இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் வனத்துறை போன்ற வேளாண்மை சாராத முதன்மைத் தொழில்களின் மூலம் தங்களுடைய வருமான ஆதாரங்களை பெருக்கி வருகின்றன. இந்தத் துறைகள் ஊரகப் பகுதிக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கும் பங்களிக்கின்றன. ஆனால், அரசாங்கம் இந்த நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஆதரவு அளிக்கிறது?
இந்தியாவின் முதன்மைத் துறை (primary sector) தொழிலாளர்களுக்கு 44 சதவிகிதம் வேலைவாய்ப்பினை அளிக்கிறது. ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கிறது. முதன்மைத் துறை என்பது நிலம், நீர், காடுகள், சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் பொருளாதாரத் துறையாக வரையறுக்கப்படுகிறது. வேளாண்மை மிக முக்கியமான முதன்மைத் துறைகளில் ஒன்றாகும்.
இருப்பினும், வேலைவாய்ப்பில் வேளாண்மையின் பங்கு மெதுவாகக் குறைந்த வரும் அதே வேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு ஒப்பீட்டளவில் வேகமாகக் குறைந்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றத்தின் மெதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, வேளாண்மை இனி பொருளாதாரத்தின் முதன்மை உந்து சக்தியாக இல்லை. இருப்பினும், இந்தியப் பொருளாதாரம் குறித்த பெரும்பாலான விவாதங்களில் வேளாண்மை அல்லாத முதன்மைத் துறையின் பங்கு வெளிக்காட்டப்படாமல் உள்ளது.
பல்வகைப்படுத்தல் உத்தியாக வேளாண்மை இல்லாத நடவடிக்கைகள்
பொருளாதாரத் துறைகளின் அதிகாரப்பூர்வ வகைப்பாட்டின்படி, பண்ணை அல்லாத அல்லது வேளாண்மை அல்லாத முதன்மைத் துறைகளில் சுரங்கம், குவாரி, மீன்பிடித்தல், வனவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை அடங்கும். தனித்தனியாக ஆய்வு செய்யும் போது ஒவ்வொரு துறையின் பங்கும் தெளிவாகிறது.
உதாரணமாக, மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. அவர்களில் பலர் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதேபோல், 20.5 மில்லியன் மக்கள் கால்நடை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறையின் மொத்த மதிப்பு சேர்க்கையில் (Gross Value Added (GVA)) கால்நடைத் துறையின் பங்கு 2014-15ஆம் ஆண்டுகளில் 24.38 சதவிகிதத்திலிருந்து 2022-23ஆம் ஆண்டுகளில் 30.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், 2022-23 நிலவரப்படி மொத்த மதிப்பு சேர்க்கையில் சுமார் 5.50 சதவிகிதமாக உள்ளது.
வேளாண்மை இல்லாத முதன்மை நடவடிக்கைகள் வேளாண் மற்றும் நிலமற்ற குடும்பங்களுக்கு முக்கியமான வருமான ஆதாரமாக உள்ளன. அதே நேரத்தில், மலிவு விலையில் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவின் ஆதாரத்தை வழங்குவதன் மூலம் இத்துறை உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது.
உதாரணமாக, கால்நடைத் துறை பயிர் சாகுபடியை விட மிகவும் சமத்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பல நிலமற்ற ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம். இவ்வாறு, வேளாண்மை இல்லாத முதன்மை நடவடிக்கைகள் பல்வகைப்படுத்தல் உத்தியாக செயல்படுகின்றன மற்றும் வறுமையைக் குறைக்கும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகின்றன.
பல்துறை நடவடிக்கையை உந்தும் காரணிகள்
சான்றுகள் இந்தியாவின் ஊரக பகுதிகளில் உள்ளகுடும்பங்கள் பெருகிய அளவில் பல்துறை நடவடிக்கைகளில் (pluriactive) ஈடுபட்டு வருவதாகவும், பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, வேளாண்மை இல்லாத சுயத்தொழில், விவசாய மற்றும் வேளாண்மையில் ஈடுபடும் தற்காலிக தொழிலாளர்கள் வேலை மற்றும் இடம்பெயர்வு என பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றன.
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (National Bank for Agriculture and Rural Development (NABARD)) அனைத்து இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்கல் ஆய்வு 2021-22, வேளாண் குடும்பங்களுக்கு பயிர் சாகுபடி முக்கிய வருமான ஆதாரமாக உள்ளதாகவும் அவர்களின் மாதாந்திர வருவாயில் மூன்றில் ஒரு பங்கை பங்களிப்பதாகவும் வெளிப்படுத்தியது.
எனினும், இந்த குடும்பங்கள் அரசு அல்லது தனியார் சேவைகள், கூலி வேலை (வேளாண்மை மற்றும் வேளாண்மை இல்லாத இரண்டும்) மற்றும் பிற தொழில்களிலும் ஈடுபடுகின்றன. கால்நடை வளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்பு மட்டுமே அவர்களின் வருமானத்தில் 12 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.
இந்த வருமான ஆதாரங்களின் பல்வகைப்படுத்தல் அபாயங்களைக் குறைத்தல், பிரச்சனைகளைச் சமாளித்தல் மற்றும் பருவகால காரணிகளை நிவர்த்தி செய்தல் போன்ற பல காரணிகளால் உந்தப்படுகிறது. உதாரணமாக, ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்கள் விவசாயமற்ற பருவத்தில் தங்கள் கால்நடைகள் அல்லது பிற கால்நடைகளை விற்கின்றன அல்லது குறிப்பிட்ட காலம் முடியும் போது நகர்புறங்களுக்கு இடம்பெயர்வதற்கு நிதியளிக்க கால்நடை வருவாயைப் பயன்படுத்துகின்றன என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இவ்வாறு, விவசாயமல்லாத மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் வேளாண்மை இல்லாத பருவத்தில் அல்லது வறட்சி மற்றும் பிற இயற்கை பேரிடர்கள் போன்ற இயற்கையின் மாறுபாடுகளுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஒரு காப்பீட்டு வடிவமாக செயல்படுகின்றன.
தொழில்நுட்பம் மற்றும் நிலத்தோற்றம்
வரலாற்று ரீதியாக, உழவர்கள் வேளாண்மையை இந்த வேளாண்மை இல்லாத முதன்மை நடவடிக்கைகளில் சிலவற்றுடன் பரஸ்பரம் வலுப்படுத்தும் வழிகளில் ஒருங்கிணைக்கின்றனர். பசுமைப் புரட்சி தொழில்நுட்பம் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கலைப் பின்பற்றியதால், வேளாண்மையில் கால்நடைத் தொழிலாளர்களின் பயன்பாடு குறைந்துள்ளது.
இருப்பினும், கால்நடைத் துறையில், குறிப்பாக பசுமைப் புரட்சியில் அதிக பலன் பெற்ற மாநிலங்களில் உற்பத்தித்திறன் அதிகரித்து வருவதாகக் காட்டும் ஆய்வுகள் உள்ளன. அதே நேரத்தில், பசுமைப் புரட்சி மற்றும் வெள்ளைப் புரட்சி இரண்டிலிருந்தும் பயனடைந்த மாநிலங்களில், அதிக பால் உற்பத்தி செய்யும் கால்நடைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.
தொழில்நுட்பத்தைத் தவிர, நிலத்தோற்ற நிலைமைகளும் வேளாண்மை இல்லாத முதன்மை நடவடிக்கைகளை வடிவமைக்கின்றன. உதாரணமாக, நீண்ட கடற்கரைகள் மற்றும் பெரிய நதிகள் உள்ள பகுதிகளில் மீன்வளம் அதிகரிக்கிறது. அதே வேளையில் கனிம வளம் நிறைந்த பகுதிகள் சுரங்க நடவடிக்கைகளுக்கான மையங்களாக செயல்படுகின்றன.
இருப்பினும், சோட்டா நாகபூர் போன்ற கனிம வளம் நிறைந்த பகுதிகளில், சுரங்க நடவடிக்கைகள் பெரும்பாலும் பழங்குடி மக்களின் இடப்பெயர்வுடன் சேர்ந்து பூர்வகுடி நிலங்களைக் கைப்பற்றுவதில் விளைகின்றன. சுரங்க நடவடிக்கைகளின் விரிவாக்கம் நில சீரழிவு, மாசுபாடு மற்றும் விவசாய துன்பத்திற்கு பங்களித்துள்ளது. இவ்வாறு, முதன்மை வேளாண்மை இல்லாத நடவடிக்கைகள் முக்கியமானவை என்றாலும், அவை இந்தியாவின் சூழலியல் மற்றும் சமூக-பொருளாதார முரண்பாடுகளில் ஆழமாகப் பதிந்துள்ளன.
பாலினம் மற்றும் சாதி அடிப்படையிலான பரிமாணங்கள்
அத்தகைய வேளாண்மை இல்லாத முதன்மை நடவடிக்கைகளுக்கான தொழிலாளர்களை யார் பாதுகாக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். உதாரணமாக, கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான வேலைகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், கால்நடைத் துறையின் வளர்ச்சி பெண்களுக்கு அதிகாரமளிப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் பெண்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. அதே நேரத்தில், பல பெண்கள் பெரும்பாலும் அத்தகைய வேலையை ‘ஒன்றுமில்லை’ என்று நிராகரிக்கிறார்கள். இது கால்நடைப் பொருளாதாரத்திற்கான அவர்களின் பங்களிப்பின் குறைவான புகாரளிப்பில் விளைகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், விவசாயமல்லாத முதன்மை நடவடிக்கைகள் சில ஆய்வுகளின்படி தனித்துவமான சாதி அடிப்படையிலான பரிமாணங்களையும் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆதிக்க சாதி குடும்பங்களுக்கு மாறாக, நிலமற்ற குடும்பங்கள் கால்நடை வளர்ப்பை வருமானம் ஈட்டும் ஆதாரமாக கருதுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மீன்வளத்தில், ஓரங்கட்டப்பட்ட சமுதாயங்களின் குறிப்பிடத்தக்க தாக்கம் உள்ளது. இது அவர்களை தனித்துவமான பாதிப்புகள் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளுக்கு வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, சாகுபடி செய்யக்கூடிய நிலத்திற்கான அணுகல் இல்லாத மீன்பிடித் சமுதாயமான அசாமின் கைபர்த்தாக்கள், மீன்பிடியில் இருந்து குறையும் வருமானத்தின் காரணமாக மற்ற வேளாண்மை இல்லாத வேலைகளில் பல்வகைப்படுத்த வேண்டியிருந்தது.
வேளாண்மை இல்லாத முதன்மைத் துறையில் கொள்கை தலையீடுகள்
இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர், இரண்டாவது மிகப்பெரிய முட்டை உற்பத்தியாளர் மற்றும் ஐந்தாவது மிகப்பெரிய இறைச்சி உற்பத்தியாளர் ஆகும். முதன்மை வேளாண்மை இல்லாத துறை, இவ்வாறு, பொருளாதாரத்திற்கும் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்திற்கும் முக்கியமானது. கால்நடை, மீன்வளம் மற்றும் வனத்துறை போன்ற துறைகள் மில்லியன் கணக்கான நிலமற்ற மற்றும் குறு விவசாயிகளைத் தாங்கி, அவர்களுக்கு பண வருமான, வேளாண் அதிர்ச்சிகளுக்கு எதிரான காப்பீடு மற்றும் பரந்த சந்தைகளில் ஒரு இடம் ஆகியவற்றை வழங்குகின்றன.
சமீபத்திய, கொள்கைகள் இந்த முதன்மை வேளாண்மை இல்லாத நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளன. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்படா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY)) இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்படா யோஜனா தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவின் மூலம் மீன் உற்பத்தி மற்றும் மீன்வளத் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்த எண்ணுகிறது. அதேபோல், கால்நடை வளர்ப்பிற்கான காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. உழவர்களுக்கு மாவட்ட அளவில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பிற விழிப்புணர்வு உருவாக்கல் குறித்த பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தகைய கொள்கை தலையீடு விரும்பிய முடிவைத் தரவில்லை என்ற சில நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, பால் உற்பத்தியை அதிகரிக்க பலவிதமான கலப்பின கால்நடைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு 1980ஆம் ஆண்டுகளில் ஒரிசா (இப்போது ஒடிசாவில்) அறிமுகப்படுத்தப்பட்ட சமன்விதா திட்டம், உள்ளூர் காளைகளின் மக்கள்தொகையை அழித்துவிட்டு வெறும் எட்டு கலப்பின பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்தது.
அதேபோல், மேகாலயாவில் முன்மொழியப்பட்ட கில்லெங்-பின்டெங்சோகியோங் (Kylleng-Pyndengsohiong (KPM)) யுரேனியம் சுரங்கத் திட்டம் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அக்கறைகள் காரணமாக உள்ளூர் சமுதாயத்திடமிருந்து கணிசமான எதிர்ப்பைக் கண்டுள்ளது.
இந்த அனுபவங்கள் வேளாண்மை இல்லாத முதன்மைத் துறையில் கொள்கை தலையீடுகள் உற்பத்தித்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள அதே வேளையில், அவை உள்ளூர் சூழலியல், சமுதாய நடைமுறைகள் மற்றும் சமூக சூழல்களைப் புறக்கணித்தால் அபாயங்களையும் சுமப்பதாக வெளிப்படுத்துகின்றன. எனவே, உள்ளூர் அறிவை ஒருங்கிணைத்தல், சுற்றுச்சூழல் வரம்புகளை மதித்தல் மற்றும் இந்தத் துறைகளில் உண்மையான ‘தொழிலாளர்களின்’ (workers) பங்கை அங்கீகரித்தல் ஆகியவை விரும்பிய விளைவுகளைச் செயல்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.