் செய்யலாம்.
சட்ட வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புலம்பெயர்ந்தோர் இடம்பெயர்ந்த மாநிலங்களில் உள்ள அரசியல் பிரச்சினைகளை புறக்கணிக்க முடியாது. இந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகள் புலம்பெயர்ந்தோரை தங்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து கவலைகளை எழுப்புகின்றன. இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லாததால் இது ஜனநாயக செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள அரசியல் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே இந்த தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். புலம்பெயர்ந்தவர்களை சட்டப்படி (de jure) உள்-புலம்பெயர்வு மாநிலங்களின் பட்டியல்களில் சேர்க்கலாம் என்று வாதிடலாம் என்றாலும், அவர்களின் பணியிடத்தில் உள்ள சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக அது அவர்களின் நடைமுறை வாக்குரிமை இழப்புக்கு (de facto disenfranchisement) வழிவகுக்கலாம். சிறப்பு தீவிர திருத்தத்துடன் இணைக்கப்பட்ட வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கும்போது உச்ச நீதிமன்றம் இந்த காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நியாயமான மற்றும் உள்ளடக்கிய செயல்முறையை நோக்கி (Towards a fair and inclusive process)
இந்தியாவில், பல நகரங்களில், வாக்குச் சாவடிகள் தங்கள் வீடுகளிலிருந்து 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தாலும், கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதில்லை. பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேர்தல் நாளில் தங்கள் தொகுதிக்கு வர முடியாததால் வாக்களிப்பதில்லை.
புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் உண்மையான வசிப்பிடத்தில் சேர்ப்பதற்கான வழக்குக்கு இந்த வாதங்கள் முன்வைக்கப்படலாம் என்றாலும், தேர்தல்களில் அவர்கள் வாக்களிக்காமல் இருப்பதற்க்கு இது ஒரு காரணமாக இருக்க முடியாது. வாக்குப்பதிவு நாளில் சட்டப்பூர்வ விடுமுறையின் கடுமையான அமலாக்கத்தை உறுதி செய்தல் மற்றும் அதிக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்குதல் போன்ற நடவடிக்கைகள் ஒரு மாநிலத்திற்குள் தேர்தல் செயல்முறையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்கேற்பை திறம்பட அதிகரிக்க முடியும்.
மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் வாக்காளர்களைப் பொறுத்து, தேர்தல் ஆணையம் 72 தொகுதிகள் வரை கையாளக்கூடிய பல தொகுதி தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (Multi Constituency Remote Electronic Voting Machine (RVM)) சோதனையை உருவாக்கியிருந்தது. இது 2023ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு செயல்முறையை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது. இருப்பினும், அரசியல் கட்சிகள் எழுப்பிய கவலைகள் மற்றும் நிர்வாக சவால்கள் காரணமாக இது குறுகிய காலம் மட்டுமே நீடித்தது.
புதிய தொழில்நுட்பங்களுடன், தொலைதூர வாக்களிப்புக்கு பாதுகாப்பான மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பை உருவாக்குவது சாத்தியமாக இருக்க வேண்டும். அதுவரை, அதிக ரயில்கள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளை இயக்குவது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயணத்திற்காக சில கூடுதல் நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகள் தேர்தல்களில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவும்.
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of the People (RP) Act)) தேவையான திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
ரங்கராஜன் R. முன்னாள் இந்தியா ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் Courseware on Polity Simplified புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.