விவசாயக் கூட்டமைப்பான ஒருங்கிணைந்த விவசாயிகள் முன்னணி (SKM), ஒன்றிய அரசின் தேசிய கூட்டுறவுக் கொள்கை 2025 திட்டத்தை ஏன் எதிர்க்கிறது? -அஞ்சு அக்னிஹோத்ரி சாபா

 ஒருங்கிணைந்த விவசாயிகள் முன்னணி (Samyukt Kisan Morcha (SKM)) என்பது பல விவசாயிகளின் அமைப்புகளைக் கொண்ட ஒரு தேசிய கூட்டணியாகும். தேசிய கூட்டுறவுக் கொள்கை (National Cooperation Policy (NCP)) 2025 அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு எதிரானது என்று குறிப்பிடுகிறது. இந்தக் கொள்கை பல நிறுவனங்கள் மறைமுக வழிகளில் விவசாயத்தில் நுழைய அனுமதிக்கிறது என்றும் குழு கூறுகிறது.


NCP 2025 ஆனது, சமீபத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் அமித் ஷாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல்வேறு விவசாய சங்கங்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.


பல விவசாய அமைப்புகளின் தேசியக் கூட்டணி அமைப்பான, சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM), அரசியலமைப்பு ரீதியாக மாநிலங்களுக்குச் சொந்தமான ஒரு அமைப்பாக இருந்தாலும்கூட, கூட்டுறவு சங்கங்களின் மீது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டை மையப்படுத்த முயற்சிப்பதன் மூலம் இந்தக் கொள்கை அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாகக் கூறியுள்ளது.


மேலும், NCP 2025 விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான உண்மையான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக விவசாயத்தில் நிறுவனங்கள் நுழைவதை எளிதாக்குவதற்கான ஒரு பின்புற வழிமுறையாகும் என்றும் SKM குற்றம் சாட்டுகிறது.


விவசாயிகள் கூட்டணி அரசியல் கட்சிகள், மாநில அரசாங்கங்கள் மற்றும் இந்திய மக்களை "கூட்டுறவு கூட்டாட்சி மீதான தாக்குதல்" (attack on cooperative federalism) என்ற வகையில் எதிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


தேசிய கூட்டுறவுக் கொள்கை (National Cooperation Policy (NCP)) 2025 என்றால் என்ன?


ஜூலை 24 அன்று அமித் ஷா அறிமுகப்படுத்திய தேசிய கூட்டுறவுக்க் கொள்கை-2025 (National Cooperation Policy), 50 கோடி மக்களை கூட்டுறவுத் துறையில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, "2025-45 முதல் அடுத்த இருபதாண்டுகளுக்கு இந்தியாவின் கூட்டுறவுத் துறை இயக்கத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்" என்று குறிப்பிட்டது.


இந்தக் கொள்கை புதிய கூட்டுறவு அமைச்சகத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. இந்த அதிகாரங்களில் கொள்கைகளை உருவாக்குதல், பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்களில் கூட்டுறவு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் கூட்டுறவுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவை அடங்கும். இந்தக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையானது 'சஹகர் சே சம்ரிதி' (Sahakar se Samriddhi) அதாவது "கூட்டுறவு மூலம் செழிப்பு" (Prosperity through Cooperation) போன்றவற்றை உள்ளடக்கியது. மேலும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி, "கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டு மாதிரியை" மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


தேசிய கூட்டுறவுக் கொள்கைக்கு-2025 (National Cooperation Policy (NCP)) எதிரான முக்கிய விமர்சனங்கள் என்ன?


கொள்கைக்கு எதிராக மூன்று முக்கிய வகையான விமர்சனங்கள் உள்ளன.


கூட்டாட்சி மீதான தாக்குதல் : கூட்டுறவு சங்கங்கள் இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் (பட்டியல் II) பிரிவு 32-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் பொருள், மாநில அரசுகள் மட்டுமே தங்கள் மாநிலங்களுக்குள் சட்டங்களை உருவாக்கி கூட்டுறவு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.


2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு (97வது திருத்தம்) சட்டம், 2011-ன் சில பகுதிகளை இரத்து செய்தது. இந்தத் திருத்தம் ஒரு மாநிலத்திற்குள் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மீது ஒன்றிய அரசுக்கு அதிகாரத்தை வழங்கியது. நீதிபதிகள் R F நாரிமன், K M ஜோசப் மற்றும் B R கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விஷயம் "சட்டம் இயற்றுவதுகு முழுமையாகவும் பிரத்தியேகமாகவும் மாநில சட்டமன்றங்களுக்குச் சொந்தமானது" என்றும், அரசியலமைப்பின் பிரிவு 368(2)-ன் படி, இந்தப் பிரிவில் எந்தவொரு மாற்றத்திற்கும் குறைந்தது பாதி மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறினர்.


இந்த புதிய கொள்கையை, SKM கூட்டாட்சி மீதான ஒன்றியத்தின் "திட்டமிட்ட தாக்குதல்" (planned attack) என்று அழைத்துள்ளது. ஏனெனில், இது மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தைத் தவிர்த்து, அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டது.


பெருநிறுவனங்களுக்கான பின்வாசல் (Backdoor for corporations) :  இந்த அதிகார மையப்படுத்தல், "கூட்டுறவு மேம்பாடு" (cooperative development) என்ற போர்வையில் விவசாயத் துறையில் நிறுவனங்களுக்கு ஒரு இடத்தை வழங்குவதாக SKM கூறுகிறது.


"நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளுடன் விவசாயிகளை ஒருங்கிணைப்பதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும் என்று SKM எச்சரிக்கிறது. இது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organisations (FPO)) மூலம் செய்யப்படும்," என்று பாரதி கிசான் யூனியன் (BKU) டகவுண்டாவின் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் கூறினார். இந்த அமைப்பு பெரிய வேளாண் வணிகங்கள் விலைகளையும் சந்தைகளையும் கட்டுப்படுத்த அனுமதிக்கும் என்று அவர் மேலும் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இதுபோன்ற ஒரு பெருநிறுவன கையகப்படுத்தல் பரவலான சுரண்டலுக்கு வழிவகுக்கும். இது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயம், சேவைகள், வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதிக்கும்.


கொள்கை உரையில் பெருநிறுவனங்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், புதிய துறைகள், கூட்டுறவு ஏற்றுமதி தளங்கள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகள் போன்ற பல பகுதிகள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. இந்தப் பகுதிகள் பொதுவாக பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது பெருநிறுவனங்கள் மறைமுகமாக ஈடுபட அனுமதிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சேவைகள், தள கூட்டாண்மைகள், உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதன் மூலம் அவர்கள் இதைச் செய்யலாம்.


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு போதுமானதைச் செய்யவில்லை : SKM-ன் கூற்றுப்படி, தேசிய கூட்டுறவுக் கொள்கை-2025 (National Cooperation Policy) விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. வாழ்வாதாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து உபரியின் நியாயமான விநியோகம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை இது தீர்க்கத் தவறிவிட்டது.


இந்தக் கொள்கையில் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டம் இல்லை. விவசாயம் சார்ந்த தொழில்களை அமைப்பது அல்லது கூட்டுறவு சந்தைப்படுத்தல் வலைப்பின்னல்களை உருவாக்குவதற்கான உத்தியும் இதில் இல்லை. இந்தக் கொள்கை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் கூட்டுறவுகளின் தேவையை புறக்கணிக்கிறது. இது கூட்டு விவசாயத்தை ஆதரிக்கவில்லை. உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இது தவறிவிட்டது. இந்தக் கொள்கை பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு உதவுவதாகக் கூறினாலும், அவர்களின் அதிகாரமளித்தல் அல்லது நலனுக்கான தெளிவான நடவடிக்கைகளை இது வழங்கவில்லை என்று SKM தெரிவித்துள்ளது.


SKM-ன் மாற்றுக் கண்ணோட்டம் என்ன?


SKM, ஒன்றிய அரசை மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது. கூட்டுறவு கூட்டாட்சி முறையை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மேலும், ஒன்றிய அரசின் வளங்களில் 50% மாநில அளவில் கூட்டுறவு சங்கங்களை நவீனமயமாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் SKM கோருகிறது. விவசாயம் மற்றும் வேளாண் தொழில்களில் பெருநிறுவனங்கள் நுழைவதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பெறுவதையும், தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதையும் உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.


NCP 2025-ஐ எதிர்த்துப் போராட, SKM இந்தியா முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஒழுங்கமைக்கிறது. அவர்கள் ஏற்கனவே ஆகஸ்ட் 13, 2025 அன்று "பெருநிறுவனங்களே வெளியேறு" (Corporations Quit India) என்ற நாடு தழுவிய போராட்டத்தைத் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கொள்கையை எதிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளையும் மாநில அரசுகளையும் SKM கேட்டுக் கொண்டுள்ளது.


ஆகஸ்ட் 13 போராட்டம் பல இலக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று சுவாமிநாதன் ஆணையத்தின் (Swaminathan Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கோருவது. மற்றொன்று, கடன் தள்ளுபடிகளைக் கேட்பது. தனியார்மயமாக்கல் மற்றும் கட்டாய நிலம் கையகப்படுத்துதலை நிறுத்துவதையும் இந்த போராட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு எதிர்ப்பும் அடங்கும். இறுதியாக, இது இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கிறது.



Original article:

Share: