அரசு பணியாளர்கள் செப்டம்பர் 30 வரை UPS-யை தேர்வு செய்யலாம் : இந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்பது என்ன? -தாமினி நாத்

 

Unified Pension Scheme (UPS) :  ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS)


பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பணியாளர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அரசானது கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிவித்தது. இந்தத் திட்டம் என்ன?, அது ஏன் தாமதமாகிறது? 


மத்திய அரசு பணியாளர்கள் தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System (NPS)) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme (UPS)) தேர்வு செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திங்கள்கிழமை (செப்டம்பர் 15) நிலவரப்படி, தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள சுமார் 23.94 லட்சம் பணியாளர்களில் சுமார் 40,000 பேர் மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் (UPS) தேர்ந்தெடுத்துள்ளதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் வட்டாரங்கள் இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றன.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தேர்வுசெய்யும் மத்திய அரசு பணியாளர்களுக்கான சேவை தொடர்பானவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, செப்டம்பர் 2-ம் தேதி, மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்) விதிகள்-2025-ஐ (Central Civil Services (Implementation of the Unified Pension Scheme under the National Pension System) Rules) இந்தத் துறை அறிவித்தது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) என்றால் என்ன?


கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிவிக்கப்படும் வரை, ஜனவரி 1, 2004-க்கு முன் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme (OPS)) கீழ் இருந்தனர். இந்தத் திட்டம் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) சந்தாதாரர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிவரும் நிலையில், அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் UPS-ஐ அறிவித்தது.


ஜனவரி 1, 2004-க்குப் பிறகு சேர்ந்த அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் NPS கட்டாயம் என்றாலும், UPS விருப்பமானது. இதன் மூலம், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி ஓய்வு பெறுவதற்கு முன் கடந்த 12 மாதங்களில் பணியாளர் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட தொகையை இந்தத் திட்டம் வழங்குகிறது. ஓய்வூதியதாரர் இறந்தால், பெறப்படும் ஓய்வூதியத்தில் 60% வரை மனைவிக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


UPS மற்றும் NPS இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?


முதல் பெரிய வித்தியாசம் என்னவென்றால், NPS கட்டாயமானது, UPS விருப்பமானது. இந்தத் துறையில் அறிவிக்கப்பட்ட விதிகளின்படி, செப்டம்பர் 30 வரை UPS-ஐத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்கள் NPS-க்குத் திரும்ப ஒரு முறை மட்டுமே விருப்பம் இருக்கும். ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு வரை இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம். மேலும், விருப்ப ஓய்வூதியம் (Voluntary Retirement (VRS)) எடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பும் இதைப் பயன்படுத்தலாம். இந்தத் தேர்வு செய்யப்பட்டவுடன், பணியாளர் மீண்டும் UPS-ஐத் தேர்வு செய்ய முடியாது.


திங்கட்கிழமை அன்று ஒரு அறிக்கையில், துறை மாறுவதற்கான விருப்பம் "UPS-ஐத் தேர்ந்தெடுப்பதில் சந்தாதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் மற்றும் அவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய நிதிப் பாதுகாப்பைத் திட்டமிடுவதில் தகவலறிந்த தேர்வை வழங்கும்" என்று கூறியது.


NPS திட்டத்தின் கீழ், நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (Permanent Retirement Account Number (PRAN)) மூலம் ஓய்வூதியக் கணக்கில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (dearness allowance(DA)) பணியாளரால் 10% மற்றும் அரசாங்கத்தால் 14% பங்களிப்பு அளிக்கப்படுகிறது. UPS-க்கு, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் பணியாளருக்கும், அரசாங்கத்துக்கும் PRAN இன் பங்களிப்பு தலா 10% ஆகும். UPS-ன் கீழ் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்வதற்கு உட்பட்டு கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட தொகை உள்ளது. NPS-க்கு உறுதி செய்யப்பட்ட தொகை இல்லை. இது திரட்டப்பட்ட நிதியை (accumulated corpus) அடிப்படையாகக் கொண்டது.


இந்த உறுதியளிக்கப்பட்ட கட்டணத்திற்காக, யுபிஎஸ்-ல் அரசாங்கத்தின் அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ-வில் 8.5% பங்களிப்பு மூலம் உருவாக்கப்படும் ஒரு கூட்டு நிதி ஏற்பாடு உள்ளது. யுபிஎஸ்-ன் கீழ் 10 ஆண்டு பணிக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000 கட்டணம் உறுதி செய்யப்படுகிறது. பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியர்கள் இந்த உறுதியளிக்கப்பட்ட கட்டணத்திற்கு தகுதியற்றவர்களாக இருப்பார்கள். NPS-ல் ஒரு மொத்தத் தொகை கட்டணம் இல்லை, ஆனால் UPS-ல் ஒவ்வொரு ஆறு மாத பணி முடிவடைந்ததற்கும் கடைசி அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ-வில் 1/10வது பங்கு ஒரு மொத்தத் தொகையாக உள்ளது.


UPS ஏன் மெதுவாக செயல்படுகிறது?


ஏப்ரல் 1 முதல், UPS-ஐ தேர்வு செய்ய பணியாளர்களுக்கு ஜூன் 30 வரை அரசாங்கம் அவகாசம் வழங்கியது. பல பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட "பிரதிநிதிகளை" மேற்கோள்காட்டி, நிதி அமைச்சகம் செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்தது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஓய்வூதியத் துறை (Department of Pension) செயல்பட்டு வருகிறது. செப்டம்பர்-9 அன்று, செயலாளர், வி ஸ்ரீனிவாஸ், அனைத்து அமைச்சகங்களுடனும் ஒரு கூட்டத்தை நடத்தினார். இது தகுதியான பணியாளர்களிடையே தகவல்களைப் பரப்பவும், தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவுவதும் இதன் நோக்கமாகும். இருப்பினும், புதிய திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை இதுவரை குறைவாகவே உள்ளது.


பெயர் குறிப்பிடாத நிலையில் பேசிய சில பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான (Old Pension Scheme (OPS)) தங்களின் கோரிக்கை இன்னும் உள்ளது என்றும், UPS அதே சலுகைகளை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.


OPS-ன் கீழ், பணியாளர்களிடமிருந்து எந்த பங்களிப்பும் இல்லை மற்றும் அரசாங்கம் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50% மற்றும் DA உடன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டபிறகு, ஆயிரக்கணக்கான CSS பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய செயலக சேவை மன்றம் (Central Secretariat Service Forum), UPS மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) இரண்டும் பணியாளர்களுக்கு பயனளிக்காது என்றும், அனைவருக்கும் OPS திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுப்பதாகவும் கூறியிருந்தது. 



Original article:

Share: