இந்தியாவிற்கு, உச்சநீதிமன்றத்தில் அதிக பெண் நீதிபதிகள் தேவை -ஜெய்னா கோத்தாரி

 இந்திய உச்சநீதிமன்றம் அதிக பெண் நீதிபதிகளை நியமிப்பதன் மூலம் அதன் கடுமையான பாலின ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டும். 


ஆகஸ்ட் 9, 2025 அன்று நீதிபதி சுதன்ஷு துலியா ஓய்வு பெற்றவுடன், இந்திய உச்சநீதிமன்றத்தில் இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. நீதிமன்றத்தில் பாலின ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்து பெண் நீதிபதிகளை நியமிக்க, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால், இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. 


34 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னா என்பவர் மட்டுமே ஒரே ஒரு பெண் நீதிபதி ஆவார். நீதிபதி நாகரத்னாவும் கொலீஜியத்தின் ஒரு பகுதியாக உள்ளார். நீதிமன்றத்திற்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி விபுல் பஞ்சோலியை அவர் ஏற்கவில்லை. 


ஏனெனில், அவரைவிட மூத்த நீதிபதிகள் இருப்பதாகவும், பிராந்திய பிரதிநிதித்துவமும் முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அவரது கருத்து வேறுபாடு புறக்கணிக்கப்பட்டது. 


ஆகஸ்ட் 29, 2025 அன்று, நீதிபதி விபுல் பஞ்சோலி மற்றும் நீதிபதி அலோக் ஆராதே ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.


இது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமன நடைமுறையை மறுபரிசீலனை செய்ய மட்டுமல்லாமல், பெண் நீதிபதிகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் எவ்வாறு கருதப்படுகின்றன என்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பெண் நீதிபதிகளின் கடுமையான பற்றாக்குறையை ஆராய்ந்து கேள்வி கேட்கவும் குறிப்பிடுகிறது. 


நீதிமன்றத்தில் பெண்களின் நியமனங்கள் முழுமையாக விலக்கப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது இன்று நாட்டுக்கு என்ன அர்த்தம் விளக்கப்படும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


குறைவான நியமனங்கள், பன்முகத்தன்மை இல்லாதது

1950 முதல், உச்ச நீதிமன்றம் 287 நீதிபதிகளை நியமித்துள்ளது. இவற்றில், 11 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் ஆவர். இது மொத்தத்தில் 3.8% மட்டுமே.


உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் பின்வருமாறு :


  1. நீதிபதி பாத்திமா பீவி (அக்டோபர் 6, 1989 - ஏப்ரல் 29, 1992)

  2. நீதிபதி சுஜாதா வி. மனோகர் (நவம்பர் 8, 1994 - ஆகஸ்ட் 27, 1999)

  3. நீதிபதி ரூமா பால் (ஜனவரி 28, 2000 - ஜூன் 2, 2006)

  4. நீதிபதி ஞான சுதா மிஸ்ரா (ஏப்ரல் 30, 2010 - ஏப்ரல் 27, 2014)

  5. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (செப்டம்பர் 13, 2011 - அக்டோபர் 29, 2014)

  6. நீதிபதி ஆர். பானுமதி (ஆகஸ்ட் 13, 2014 - ஜூலை 19, 2020)

  7. நீதிபதி இந்து மல்ஹோத்ரா (ஏப்ரல் 27, 2018 - மார்ச் 13, 2021)

  8. நீதிபதி இந்திரா பானர்ஜி (ஆகஸ்ட் 7, 2018 – செப்டம்பர் 23, 2022)

  9. நீதிபதி ஹிமா கோஹ்லி (ஆகஸ்ட் 31, 2021 – செப்டம்பர் 1, 2024)

  10. நீதிபதி பேலா எம். திரிவேதி (ஆகஸ்ட் 31, 2021 – ஜூன் 9, 2025)

  11. நீதிபதி பி.வி. நாகரத்னா (ஆகஸ்ட் 31, 2021 – அக்டோபர் 29, 2027)


கடந்த ஆகஸ்ட் 31, 2021 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், மூன்று பெண் நீதிபதிகளை நியமித்ததுதான் நீதிமன்றத்திற்கு கடைசியாக பெண் நீதிபதிகளின் நியமனம் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெண் நீதிபதிகளை நியமிப்பதுகூட அரிதான செயலாக இருந்ததால் இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகக் கருதப்பட்டது. 


ஏற்கனவே, நீதிமன்ற அமர்வில் இருந்த நீதிபதி இந்திரா பானர்ஜியுடன், முதன்முறையாக, நீதிமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10%-க்கும் அதிகமாக இருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளிடையே சாதி வேறுபாடு முற்றிலும் இல்லை. ஏனெனில், இது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பெண்களை நியமிக்க வழிவகுக்கவில்லை. சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒரே பெண் நீதிபதியாக நீதிபதி பாத்திமா பீவி இன்னும் இருக்கிறார்.


வழக்குரைஞர் சங்கத்திலிருந்து (Bar), நேரடியாக நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அல்லது நடைமுறையில் இருந்து நேரடியாக உயர்த்தப்பட்ட வழக்கறிஞர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க பாலின வேறுபாடு உள்ளது. 1950 முதல், ஒன்பது ஆண் நீதிபதிகள் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நேரடியாக நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளனர். 


இருப்பினும், இன்றுவரை நீதிபதி இந்து மல்ஹோத்ரா அவர்கள் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே இவற்றில் இருந்துள்ளார். நீதிமன்றத்தில் பெண் மூத்த வழக்கறிஞர்கள் இருந்தும், வேறு எந்த பெண் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை. 


உண்மையில், உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிப்பதில் இடைவெளி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உலகம் முழுவதும், வழக்கறிஞர் சங்கம் நீதித்துறைக்கான வழக்கமான முக்கியப் பாதையாக பார்க்கப்படுகிறது மற்றும் உயர் நீதித்துறைக்கான நியமனங்கள் பெரும்பாலும் ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கையின் இறுதிக் கட்டமாக பார்க்கப்படுகிறது. 


இருப்பினும், இந்தியாவில் உள்ள பெண் வழக்கறிஞர்களுக்கு இது பொருந்தாது மற்றும் சட்டத் தொழிலில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் வெளிப்படையான பகுதியாக உள்ளது.


உச்சநீதிமன்றத்தில் பெண்களும் மிகவும் தாமதமான வயதிலேயே நியமிக்கப்படுகிறார்கள். இது நீதிமன்றத்தில் அவர்களின் நேரத்தையும், மூத்த பதவிகளுக்கு உயரும் வாய்ப்புகளையும் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இன்றுவரை நீதிமன்றத்தில் உள்ள 11 பெண் நீதிபதிகளில், ஐந்து பெண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், மூன்று பேர் மட்டுமே நியமனங்களில் பங்கேற்றுள்ளனர். 


நீதிபதி இந்து மல்ஹோத்ரா மற்றும் நீதிபதி பாத்திமா பீவி ஆகியோர் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர். இது வரலாற்று ரீதியாக, இதில் ஐந்து ஆண் நீதிபதிகள் மட்டுமே இவ்வளவு குறுகிய பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர். 


தாமதமாக நியமனம் செய்யப்படுவதால், பெண் நீதிபதிகள் அரிதாகவே கொலீஜியத்தில் சேருகிறார்கள் அல்லது இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு உயர்கிறார்கள். நீதிபதி நாகரத்னா இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருப்பார். ஆனால் அவரது பதவிக்காலம் செப்டம்பர் 24, 2027 முதல் அக்டோபர் 29, 2027 வரை 36 நாட்கள் மட்டுமே நீடிக்கும்.


நியமனங்களுக்கான நடைமுறை மற்றும் அளவுகோல்கள்


நீதிமன்றங்களில் நியமன செயல்முறை (process of appointments) என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நடைமுறை குறிப்பாணையின்படி, நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்துடன் கலந்து ஆலோசித்து, நீதிமன்ற நீதிபதி நியமனம் இந்திய தலைமை நீதிபதியால் (Chief Justice of India (CJI)) முடிவு செய்யப்படுகிறது. 


தலைமை நீதிபதியின் இறுதிப் பரிந்துரையைப் பெற்ற பிறகு, மத்திய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் (Union Minister of Law, Justice and Company Affairs), நியமன விஷயத்தில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் பரிந்துரைகளை பிரதமரிடம் சமர்ப்பிக்கிறார். மேலும், நியமனம் தொடர்பாக பிரதமர் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.

இதற்கான விதிமுறைகள் பொதுவாக குறிப்பிடாததால், எந்த அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் அதன் சில தீர்மானங்களை உச்சநீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிட்டது. இந்தத் தீர்மானங்களில் நியமனங்களுக்கான காரணங்கள் இருந்தன. 


இருப்பினும், பின்னர் தலைமை நீதிபதிகள் தலைமையிலான கொலீஜியம்கள் தங்கள் பரிந்துரைகளுக்கான காரணங்களை வழங்குவதில் நிலைத்தன்மையுடன் இல்லை. நாம் அறிந்தது என்னவென்றால், பல்வேறு காலகட்டங்களில், வேட்பாளர்களின் சாதி, மதம் அல்லது பிரதேசம் போன்றவை நியமனங்களுக்கு பரிசீலிக்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக் காலத்தில், கொலீஜியம் தீர்மானங்கள் நியமனங்களுக்கான விரிவான காரணங்களை அளித்தன.


சாதி, மதம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் ஆகியவை நியமனங்களுக்கான அளவுகோலாகக் கருதப்படும்போது, ​​நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பாலினம் ஏன் அதிகாரப்பூர்வ அளவுகோலாக மாற்றப்படவில்லை? உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பாலினம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.


யார், எப்போது பரிசீலிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், கொலீஜியத்தின் செயல்முறையும் இரகசியமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடத்தப்படுகிறது. உயர் நீதித்துறைக்கு பரிசீலிக்கப்படும் நியமனங்கள் வெளிப்படையாகவும், பொதுவில் இருக்க வேண்டும். 


பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள் விதிவிலக்கான அறிவார்ந்த மற்றும் சட்டத் திறன் கொண்டவர்களாகவும், சிறந்த தீர்ப்பு மற்றும் சிறந்த பணிப் பதிவையும் கொண்டிருக்க வேண்டும். மேலும், வெவ்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களின் தேவைகளுக்கு உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். 


பன்முகத்தன்மை மற்றும் பாலினம், சாதி, மதம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குவதற்கான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இந்த உறுதிப்பாடு உயர் நீதித்துறையில் எழுதப்பட்ட கொள்கை மூலம் நிறுவனமயமாக்கப்பட வேண்டும். அத்தகைய கொள்கை பாலின பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்க வேண்டும்.


முன்னாள் தலைமை நீதிபதிகளிடம், உயர்நீதிமன்றத்தில் பெண்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டபோது, பணிமூப்பு அடிப்படையில் பெண்கள் இல்லாதது போன்ற பல்வேறு ஆறுதலான காரணங்கள் கூறப்பட்டன. தற்போதைய நியமனங்கள், பணிமூப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன, ஏனெனில் உயர்நீதிமன்றங்களில் மூத்தவர்களாக இருந்த பல பெண் நீதிபதிகள் பரிசீலிக்கப்படவில்லை. 


மேலும், பெண் வழக்கறிஞர்களை நேரடியாக நீதிமன்றத்தில் நியமிக்க பணிமூப்பு தேவையில்லை, ஆனால் 2018ஆம் ஆண்டு நீதிபதி இந்து மால்ஹோத்ரா நியமிக்கப்பட்ட பிறகு இதுவும் செய்யப்படவில்லை.


இந்திய உச்சநீதிமன்றம் பாலின சமத்துவம் மற்றும் பாலின சேர்க்கைக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தேர்வு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர் பதவிகளில் 30% பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அரசியலமைப்பு நீதிமன்றங்களில் பாலின பிரதிநிதித்துவத்திற்கு அதிகாரப்பூர்வ ஆணை எதுவும் இல்லை. இது மாற வேண்டிய நேரம் இது.


பெரிய நம்பிக்கையையும், உறுதியையும் உருவாக்குவதற்கு ஒரு வழியாக


 நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் இருப்பு மிகவும் முக்கியமானது. பெண் நீதிபதிகள், தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அனுபவங்களின் அடிப்படையில் சட்டத்துடன் தனித்துவமான கண்ணோட்டங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகின்றனர், இது நீதித்தீர்ப்பு முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 


வெவ்வேறு கண்ணோட்டங்களையும் பல்வேறு பகுத்தறிவு முறைகளையும் நீதிமன்றத்தில் கொண்டு வருவது, பல்வேறு சமூக சூழல்களையும் அனுபவங்களையும் ஒருங்கிணைப்பதால், பொதுமக்களின் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது. 


மிக முக்கியமாக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண் நீதிபதிகளின் இருப்பு, அது சேவை செய்ய விரும்பும் அனைத்து குடிமக்களுக்கும் உண்மையான பிரதிநிதித்துவ நீதிமன்றமாக மாற்றும்.


இந்திய உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் போதுமான பெண் நீதிபதிகள் இருந்தால் மட்டுமே பாலின சமத்துவம் பற்றிய அனைத்து விரிவுரைகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.


ஜெய்னா கோத்தாரி, இந்திய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.



Original article:

Share: