இது வெறும் வரி விகிதங்கள் அல்லது வருவாய்கள் பற்றிய சர்ச்சை மட்டுமல்ல. இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் நிதி கூட்டாட்சியைப் பாதுகாப்பது பற்றியது.
2017ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டுறவு கூட்டாட்சியின் வெற்றியாகப் பாராட்டப்பட்டது. மாநிலங்கள் தங்கள் நிதி அதிகாரங்கள் மற்றும் சுதந்திரத்தின் பெரும்பகுதியை விட்டுக்கொடுத்தன.
ஆனால், இழப்பீடு மற்றும் சமமானக் கூட்டாண்மை போன்றவை உறுதி செய்யப்பட்டதால் மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. 2016ஆம் ஆண்டின் 101வது அரசியலமைப்புத் திருத்தம், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இரண்டிற்கும் GST சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை வழங்கியது. நிதி கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய வழியாக இது கருதப்பட்டது.
இருப்பினும், "ஒரே நாடு, ஒரே வரி" (“One Nation, One Tax”) என்ற யோசனை தோல்வியடைந்தது. ஏனெனில், GST ஏழு வெவ்வேறு வரி அடுக்குகளுடன் இருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நம்பிக்கையும் பலவீனமடைந்துள்ளது. ஏனெனில், மத்திய அரசு தனது சொந்த நிதி மற்றும் அரசியல் நலன்களை மாநிலங்களின் நலன்களுக்கு மேலாக வைப்பதாகக் கருதப்படுகிறது. பல மாநிலங்கள் இப்போது தங்கள் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக உணர்கின்றன.
GST அடுக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒன்றியத்தின் சமீபத்திய திட்டம் ஒரு நேர்மறையான படியாகும். இது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய நீண்டகால கோரிக்கையை ஆதரிக்கிறது. இது GSTயை எளிமைப்படுத்தக்கூடும் என்றாலும், இதுபோன்ற மாற்றங்களால் தாங்கள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்புகளை ஈடுகட்ட இழப்பீட்டுக்கான தெளிவான திட்டத்தையும் மாநிலங்கள் விரும்புகின்றன.
மோடி அரசு புறக்கணிக்க முடியாத ஒரு சவாலை எதிர்கொள்கிறது. GST 2.0 அறிமுகப்படுத்தப்பட்டபிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்யும் என்பதை அது விளக்க வேண்டும்.
புதிய GST மாற்றங்கள் வருவாயை சுமார் ரூ.40,000 கோடி குறைக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறுகிறது. ஆனால் மற்ற மதிப்பீடுகள் மிக அதிகமாக உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி ரூ.80,000 கோடி, HSBC ரூ.1.4 லட்சம் கோடி, மற்றும் மாநிலங்களின் இழப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் போகலாம் என்றும் எச்சரிக்கின்றன.
ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் ரூ.1.8 லட்சம் கோடி கூடுதல் வரியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், இதை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள என்ன நீண்டகாலத் திட்டம் உள்ளது என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த கூடுதல் வரிதான் மாநிலங்களுக்கான இழப்பீட்டிற்கான ஒரே உண்மையான உத்தரவாதம்.
அது இல்லாமல், மாநிலங்கள் தங்கள் நிதி சுதந்திரத்தை இழந்து நகராட்சிகளைப் போல ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்க அஞ்சுகின்றன. ஜனநாயகத்திற்கும் நாட்டின் அடிப்படை கட்டமைப்பிற்கும் மாநிலங்களின் நிதி சுதந்திரம் அவசியம்.
மாநில வரிவருவாயில் GST பெரும் பங்கு வகிக்கிறது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சுமார் 0.5% மாநிலங்களை நேரடியாக பாதிக்கிறது. இந்தப் பணம் பொதுவாக மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள், ஹரியானாவில் உள்ள சுகாதார மையங்கள் மற்றும் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. எதிர்கால வளர்ச்சி இந்த இழப்பை ஈடுகட்டும் என்று அரசு சொல்வது, ஆதரவு இல்லாமல் நிதிச் சிக்கலை எதிர்கொள்ளச் சொல்வது போன்றது.
பல்வேறு கூடுதல் வரிகள் மூலம் சேகரிக்கப்படும் பெரிய நிதியை இந்திய அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1.8 லட்சம் கோடி வரை சேர்க்கிறது. ஆடம்பர மற்றும் தீவினைப் பொருட்கள் (sin goods) போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் இந்த கூடுதல் வரிகள், மொத்த GST வசூலில் சுமார் 7–8% ஆகும். அவை மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் வகையில் இருந்தன.
ஆனால் இப்போது, மத்திய அரசு மாநிலங்களுக்குச் செல்லும் பங்கை 88%-லிருந்து 40%-ஆகக் குறைக்க விரும்புகிறது. கூடுதல் வரி பணத்தை மத்திய அரசு தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பிரிக்கக்கூடிய தொகுப்பிற்கு வெளியே வைத்திருப்பதே அதன் திட்டமாக உள்ளது. இது மாநிலங்கள் GST மற்றும் கூடுதல் வரிவருவாய் இரண்டையும் இழக்கச் செய்கிறது. ஒத்துழைப்புக்குப் பதிலாக, இது கூட்டாட்சியின் மீதான நம்பிக்கையை மீறுவதாக உணர்கிறது.
அக்டோபர் 2024-ல், மோடி அரசாங்கம் கூடுதல் வரி வருமானத்தை மாநிலங்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்திருந்தது. இப்போது, அந்த வாக்குறுதி பின்பற்றப்படவில்லை. மேலும், ஒன்றிய அரசு முழு கூடுதல் வரி வருமானத்தையும் தனக்கே வைத்திருக்க விரும்புகிறது.
இந்த மையமயமாக்கல் தொடர்ந்தால், மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து பலவீனமடையக்கூடும். இதன் காரணமாக, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஒன்றிணைந்து மையத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றன.
பிரிவு 246A என்ன சொல்கிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது அத்தகைய ஏற்றத்தாழ்வைத் தடுக்க உருவாக்கப்பட்டது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு GST சட்டங்களை உருவாக்கும் உரிமையை வழங்குகிறது. மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில், IGST மூலம் மட்டுமே, பாராளுமன்றத்திற்கு பிரத்யேக அதிகாரங்கள் உள்ளன.
மோஹித் மினரல்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் (Mohit Minerals vs Union of India case) (2022), உச்சநீதிமன்றமும் இதைத் தெளிவுபடுத்தியது. GST கவுன்சிலின் பரிந்துரைகள் பிணைக்கப்படவில்லை என்றும், மாநிலங்களுக்கு இன்னும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன என்றும் நீதிமன்றம் கூறியது.
கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒத்துழைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும், அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
உலகளாவிய அழுத்தங்களால் நிலைமை மோசமடைந்துள்ளது. அமெரிக்க வரிகள் இந்திய ஏற்றுமதியைப் பாதிக்கின்றன. மேலும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களைக் கொண்ட மாநிலங்கள் அதன் தாக்கத்தை உணர்கின்றன.
மகாராஷ்டிராவின் நெசவுத் தொழில்கள், குஜராத்தின் ரசாயனங்கள் மற்றும் நகைகள், கர்நாடகாவின் ஐடி மற்றும் விண்வெளி, மற்றும் தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் பாகங்கள் அனைத்தும் மெதுவான வளர்ச்சி மற்றும் வேலை இழப்புகளை எதிர்கொள்கின்றன. அத்தகைய நேரத்தில் தங்கள் உள்நாட்டு வருவாயைக் குறைப்பது ஒரு தவறு.
மாநிலங்கள் GST முறைக்கு எதிரானவை அல்ல. அதற்குப் பதிலாக, அவர்கள் நடைமுறை பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்:
1. ஏற்கனவே உள்ள வரிகளுடன் தீவினைப் பொருட்களுக்கு (மது மற்றும் புகையிலை போன்றவை) வரியைச் சேர்க்கவும். இந்தப் பணம் மாநிலங்களுக்குச் செல்லும்.
2. தற்போதைய GST வருவாய் பாதுகாப்பை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
3. 2024–25ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்தவும், கூடுதல் வரி வசூல்களைச் சேர்க்கவும், கடந்தகால GST கவுன்சில் நடைமுறைகளைப் பின்பற்றி, மூன்று ஆண்டு சராசரியாக வருவாயைக் கணக்கிட வேண்டும்.
4. முன்னர் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது போல, பற்றாக்குறையை ஈடுகட்ட எதிர்கால வருவாய்களுக்கு எதிராக கடன் வாங்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும்.
நிச்சயமற்ற காலங்களில் நிதி சரிவிலிருந்து மாநிலங்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.
இது வெறும் வரி அடுக்குகள் அல்லது வருவாய்களைப் பற்றியது மட்டுமல்ல. இது இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தையும் நிதி கூட்டாட்சியையும் பாதுகாப்பது பற்றியது. மாநிலங்களுக்கு போதுமான வருவாய் மறுக்கப்பட்டால், அவை ஒன்றியத்தின் முடிவுகளை முழுமையாகச் சார்ந்து இருக்கக்கூடும். மாநில அதிகாரத்தை இழப்பது, நீண்டகாலத்திற்கு ஒன்றிய அரசை பலவீனப்படுத்தும்.
வரி விகிதங்கள் தீவிரமாக எளிமைப்படுத்தப்படாவிட்டால் மற்றும் வரியானது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாவிட்டால், இந்த மாற்றம் ஒரு சீர்திருத்தமாக கருதப்படாது. மாறாக, அது மாநிலங்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்.
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எழுத்தாளர், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.