குற்றவியல் வழக்குகளில் DNA மாதிரிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிட்டது? நீதிமன்றம் என்னென்ன குறைபாடுகளைக் கண்டுபிடித்தது? கடந்தகால தீர்ப்புகளில் DNA நம்பகத்தன்மை குறித்து நீதிமன்றம் என்ன கூறியுள்ளது? புதிய வழிகாட்டுதல்கள் எவற்றை கட்டாயமாக்குகின்றன? குற்றவாளி என்று நிரூபிக்க டிஎன்ஏ மட்டும் போதுமா?
கட்டவெள்ளை என்ற தேவகர் எதிர். தமிழ்நாடு அரசு (Kattavellai @ Devakar v. State of Tamil Nadu) வழக்கில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் குற்றவியல் வழக்குகளில் டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் (deoxyribonucleic acid (DNA) மாதிரிகளின் ஒருமைப்பாட்டைப் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அனைத்து மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்களும் பாதுகாப்பு பதிவேட்டுச் சங்கிலி (Chain of Custody Register) மற்றும் அனைத்து அவசியமான ஆவணங்களுக்கான மாதிரி படிவங்களை தயாரித்து, அவற்றை அனைத்து மாவட்டங்களுக்கும் வழிமுறைகளுடன் அனுப்பி வைப்பதை உறுதிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தகைய உத்தரவுகளை வழங்குவதற்கான தேவை என்ன?
மேற்குறிப்பிட்ட வழக்கில், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளையுடன் மரணத்தை ஏற்படுத்த முயற்சி செய்தல் ஆகியவை தொடர்பாக, நீதிமன்றம், யோனி துணியில் (vaginal swabs) எடுக்கப்பட்ட மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்காக மருத்துவ ஆய்வகத்திற்கு (FSL) அனுப்புவதில் குறிப்பிடத்தக்க விளக்கப்படாத தாமதங்களைக் கண்டறிந்தது. மேலும், மாதிரியின் பாதுகாப்பு சங்கிலி (chain of custody) உறுதிப்படுத்தப்படவில்லை. இத்தகைய சூழ்நிலைகளில், மாதிரி மாசுபடுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல்வேறு அமைப்புகளால் சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், அனைத்து விசாரணை அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய சீரான நடைமுறையோ பொதுவான நடைமுறையோ இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் மாநில பட்டியலில் இருந்தாலும், நடைமுறையின் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய இந்த வழிகாட்டுதல்களை வெளியிடுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கருதியது.
வழிகாட்டுதல்கள் என்ன?
DNA சான்றுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் நான்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. முதல் வழிகாட்டுதலின்படி, DNA மாதிரிகள் சேகரிப்பது உரிய கவனத்துடனும் விரைவான மற்றும் தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டபின், முதல் தகவல் அறிக்கை எண் மற்றும் தேதி, சம்பந்தப்பட்ட பிரிவுகள் மற்றும் சட்டங்கள், விசாரணை அதிகாரியின் விவரங்கள், காவல் நிலையம் மற்றும் தேவையான வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். சேகரிப்பைப் பதிவு செய்யும் ஆவணத்தில் அங்கு இருக்கும் மருத்துவ நிபுணரின், விசாரணை அதிகாரி மற்றும் சுதந்திரமான சாட்சிகளின் கையொப்பங்கள் மற்றும் பதவிகள் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, DNA சான்று மாதிரியை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு விசாரணை அதிகாரி பொறுப்பாவார். மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தடய அறிவியல் ஆய்வகத்தை சென்றடைவதை அவர் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் ,தாமதம் ஏற்பட்டால், காரணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் மாதிரிகளைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, விசாரணை அல்லது மேல்முறையீட்டின்போது சேமிக்கப்பட்ட மாதிரிகளை, விசாரணை நீதிமன்றத்தின் தெளிவான அனுமதியின்றி திறக்கவோ, மாற்றவோ அல்லது மீண்டும் சீல் வைக்கவோ முடியாது.
நான்காவது வழிகாட்டுதல், குற்றம் சாட்டப்பட்டவர்மீது தண்டனை பெற்றதாகவோ அல்லது விடுதலை செய்யப்பட்டதாகவோ அறிவிக்கப்படும் தருணத்திலிருந்து, உறுதியான தீர்ப்பு வரும்வரை, ஒரு பாதுகாப்பு சங்கிலிப் பதிவேடு (Chain of Custody Register) பராமரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்தப் பதிவேடு விசாரணை நீதிமன்ற பதிவேட்டில் இணைக்கப்பட வேண்டும். ஏதேனும் விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால், விசாரணை அதிகாரி விளக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் இதுவரை என்ன கூறியுள்ளது?
குற்றங்களைத் தீர்ப்பதில் DNA சுயவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. 2014ஆம் ஆண்டு அனில் vs மகாராஷ்டிரா அரசு வழக்கில், DNA முடிவுகள் நம்பகமானவை என்று குறிப்பிட்டது. ஆனால், ஆய்வக நடைமுறைகள் முறையாக செய்யப்பட்டால் மட்டுமே என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், தேவகர் வழக்கில், மாதிரிகளைக் கையாளுதல் மற்றும் சேமித்தல் போன்ற ஆய்வகத்திற்கு வெளியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் துல்லியமான முடிவுகளைப் சமமாக பெறுவதற்கு முக்கியம் என்று நீதிமன்றம் கூறியது.
மனோஜ் மற்றும் மற்றவர் vs மத்திய பிரதேச மாநிலம் (Manoj and Ors. v. State of Madhya Pradesh (2022)) வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'திறந்த வெளியில் இருந்து' மீட்டெடுக்கப்பட்டது மற்றும் 'அதன் மாசுபாட்டின் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது' என்ற காரணத்தால் DNA அறிக்கையை நிராகரித்தது. மேலும், அந்தப் பொருட்களில் இருந்த இரத்தக் கறைகள் உடைந்து போயிருந்தன என்பதும், வகைப்பாடு சோதனையையும் நடத்துவதற்கு அந்த அளவு போதுமானதாக இல்லை என்ற சூழல் காணப்பட்டது.
மற்றொரு வழக்கான ராகுல் vs டெல்லி மாநிலம், உள்துறை அமைச்சகம் (Rahul v. State of Delhi, Ministry of Home Affairs (2022)) வழக்கில், DNA சான்று காவல்துறை பொருள் பாதுகாப்பு அறையில் (police Malkhana) இரண்டு மாதங்கள் இருந்ததால் மற்றும் அத்தகைய நேரத்தில் சாத்தியமான தவறான கையாளுதலின் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது' என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டது. மாதிரிகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு சோதனைக்கு முன் சீல் வைக்கப்பட்டன என்பது குறித்து சந்தேகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. DNA அறிக்கைகளில் உள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையையோ அல்லது சம்பந்தப்பட்ட நிபுணரால் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் நம்பகமான முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்பதையோ விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஆராயவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
எனவே, விசாரணை முகமை மாதிரிகள் மாசுபாட்டின் சாத்தியக்கூறுகள் இல்லாமல் சரியாக சேகரிக்கப்படுவதையும், (விளக்கமற்ற) தாமதம் இல்லாமல் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (Forensic Science Laboratory (FSL)) அனுப்பப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் என்பதுடன், நிபுணர் தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் சரியான தரக் கட்டுப்பாடு மற்றும் நடைமுறையையும் உறுதி செய்ய வேண்டும்.
குற்றவியல் வழக்குகளில் DNA சான்று எவ்வளவு முக்கியமானது?
DNA என்பது அனைத்து உயிரினங்களிலும் மரபணு தகவல்களை குறியீடு செய்யும் ஒரு மூலக்கூறு ஆகும். இது எலும்பு, இரத்தம், விந்து, உமிழ்நீர், முடி அல்லது தோல் போன்ற உயிரியல் பொருட்களிலிருந்து பெறப்படலாம். பொதுவாக, குற்ற நிகழ்வு இடத்தில் காணப்பட்ட மாதிரியின் DNA விவரக்குறிப்பு சந்தேகப்படும் நபரின் DNA விவரக்குறிப்புடன் பொருந்தும்போது, இரண்டு மாதிரிகளும் ஒரே உயிரியல் மூலத்தைக் கொண்டுள்ளன என்று முடிவு செய்யமுடியும். எனினும், இது குற்றவியல் வழக்குகளில் அடிப்படை சான்று அல்ல.
தேவகர் வழக்கில் உச்ச நீதிமன்றம், DNA சான்று என்பது சாட்சிய சட்டத்தின் (Evidence Act) பிரிவு 45 (இப்போது பாரதிய சாக்ஷய ஆதினியம், 2023ஆம் ஆண்டின் பிரிவு 39)-ன் கீழ் கருதப்படும் கருத்து சான்றின் (opinion evidence) தன்மையைக் கொண்டுள்ளது என்றும் மற்ற கருத்து சான்றுகளைப் போலவே, அதன் நிரூபண மதிப்பு வழக்கிற்கு வழக்கு மாறுபடும் என்றும் கூறியது. எனவே, DNA சான்று அறிவியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நிரூபிக்கப்பட வேண்டும்.
R.K. விஜ் முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரி